அண்மையில் வராஹா என்ற போர்க் கப்பலை சிறிலங்காவுக்கு இந்திய அரசு வழங்கியமைக்குத் தமிழகத்தின் பல தலைவர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
1992 இல் தயாரிக்கப் பட்ட வராஹா போர்க்கப்பல் 2006 ஆம் ஆண்டில் ராஜபக்ஸே ஆட்சியில் சிறிலங்கா கடற்படை சேவைக்கு குத்தகைக்கு விடப் பட்டிருந்ததுடன் இதற்கு சிறிலங்கா அரசு சாகரா என்றும் பெயர் சூட்டியிருந்தது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில், சிறிலங்கா ஒரு போதும் இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்பதை மத்திய அரசு நன்கு அறிந்திருந்தும் வலியப் பல உதவிகளை வழங்கி வருகின்றது. இவற்றால் பாதிக்கப் படுவது தமிழ்நாடு தான் என்ற போதும் இது தொடர்பில் தமிழக அரசிடமோ கட்சிகளிடமோ மத்திய அரசு ஆலோசிப்பது கிடையாது. கச்சத்தீவை சிறிலங்காவுக்கு வழங்கியது முதற்கொண்டு 2009 இறுதிப் போரில் அரசுக்கு ஆயுதம் வழங்கியது வரை மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழகத்துக்கும் தமிழருக்கும் பாதகமாகவும் சிறிலங்காவுக்கு சாதகமாகவுமே இருந்து வருகின்றது எனச் சாடியுள்ளார்.
வராஹா போர்க் கப்பலை சிறிலங்காவுக்கு இந்திய மத்திய அரசு மிக இரகசியமாகவே வழங்கியுள்ளது என்பதுடன் இதனை சிறிலங்கா பாதுகாப்புத் துறை மாத்திரமே உறுதிப் படுத்தியுள்ளது. ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு இந்தியா குத்தகைக்கு வழங்கியிருந்த இரு போர்க் கப்பல்கள் மூலமே இறுதிப் போரில் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்ய சிறிலங்கா அரசுக்கு ஏதுவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment