May 21, 2016

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அறிவுரையை கேட்காததால் ராஜீவ் காந்திக்கு வந்த ஆபத்து??

அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி தீராத அவப்பெயரை தேடிக் கொண்டார்.


ராஜீவ் காந்தி நினைவு தின சிறப்பு பகிர்வு இந்த நாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.

ராஜீவ் காந்தி என்கிற வித்தியாசமான பாரத அரசியல்வாதி நினைவு தினம் இன்று. அரசியல் சதுரங்கத்தில் எந்த காய் வேண்டுமானாலும் எதையும் வெட்டலாம் என்பதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு ராஜீவ்.

அடிப்படையில் வெளிநாட்டில் கல்வி பயின்று அங்கேயே சோனியாவுடன் காதல் பூண்ட இந்த கோமான் வீட்டு குமரன் சஞ்சயின் மரணத்திற்கு பின் ஏற்பட்ட வெற்று இடத்தை நிரப்பவும் , இந்திராவின் மரணத்தின் பொழுது தள்ளாடிய காங்கிரசை முட்டுக்கொடுத்து நிறுத்த வந்தவர் தான் இவர்.

இந்திரா இறந்த பொழுது நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை பெருமரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் என்று சாவகசமாக சொன்னார். இந்திரா மரணம் தந்த அனுதாப அலையில் நேருவால் கூட பெறமுடியாத வெற்றியை பெற்றார்.

பெரிய நிர்வாக அறிவில்லாத இவர் ,ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியுறவு செயலாளர் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது அங்கேயே அவர் நீக்கப்படுவதாக அறிவிக்க அந்த செயலாளர் (தமிழர் )பைத்தியம் என்று விட்டார்.

புதுரத்தம் பாய்ச்சுகிறேன் என கிளம்பிய இவர் வி.பி.சிங்கை தன்னுடைய அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார். மீது ஊழல் பூதத்தை கிளப்பினார் வி.பி.சிங்.முதலில் நிதி அமைச்சராக இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கிறார் என ராணுவ துறைக்கு மாற்றப்பட்ட வி.பி.சிங் இவருக்கே செக் வைத்தார் .

போபர்ஸ் ஊழல் வெளிவந்ததும் மக்கள் அதிர்ந்தார்கள். பல மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அறிவுரையை கேட்காமல் இந்தியா அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி தீராத அவப்பெயரை தேடிக்கொண்டார்.

இந்தியாவின் வியட்நாம் இலங்கை என்று வர்ணிக்கிற அளவுக்கு அநியாயங்கள்,உயிரழப்புகள் எழுந்தன.

அதன் விளைவு மனித வெடிகுண்டின் வெடிப்பில் சிதறுண்டு போனார் என்பது சோகமான ரத்தம் தோய்ந்த முடிவு .

ராஜீவ் பஞ்சாயத் ராஜ் என்கிற கனவை முழு மூச்சாக முன்னெடுப்பு எடுத்தார். தொழில்நுட்ப துறை பெரிய அளவில் நகர்வதற்கான ஆரம்ப அச்சாரங்கள் அவர் காலத்தில் போடப்பட்டவையே. லைசன்ஸ் ராஜ்யத்தை மட்டுப் படுத்துகிற பணிகள் அவர் காலத்தில் தான் தொடங்கின. தொலைதொடர்பு துறை கிராமங்களுக்கு போய் சேரும் அற்புதத்தை செய்த பி சி ஓ அவர் காலத்தில் அறிமுகமானதே.

ஷாபானு வழக்கில் முஸ்லிம்களிடம் நல்லபெயர் வாங்குகிறேன் பேர்வழி என இவர் கொண்டு வந்த சட்டத்தால் மதவாத சக்திகளும் பீறிட்டு கிளம்பியது வலிமிகுந்த வரலாறு. இந்து மதவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது அதை முடுக்கி விடும் வகையில் அயோத்தி சிக்கலை மீண்டும் கிளறி விட்டார் இவர்.

அப்படியே நூல் பிடித்துக்கொண்டு நாட்டையே ரத்த பூமியாக்கியது ஹிந்து மதவாதம். ராஜீவ் விமர்சனத்துக்குரிய நிகழ்கால பிம்பம் - இளமை மட்டும் போதாது , அரசியலில் கொஞ்சமாவது பாடம் பயின்று இருக்க வேண்டும் , பெரியவர்களின் சொல்லையும் மதிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் ராஜீவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment