May 17, 2015

வித்தியா மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல்வன்புணர்வையும் கொலையையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

2009ம் ஆண்டுக்குப் பின்பு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் சரியான முறையில் அரசகாவல்துறையால் கட்டுப்படுத்தப்படவில்லை. அரசாங்கத்தின் அசமந்தப்போக்கே இன்று புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியா அவர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட காமவெறிக்கும் படுகொலைக்கும் காரணமாகும்.


செல்வி வித்தியா பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது கடத்தப்பட்டு மிகக்கொடூரமான முறையில் மரக்கட்டையில் கட்டிவைத்துப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ் அப்பாவி இளந்தளிரின் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மிகவன்மையாகக் கண்டிப்பதுடன் இச் சிறாரை இழந்த பெற்றோர்களுக்கு நீதி கிடைக்கும் வண்ணமும் இப்படியான சம்மவங்கள் இனிமேல் நடைபெறாது இருக்க வேண்டும் என்பதாலும் பாதகர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

எமக்குக் கிடைத்த தகவலின் படி சம்பவ தினத்தன்று மாணவி வீடு திரும்பாமை தெடர்பில் குடும்பத்தினரால் பொலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டபோது காவல்துறையால் மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால் பேசி குடும்பத்தினரை அவமரியாதை செய்து அனுப்பியுள்ளனர். இலங்கை அரச காவல்துறையின் பொறுப்பற்றவிதமான பதிலும் செயற்பாடும் குற்றவாளிகளுக்கு துணை போவதோடு இப்படியான வன்முறைகள் நடைபெறவும் தூண்டுவதாக அமைந்துள்ளது.

2009ற்குப் பிறகு தமிழர் பிரதேசங்களில் அதிகரித்து வரும் சந்திச்சண்டை, வாள்வெட்டுக்கள், பாலியல்வன்புணர்வுகள், போதைப்பொருள்பாவனை போன்ற சமூகச்சீர்கேடுகள் சிறிலங்கா அரசபடைகளினதும் காவல்துறையினதும் ஒத்துழைப்புடனேயே நடப்பதாகச் சந்தேகங்களை கிளப்புகின்றது. காவலதுறையின் இத்தகைய பொறுப்பற்ற செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

No comments:

Post a Comment