September 15, 2015

சிறிய நாடான இலங்கையில் உள்ளக விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு! சுரேஸ் பிரேமச்சந்திரன்!

இன்று வட பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள். இதனைப் பற்றி எதனையும் ஜ.நா சபையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கூறாது வெறுமனே உண்மைக்குப்
புறம்பான நிகழ்வுகளைக் கூறியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஐ.நா. சபையில் இலங்கையின் வெளிவிவகார  அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை சம்பந்தமாக இன்று மதியம் நீர்வேலியில் அவருடை அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மத்தியிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
சிறிய நாடான இலங்கையில் பெரியளவிலான இராணுவப் படையணி ஒன்று காணப்படுகின்றது. சண்டை முடிவடைந்து ஆற வருடங்களாகின்ற போதிலும் இராணுவத்தைப் பலப்படுத்துவது நவீன மயப்படுத்துவது சம்பந்தமாகவே இன்றைய ஜனாதிபதியும் பிரதி பாதுகாப்பு அமைச்சரும் கூட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் ஐநா சபையில் மங்கள சமரவீர கூறியது போன்று எதுவும் இங்கு நடை பெறப்போவதும் இல்லை. நடை பெற சிங்கள கடும் கோட்பாட்டாளர்கள் இன்று ஆளும் கட்சியாக
இருந்து கொண்டு எதிர் கட்சியில் இருப்பவர்கள் எனப் பலரும் வெளிவிவகார அமைச்சர் கூறியது போன்று எதனையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்கப் போவதில்லை.
தற்போது கூட வெளிவிவகார அமைச்சர் நல்லெண்ண நடவடிக்கையாக எதிர் கட்சித் தலைவர் மற்றும் பிரதம நீதியரசர் பதவிகள் கூட வழங்கப்பட்டுள்ளதாக ஐநாவில் தெரிவித்துள்ளார். இவைகள் கூட தமிழர்களுக்கான விட்டுக்கொடுப்பாக நல்லெண்ணத்திற்கு உரியவைகள் அல்ல.
இலங்கையின் இரு பெரும்பான்மைக் கட்சிகளும் ஒன்றினைந்து அரசாங்கத்தை அமைத்துள்ளன.  இந் நிலையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்
கட்சிப் பதவி என்பது ஐனநாயக ரீதியாக கிடைக்க வேண்டியது கிடைத்துள்ளது.
இதில் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் மற்றும் நல்லெண்ணத்திற்கும் இடம் இல்லை. இன்று காணப்படுகின்ற பிரதம நீதியரசர் கூட சேவை மூப்பு அடிப்படையிலும் மற்றும்
அனுபவத்திலும் மூத்தவராக காணப்படுகின்றார். அதன் வழியாக அவருக்கு உரிய பதவி கிடைத்துள்ளதே அன்றி மாற்றுக் கருத்துக்கு இதிலும் கூட இடமில்லை.
இதனைவிடுத்து உண்மைக்கு மாறாக மங்கள சமரவீர ஜநா. வில் இவைகள் எல்லாம் தாம் ஏற்கனவே நல்லெண்ண அடிப்படையில் விட்டுக் கொடுப்பு அடிப்படையில் செய்துள்ளதாக
தெரிவித்துள்ளமையில் எந்த வகையான உண்மையும் இல்லை.
உள்ளக விசாரணையென்று ஒன்று வருமாக இருந்தால் எதுவும் நடக்கப் போவதில்லை. உள்ளக விசாரணைக் குழுவுக்கு தமிழர்களாக இருக்கட்டும் சிங்களவர்களாக இருக்கட்டும்
முஸ்லிம்களாக இருக்கும் நீதிபதிகளாக இருந்தாலும் கூட உண்மைகள் எதனையும் அவர்கள் வெளிப்படுத்தப் போவதும் இல்லை,  கண்டறியப் போவதும் இல்லை.
உள்ளக விசாரனையென்பது கிடப்பில் போடப்படுவதாகவே காணப்படும். இந்த வகையில் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடயத்தில் அரசினால் காலத்திற்குக் காலம் நியமிக்கப்பட்ட பல ஆணைக் குழுக்களின் நிலமையும் கூட இதுவாகும்.
இதனால் தான் உலக நாடுகளுக்கு மங்கள சமரவீர குறிப்படுகின்றார், கடந்த காலங்களில் நடந்தவைகளை மட்டும் தொடர்ந்து கூறாத தமது புதிய அணுகு முறையை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்து பழையவற்றை மறைக்க, மறக்க வேண்டுகின்றார்.
இறுதியாக நல்லிணக்க ஆணைக்குழ, காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் தற்போதைய நிலமை சம்பந்தமான ஆணைக்குழு என்று நியமிக்கப்பட்டவைகள் எல்லாம் வெறும் கண்துடைப்பாகவே காணப்பட்டுள்ளன.
இந்த வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவினால் 224 பரிந்துரைகள் அரசாங்கத்திற்கு செய்யப்பட்டன. இதில் ஒன்று கூட இதுவரை செய்யப்படவும் இல்லை நடைமுறைப்படுத்தப்படவும்
இல்லை.
இதேபோன்று காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு நியமனம் செய்யப்பட்டு இதுவரையில் ஒருவரையேனும் கண்டறிந்துள்ளதா இல்லை நடந்தவைகளை என்னவென்று தான் அறிந்துள்ளதா? எதுவும் நடைபெறவில்லை.
உலக நாடுகள் கூட உண்மைகளை புரிந்து கொண்டு உள்ளக விசாரணையென்று கூறுகின்றமையையிட்டு சிந்திக்க வேண்டும். மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
வெளிவிவகார அமைச்சர் நேற்றைய ஐநா உரையில் எல்லாவற்றையும் கூறிவிட்டு இறுதியில் தான் கூறியவைகளை நடைமுறைப்படுத்த பணம் வேண்டும் என்றே கூறியுள்ளார். இவைகள் எல்லாம் உண்மையானவைகளை நடைமுறைப்படுத்த கூறியவைகள் அல்ல உலக நாடுகளிடம் இருந்து பணம் பெறும் நோக்கில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களேயாகும்.
இன்று லட்சக் கணக்கான தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையொப்பங்களையிட்டு வருகின்றார்கள். இந் நிலையில் உள்ளக விசாரணையென்பது வெறும்
கண்துடைப்பாகவே காணப்படும் என்பதே உண்மையாகும் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment