August 23, 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தில் பெண் ஒருவரை உள்வாங்க வேண்டும் – யாழ் பெண்கள் சமாசம்.!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தில் பெண் ஒருவரை உள்வாங்க வேண்டும் என்று யாழ் மாவட்ட பெண்கள்
சமாசம் மற்றும் யாழ் மாவட்ட அமரா பெண் தலைமைத்துவ குடும்பங்களின் ஒன்றியம் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளது.இக் கோரிக்கை கடிதத்தினை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.
அக் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.
இக் கடிதத்தில் கையொப்பமிட்டிருக்கும் நாம் ஆகஸ்ட் மாதம் 17 ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
கடந்த பாராளுமன்றத்தில் 13 பெண் பிரதிநிதிகளாக இருந்து தற்போது அது 11 பிரதிநிதிகளாக குறைந்துள்ளதையிட்டு நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இந்த நிலைக்கு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களும் காரணமாக இருக்கலாம் என நாம் எண்ணுகின்றோம். எனவே தங்களுடைய அதிகாரத்தினைப் பயன்படுத்தி பாராளுமன்ற தேசியப்பட்டியலில் பெண் பிரதிநிதி ஒருவரை உள்வாங்க வேண்டுமென நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
சமுதாய நீதிக்கும் தேசிய அபிவிருத்திக்கும் பங்களித்தமைக்கான சான்று உள்ள பெண்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு நாம் வலியுறுத்துகின்றோம். இவ்வாறு தெரியப்பட இருப்பவர் மகளீர் அமைப்புடனும் எமது பெண்களுடனும் களத்தில் நின்று பணியாற்ற கூடியவர்களாகவும், அவர்களது பிரச்சனைகளை யதார்த்த பூர்வமாகவும் அனுபவ ரீதியில் அறிந்தவராக இருப்பதனுடன் கடந்த காலத்தில் சமூக அரசியலில் பங்களிப்பு செய்த அனுபவம் கொண்டவராவும் எதிர்கால செயற்பாட்டுக்கு வலுவூட்டுபவராகவும் இருக்க வேண்டும். பெண்களின் அரசியல் தலைமைத்துவத்தினை வெளிப்படுத்திய பெண்ணை தங்களது தேசிய பட்டியலில் பிரதிநிதியாக நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திருமதி நெல்சன் மதினி என்பவர் 2006ம் ஆண்டு இராணுவ அச்சுறுத்தல் காரணமாக வன்னிக்கு சென்று பல சிரமங்கள், வலிகளின் மத்தியில் ஆரம்ப கால வாழ்விலேயே எந்த வித அரசியல் பலனையும் எதிர்பாராது சமூக சேவையில் அடிமட்ட மக்கள் மத்தியில் சேவையாற்றிய பெருமைக்குரியவர். குறிப்பாக உலக தரிசன நிறுவனத்துடன் இணைந்து பல சேவைகளை மேற்கொண்டுள்ளார். இவர் பருத்தித்துறை நகரசபை உறுப்பினராகவும் கடமையாற்றியதுடன், பக்கச்சார்பற்றும் பல விதமான ஆலோசனைகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலை வழங்குவதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கு ஒரு பாராளுமன்ற பெண் பிரதிநிதியை வழங்குவதுடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினரை கொண்ட கட்சியாகவும் எமது கட்சிக்கு பெயரும் அந்தஸ்தும் உயரும். எனவே எமது கோரிக்கையை நிறைவேற்றுமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment