August 24, 2015

யாரைக் காப்பாற்றுவார் ரணில்! – புகழேந்தி தங்கராஜ்!

இலங்கைப் பிரதமராக மீண்டும் ரணில் தான் பதவியேற்கப் போகிறார் – என்பது உறுதியான பிறகுதான் சென்ற இதழ் கட்டுரையை எழுதினேன். ரணிலும் நாடகமாடக் கூடாது – என்பதை காரணகாரியங்களுடன்தான்
வலியுறுத்தினேன். அதைப் புரிந்துகொள்ளாமலோ என்னவோ, ‘அப்படியென்றால் யாரைத்தான் நம்பச் சொல்கிறீர்கள்’ என்று கேட்கிறார் ஒரு நண்பர்.
சென்ற இதழில் குறிப்பிட்டிருந்த பிரகீத் விவகாரத்தை மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது, அந்த நண்பருக்கு! பத்திரிகையாளரும் கேலிச்சித்திரக்காரருமான பிரகீத் தமிழரில்லை, சிங்களவர். அவர் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு காலமாக பிரகீத் காணாமல் போனதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை – என்றே இலங்கை ராணுவம் மறுத்துவந்தது. இப்போதுதான், முதல் முறையாக, பிரகீத்தைக் கடத்தியது ராணுவம்தான் என்கிற உண்மை அம்பலமாகியிருக்கிறது.
மைத்திரிபாலாவும் ரணிலும் ‘நல்லாட்சி’ என்றுதான் தங்கள் ஆட்சியைக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் கூறுகிற இந்த நல்லாட்சி, பிரகீத் தொடர்பான உண்மையை மூடிமறைக்க முயற்சிப்பது ஏன் – என்பதுதான் எனது கேள்வி. ராணுவ மிரட்டலுக்கு அஞ்சி விசாரணையை நிறுத்தி வைக்கிறார்களென்றால் பிறகெப்படி அது நல்லாட்சி – என்பது எனது கூடுதல் கேள்வி.
சந்தேகத்தின் பேரில் கைது செய்வது, நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது, காவலில் எடுத்து விசாரிப்பது – என்பது எல்லா நாடுகளிலும் இருக்கும் சட்டப்பூர்வமான நடைமுறை. அரசியல் சட்டங்களுக்கு உட்பட்டே இயங்குவதாகச் சொல்லிக்கொள்கிற ஒரு ஜனநாயக நாட்டில், அரசு இயந்திரம் என்பது இப்படித்தான் செயல்பட முடியும்.
சட்டவிரோதமாகக் கடத்திச் செல்வது, யாருக்கும் தெரியாத இடத்தில் வைத்து அடித்து உதைத்து விசாரிப்பது, தங்களுக்குத் தேவையான தகவல்களைத் தர மறுப்பவரைப் போட்டுத்தள்ளுவது, அவரது உடலை தடயமேயில்லாமல் மறைத்துவிடுவது – என்பதெல்லாம் ரவுடி கோஷ்டிகளும் மாஃபியாக்களும் செய்கிற வேலை. இதைத்தான் இலங்கை ராணுவம் செய்திருக்கிறது என்றால், ரவுடிகளுக்கும் ராணுவத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இதை உணர்த்தத்தான் பிரகீத் விவகாரத்தைச் சுட்டிக் காட்டினேன்.
ஒரு நாட்டின் ராணுவம் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்படும்…
அந்த ராணுவத்தில் சட்டவிரோத ஆள்கடத்தலுக்கென்றே தனிப் பிரிவு இருக்கும்….
உயர் அதிகாரிகள் பலர் அந்தப் பிரிவில் இருப்பார்கள்…
நியாயம் கேட்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நசுக்கிவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள்….
அதைப் பற்றிக் கேள்வி கேட்கிற உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்குக் கிடையவே கிடையாது…..
அதுபற்றிக் கேட்டால், ‘கிளர்ச்சி வெடிக்கும்’ என்று ராணுவ அதிகாரிகள் மிரட்டுவார்கள்…..
இப்படி நாண்டுகொண்டு சாகிற நிலையில்தான் இருக்கிறது, இலங்கையின் ஜனநாயகம். இந்த உண்மையை மூடிமறைக்கத்தான், ‘நல்லாட்சி’ என்று பிதற்றுகிறது இலங்கை…. இதைச் சொன்னதில் என்ன பிழையிருக்கிறது? இந்த அளவுக்குப் பல்பிடுங்கப்பட்ட அதிபர் அல்லது பிரதமர் நாற்காலிகளிலா கூச்சநாச்சமின்றி அமர்ந்திருக்கிறார்கள் மைத்திரியும் ரணிலும் – பிரகீத் செய்தியின் வாயிலாக நான் எழுப்பியிருந்த மறைமுகக் கேள்வி இது!
பிரகீத் உயிருடன் இருக்கிறாரா இல்லையா – என்பதையே பல ஆண்டுகளாக அறிந்துகொள்ள முடியாத நிலையில், அவரது மனைவி எப்படியொரு மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பார் என்பதை, சிங்கள இனம் உணர்கிறதோ இல்லையோ, எம்மால் முழுமையாக உணர முடிகிறது. ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எங்கள் தோழன் சசீதரன் என்கிற எழிலனின் இருப்பு குறித்த தவிப்பைத் தனக்குள் மறைத்தபடி, காணாமல் போன பல்லாயிரம் பேருக்காக நீதி கேட்கிற எங்கள் சகோதரி அனந்தி சசீதரனின் சாதியில் – அடுத்தவரின் துயரைத் தன் துயராகக் கருதும் தமிழ்ச் சாதியில் – பிறந்தவர்கள் நாங்கள்.
இந்த மனித நேயப் பண்பு, தமிழினத்துக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. லசந்த விக்கிரமதுங்க என்கிற பத்திரிகையாளன் கொழும்பின் நடுவீதியில் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் நமக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்குக் காரணமாக இருந்தது இந்த அடிப்படைப் பண்புதான்!
அக்பர் ரோடு அன்னையின் ஆசிகளோடு ஈழத்தில் நடந்துகொண்டிருந்த இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னைத்தானே அக்கினிக்கு இரையாக்கிக் கொண்ட வீரத்தமிழ்மகன் முத்துக்குமார், தனது மரண சாசனத்தில் லசந்தவுக்கும் சேர்த்தே நியாயம் கேட்டிருந்தான். ‘பத்திரிகையாளர் லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்’ என்பது தம்பி முத்துக்குமாரின் பதினான்கு கோரிக்கைகளில் ஒன்று.
ராஜபக்ச கும்பலின் கொலைவெறிக்கு இரையான ஒரு சிங்களப் பத்திரிகையாளனுக்கு தமிழ்நாட்டிலிருந்து நியாயம் கேட்டவன், தமிழ்ப் பத்திரிகையாளனான முத்துக்குமார். எந்த இனம் என்று பார்க்கவில்லை இந்த இனம். கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளுக்கு நீதி கேட்கும்போது, லசந்தவுக்கும் பிரகீத்துக்கும் சேர்த்தே நியாயம் கேட்டது, கேட்கிறது. ரணிலுக்குப் பரிந்து பேசுபவர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். முத்துக்குமார் கோரியதைப் போல், லசந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விட்டார்களா? அவர்கள் யாரென்றாவது அடையாளம் காணப்பட்டு விட்டதா?
லசந்தவைச் சுட்டுக் கொன்றது கோதபாயவின் கூலிப்படை என்பது உலகறிந்த ரகசியம். அதை மூடிமறைக்க ராஜபக்சே அரசு வெளிப்படையாகவே முயன்றது. ‘மகிந்த! லசந்தவைக் கொன்றவர்கள் மீது சட்டம் பாயும் – என்று நீ வழக்கம்போல அறிவிப்பாய்! உண்மையில், கொலையாளிகளைக் காப்பாற்றுவதற்குத்தான் உனக்கு நேரமிருக்கும்’ என்று தனது மரணசாசனத்தில் லசந்த எழுதியிருந்தது அப்படியே நடந்தது. ஒரு பிரபல பத்திரிகையாளனான, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற எழுத்தாளனான லசந்த கொலை வழக்கு முழுமையாக முடக்கப்பட்டது.
நல்லாட்சி நாயகர்களான மைத்திரியும் ரணிலுமாவது லசந்தவுக்கு நீதி கிடைக்க முயன்றிருக்க வேண்டும். ஆனால், ஒரு துரும்பைக்கூட அவர்கள் தூக்கிவைக்கவில்லை. இதையெல்லாம், ஒருவார்த்தை கண்டிக்கக் கூட முன்வரவில்லை அமெரிக்காவும் இந்தியாவும் சர்வதேசமும்! குற்றவாளியைக் கூண்டில் நிறுத்து – என்று யாரும் வற்புறுத்தவுமில்லை. அதே நிலைதான், பிரகீத் விஷயத்திலும்! லசந்த, பிரகீத்தில் தொடங்கி ஒன்றரை லட்சம் தமிழர்கள் வரை எவருக்கும் நீதி கிடைத்துவிடக் கூடாது என்பதில் இலங்கை உறுதியோடு இருக்கிறது.
ராணுவம் மிரட்டியவுடன் பிரகீத் மர்மம் தொடர்பான விசாரணையையே நட்டாற்றில் நிறுத்திவிடுபவர்களுக்கு ‘நல்லாட்சி’ என்று வாய்ப்பந்தல் போட என்ன அருகதை இருக்கிறது? பிரகீத் மர்மம் என்பது ஒரே ஒரு மனிதர் காணாமல் போனது தொடர்பிலான மர்மம். இதில் சம்பந்தப் பட்டிருப்பவர்கள் ஒரு சில ராணுவ அதிகாரிகள். அவர்களை விசாரிக்கவே அஞ்சுகிற ஓர் அரசு, ஒன்றரை லட்சம் தமிழர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட ஓர் இனப்படுகொலையில் தொடர்புடைய பல்லாயிரம் ராணுவ அதிகாரிகளை விசாரிக்க எப்படித் துணியும்?
“தங்கள் தாயகத்தின் புதல்வராக புதல்வியாக இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் திகழ வேண்டும்…….
ஒரு புதிய இலங்கையை உருவாக்க அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்…….”
லசந்தவையும் பிரகீத்தையும் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழரையும் அடியோடு மறந்துவிட்டு, தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இப்படியெல்லாம் அறைகூவல் விடுத்திருக்கிறார் ரணில் விக்கிரமதுங்க. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், யதார்த்தம் இதற்கு முரணாக இருப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
ராஜபக்சேவின் ராணுவத்தால் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டவர்கள், ரணில் குறிப்பிடும் அதே தாயகத்தின் ஒன்றரை லட்சம் புதல்வர்களும் புதல்விகளும் தான்! சகோதரத்துவம் – பற்றியெல்லாம் கவலையேபடாத சிங்கள ராணுவ மிருகங்கள், அப்பாவிச் சிறுமிகளைக் கூட விட்டுவைக்கவில்லை. அதை மூடிமறைக்க முயற்சிப்பவர்களுக்கு, புதல்வர் புதல்வி என்றோ சகோதர சகோதரிகள் என்றோ பேசுவதற்கான தகுதி எப்படி இருக்க முடியும்?
‘நாங்கள்தான் மகிந்தனை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியிருக்கிறோம்’ என்று மைத்திரி-ரணில் தரப்பு போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து ஒரு மண்டலம் தானே ஆகிறது… அதற்குள்ளாகவா அதை மறந்து விட்டார்கள்!
‘அபிவிருத்தி…. தேச ஒற்றுமை’ என்கிற மகிந்த ராஜபக்சவின் முழக்கத்துக்கும் ரணில்-மைத்திரியின் நல்லாட்சி முழக்கத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மீது நீதியின் நிழல்கூட பட்டுவிடக் கூடாது என்பதில் இரண்டு தரப்புமே ஒன்றுபட்டு நிற்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிற நிலையில் வேறென்ன சொல்வது!
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அத்தனை சிங்கள ஆட்சியாளர்களும் தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்கள்தான் – என்கிற முதல்வர் விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டுடன், ‘தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றுவதில் சிங்கள அரசியல்வாதிகள் கட்சி வித்தியாசம் பாராமல் கைகோர்த்துக் கொள்கின்றனர்’ என்பதையும் சேர்த்துக் கொண்டாக வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு இடையிலான ஜென்மப் பகையையும் மீறி அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் காலாகாலமாக நீடிக்கிறதென்றால், ‘தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் கூடாது’ என்பதுதான் அது!
தானும் மைத்திரியும் மயிரிழையில் பெற்ற தேர்தல் வெற்றிக்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் தான் காரணம் என்பது ரணிலுக்கு நன்றாகத் தெரியும். அது தெரிந்தும், அவர்களுக்காக அவர் ஒரு துரும்பைக் கூட தூக்கிவைக்கப் போவதில்லை. ‘புதிய நாட்டை உருவாக்குவோம்’ என்கிற அவரது கோஷத்திலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது.
தமிழ் மக்களின் இயல்பான மனநிலையை, ஆட்சிக்கு வருகிற சிங்களத் தலைவர்கள் எவரும் உணர்வதேயில்லை. புதிய நாட்டை உருவாக்குவதைக் காட்டிலும், தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கையை உருவாக்குவது தான் முக்கியம் என்கிற யதார்த்தத்தை ரணிலும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை விடுதலை பெற்றபிறகு, அளவுக்கதிகமான பௌத்த சிங்கள இனவெறிதான், தமிழர்களின் நம்பிக்கையை அடியோடு தகர்த்திருக்கிறது. அந்த நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதுதான் அது. அதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல், ‘இனிமேல் அப்படியெல்லாம் நடக்காது’ என்று வெற்று வாக்குறுதிகளை வழங்குவது அர்த்தமற்றது.
தமிழர்களைக் கொன்று குவித்தவர்கள் –
தமிழ்ச் சகோதரிகளைச் சீரழித்தவர்கள் –
தமிழரின் உடைமைகளை அபகரித்தவர்கள் –
தமிழரின் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் –
என்று ஒருவர் விடாமல் அத்தனைப் பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, அத்தனைக் குற்றவாளிகளும் கூண்டில் நிறுத்தப்பட்டால் மட்டுமே, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே – தமிழருக்கு மீண்டும் நம்பிக்கை பிறக்கக் கூடும். தங்களுக்கு நியாயம் கிடைக்க சிங்கள அரசு உண்மையிலேயே முயற்சி செய்கிறது – என்கிற நம்பிக்கை, இவ்வளவு நாளாக நீடித்த அவநம்பிக்கையைத் தகர்த்துவிடக் கூடும்.
அப்படியொரு நம்பிக்கையை உருவாக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், புதிய நாட்டை மட்டும் உருவாக்க ரணில் முயற்சிப்பது, நடைமுறை சாத்தியமில்லாதது. புதிய இலங்கை என்பது பழைய மிருகங்களையும் உள்ளடக்கிய நாடா இல்லையா என்பதை ரணிலோ அவருக்கு பங்கா போடும் பங்காளிகளோ விளக்கியாக வேண்டும்.
இலங்கை சுதந்திரமடைந்தபோது, தமிழர்களின் உணர்வுகளை மதிக்கவே மதிக்காமல், கண்டி சிங்கள மன்னனின் சிங்கக் கொடிதான் இலங்கையின் கொடியாக இருக்கவேண்டும் – என்று சேனநாயக பிடிவாதமாக இருந்ததும், அந்தக் கொடி விஷயத்தில் ஜயவர்தனா அடம்பிடித்ததும் தான் தமிழர்களின் நம்பிக்கையிழப்புக்கு அஸ்திவாரமாக இருந்தது.
தமிழர்களைக் கொன்றுகுவித்த குற்றவாளிகளைக் காப்பாற்றுவது – என்பது சிங்கள அரசின் கொள்கையாகவே மாறிவிட்ட நிலையில், அந்த நம்பிக்கையிழப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துவிட்டது. இதை ரணில் புரிந்துகொள்ள வேண்டும். ரணிலுக்குத் துணை நிற்கும் தமிழ்த் தலைவர்கள், குற்றவாளிகளைக் காப்பாற்ற ரணில் முயற்சிக்கக் கூடாது என்பதை அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ‘உங்களுக்கு இனிமேல் எந்தப் பாதிப்பும் வந்துவிடாதபடி பார்த்துக் கொள்கிறோம்’ என்று பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும், ‘உங்களுக்குத் தண்டனை கிடைக்காதபடி பார்த்துக் கொள்கிறோம்’ என்று குற்றவாளிகளுக்கும் – ஒரே நேரத்தில் வாக்குறுதி அளிப்பது அயோக்கியத்தனம் என்பதையும் அவருக்குச் சுட்டிக்காட்டத் தயங்கக் கூடாது.
நடந்தது நடந்துவிட்டது, மறப்போம் மன்னிப்போம், இனிமேல் அப்படி எதுவும் நடந்துவிடாதபடி பார்த்துக் கொள்வோம் – என்றெல்லாம் நம்மில் எவராவது வரலாறு தெரியாமல் பேசினால், 58க்கு முன்பே தொடங்கிவிட்ட இன அழிப்பில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.
‘தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து..’ என்கிறது வள்ளுவம்.
(நடந்த குற்றங்களைத் முறைப்படி ஆராய்ந்து, மீண்டும் அக்குற்றங்கள் நடவாத அளவுக்குக் குற்றத்துக்கேற்ப தண்டிப்பவனே அரசன்).
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே, அவர்களது காலில் மிதிபடும் அப்பாவிகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும். ‘இனிமேல் உங்களைக் காலில் போட்டு மிதிக்காதபடி பார்த்துக் கொள்கிறோம்’ – என்று உத்தரவாதம் கொடுப்பவர்கள் நம்மைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை, குற்றவாளிகளைத்தான் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை இப்போதாவது நாம் உணரவேண்டும்!
ரணிலைப் பொறுத்தவரை, இரண்டில் ஒன்றைத்தான் அவர் சாதிக்க முடியும். குற்றவாளிகளைக் காப்பாற்றினாரென்றால், அவரால் நாட்டைக் காப்பாற்ற முடியாது. நாட்டைக் காப்பாற்றினாரென்றால் அவரால் குற்றவாளிகளைக் காப்பாற்ற முடியாது. யாரைக் காப்பாற்றப் போகிறார் அவர்?

No comments:

Post a Comment