மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் வெருகல் பிரதேச செயலகத்துக்கு அருகில் இன்று காலை காட்டு யானை தாக்கியதில் இளம் மீனவ குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளதாக வெருகல் பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார்.
வட்டவான் கிராமத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி விஜயகுமார் (வயது 31) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே காட்டு யானையின் தாக்குதலால் மரணித்தவராகும்.
வீட்டிலிருந்து மீன்பிடிப்பதற்காகச் திருகோணமலை – மட்டக்களப்பு நெடுஞ்சாலையால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் வழிமறித்த காட்டு யானை இவரை வீழ்த்தி விட்டு தலையில் ஏறி மிதித்துக் கொன்றுள்ளது. மீனவர் பயணம் செய்த சைக்கிளையும் யானை நொருக்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சேருவில பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கொல்லப்பட்ட மீனவரின் சடலம் தற்சமயம் பிரேத பரிசோதனைக்காக வெருகல் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் நெல் அறுவடைக் காலம் ஆரம்பித்துள்ளதால் வெருகல் பிரதேசத்தில் காட்டு யானைகள் உள்ளூருக்குள் ஊடுருவுவது அதிகரித்திருப்பதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை காட்டு யானைகளின் ஊடுருவல் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாக பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார்.
பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கு காட்டுயானைகளிலிருந்து கிராமத்தைப் பாதுகாப்பது குறித்து பயிற்சியளிப்பதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் பிரதேச செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
காட்டு யானைகளின் தாக்குதலால் மனிதர்கள் அடிக்கடி உயிரிழக்கும் பிரதேசங்களில் வெருகல் பிரதேச செயலகப் பிரிவும் உள்ளடங்குகின்றது.
No comments:
Post a Comment