August 28, 2015

சர்வதேச விசாரணை வலியுறுத்தும் போராட்டத்தில் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்! சிவாஜிலிங்கம்!

உள்நாட்டு விசாரணையினை நிராகரிப்பதுடன், சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுக்க ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர்
கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் கொழும்பிற்கு வருகை தந்து வெளியிட்ட தகவல்கள் கவலை அடையச் செய்கின்றன.ஐ.நா விசாரணை உள்ளக விசாரணையாக நடைபெறவுள்ளதாக அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
எனவே, ஈழத்தமிழர்கள் மற்றும் சர்வதேச புலம்பெயர் தமிழர்கள் உரத்த குரலில், சர்வதேச நீதி விசாரணை வேண்டுமென்று அழுத்தம் திருத்தமாக குரல் கொடுத்தால், நிஷா பிஸ்வால் இலங்கையை பாராட்டியது போன்று, சர்வதேச விசாரணையினையும் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க முடியும்.
எனவே, தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்கள், புலம்பெயர் தமிழ் மக்கள், மாணவர்கள், அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் சர்வதேச விசாரணை வேண்டுமென்று உரத்த குரலில் போராட்டங்களை முன்னெடுக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் கே.சிவாஜிலிங்கம்.
அவ்வாறு குரல் கொடுப்பதன் மூலம் சர்வதேச விசாரணையில் வெற்றி பெறமுடியும்.அதேவேளை, இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு, ஈழத்து தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச புலம்பெயர் தமிழ் மக்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
உள்நாட்டு விசாரணையினை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம்.உள்ளக விசாரணை தேவையில்லை. எமக்கு தேவை சர்வதேச விசாரணை.எனவே, அனைவரையும் சர்வதேச விசாரணையினை வலியுறுத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment