கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானமாகிய கசிப்பு மற்றும் கோடா காய்ச்சியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு ஒன்றில், கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையையும்,
அதே எதிரிக்கு அங்கு பிணை மனு மறுக்கப்பட்டதையும், மீளாய்வு செய்து அந்தத் தீர்ப்புக்களை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான வழக்கிலேயே நீதிபதி இளஞ்செழியன் வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கசிப்பு மற்றும் கோடா காய்ச்சியதாகக் குற்றம் சாட்டி எதிரி ஒருவர் மீது கிளிநொச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வஹாப்தீன் தீர்ப்பு வழங்கியிருந்தார்.
இதே வழக்கில் இந்த எதிரியை பிணையில் விடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி நிராகரித்திருந்தார்.
இந்தச் சம்பவம் திங்களன்று நடைபெற்றிருந்தது.
இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலேயும், உடனடியாகவே திங்கட்கிழமையன்றே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி நீதிபதி இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையாக ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்து, அந்தத் தீர்ப்பை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும்,
எதிரிக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்து அவருக்கு மேல் நீதிமன்றம் பிணை வழங்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நேரடியாகத் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவில் கோரப்பட்டிருந்தது.
மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் வழக்கு பிரதிகள் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பே அவசரமாக இந்த மீளாய்வு மனு உடனடியாக அதே தினத்தன்றே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மீளாய்வு மனுவைப் பரிசீலனை செய்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், கிளிநெச்சி மாவட்டம் யுத்தத்தின் கோரப்பிடியில் இருந்து வெளிவந்ததன் பின்னர் இப்போது, கசிப்பு காய்ச்சுதல் உள்ளிட்ட சமூக விரோதக் குற்றச்செயல்களின் சாம்ராஜ்ஜியமாக மாறி வருகின்ற சூழலில்,
இந்த சமுதாய சீர்கேடுகளையும் அதனால் ஏற்பட்டுள்ள கலாச்சார சீர்கேடுகளையும் புரிபவர்களுக்கு எதிராகக் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஜனாப் வஹாப்தீன் கடுமையான தண்டனையாக அதிகபட்ச தண்டனை வழங்கியிருந்தாலும், அது சட்ட வரம்புக்கு உட்பட்ட வகையில் சட்டரீதியாகவே வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தானாகவே குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டு, தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்ய முடியாது என பிரிவு 318 குற்றவியல் நடவடி கோவை பரிந்துரை செய்துள்ளது.
எனவே, இந்த வழக்கில் நீதவான், சட்டத்தைப் பிழையாக விளங்கிக்கொண்டு தண்டனை வழங்கிவிட்டார் அல்லது சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகபட்ச தண்டனையை வழங்கிவிட்டார் என்பதை சுட்டிக்காட்டும்போது மட்டுமே,
மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற மேன் முறையீடு அல்லது மீளாய்வு மனு பரிசீலனை செய்யப்படும். ஆனால், இந்த வழக்கில் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி சமுதாயத்தை நன்னோக்கத்துடன் வழி காட்ட வேண்டும்,
அங்கு இடம்பெறுகின்ற கலாச்சார சீரழிவை ஏற்படுத்துபவர்களைத் தடுக்க வேண்டும், இத்தகைய குற்றச் செயல்கள் செய்பவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனை சமூகத்தில் குற்றம் புரிபவர்களுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனேயே எதிரிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ளார் என நீதிபதி இளஞ்செழியன் தெளிபடுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் கிளிநொச்சி நீதிபதி தனது அதிகாரத்துக்கும், சட்ட வரம்புகளுக்கும் உட்பட்டு சரியான முறையில் சட்ட வரம்புக்கு உட்பட்ட நிலையில் சட்டரீதியாகவே தீர்ப்பளித்துள்ளார் என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், ஆகவே, கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு சரியானதே என தனது தீர்ப்பில் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த மீளாய்வு மனுவில் எதிரி தரப்பு சட்டத்தரணி, கிளிநொச்சி மாவட்ட நீதிபதி என்ன பிழைவிட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டத் தவறியுள்ள படியால், அந்த நீதிபதியின் தீர்ப்பில் தலையீடு செய்ய முடியாது என தீர்ப்பளித்து திங்கட்கிழமையன்றே, அந்த மீளாய்வ மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.
அண்மைக்காலமாக கிளிநெச்சி மாவட்டத்தை ஆக்கிரமித்திருக்கின்ற சட்டவிரோதச் செயற்பாடுகளான சட்டவிரோத மதுபானமாகிய கசிப்பு மற்றும் கோடா போன்றவை, பகிரங்கமாகக் காய்ச்சப்படுவதுடன், மூலை முடுக்கு உள்ளிட்ட பல இடங்களிலும், கசிப்பு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனைக் குடித்துவிட்டு பலர் வீதியில் செல்வோருக்குத் தொல்லை கொடுத்து வருவது ஒரு சமூகப் பிரச்சினை மாறியிருக்கின்றது.
இதனால், இத்தகைய குற்றச்செயல்களைப் புரிந்தார்கள் என கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்படுபவர்களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஜனாப் வாகப்தீன் கடும் தண்டனைகளை வழங்குவதுடன், தண்டமும் விதித்து தீர்ப்பளித்து வருகின்றார்.
இவவாறு தண்டனைக்குள்ளாகியிருப்பவர்களும் விளக்கமறியலில் இருப்பவர்களும், கிளிநொச்சி நீதிமன்றத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுக்களும், பிணை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இத்தகைய மீளாய்வு மனு மற்றும் பிணை மனு மீதான வழக்கிலேயே மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ஊர்ஜிதப்படுத்தி, நீதிபதி இளஞ்செழியன் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார்.
No comments:
Post a Comment