April 26, 2015

சிங்கும் ஹரிஹரனும் வேறுவேறல்ல! - புகழேந்தி தங்கராஜ்!

சென்ற இதழ் கட்டுரையைப் படித்ததும் மனம் நெகிழ்ந்து பேசிய நண்பர்களுக்கிடையே, 'இந்திய ராணுவத்தைக் கூலிப்படை என்று நீ எப்படிச் சொல்லலாம்' என்று கோபத்தோடு கேட்ட குரல் மட்டும் தனித்து ஒலித்தது. அந்தக் குரல் நிச்சயமாக ஒரு தேச பக்தரின் குரலாகத்தான் இருக்க வேண்டும். அவருக்குத்தான் முதலில் பதில் சொல்ல
வேண்டியிருக்கிறது.
என்னிடம் கோபப்படுகிற இந்த தேசபக்தர்கள், 1987ல் எங்கே போயிருந்தார்கள்? "இந்தியாவுக்கே ஆயிரம் தலைவலி இருக்கிற இந்த இக்கட்டான தருணத்தில், நேர்மையற்ற ஆண்மையற்ற உண்மையற்ற இலங்கை என்கிற அற்பப்புழுவைக் காப்பாற்ற, இந்திய ராணுவத்தை அங்கே அனுப்பி வைப்பது முட்டாள்தனம் இல்லையா" என்று ராஜீவ்காந்தியிடம் இவர்கள் கேட்டிருக்கவேண்டாமா?
இந்திய ராணுவத்தை ஒரு கூலிப்படை ரேஞ்சுக்குச் சிறுமைப்படுத்த ராஜீவ் முயன்றபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள், அந்த இமாலயத் தவறைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது மட்டும் ஆத்திரத்துடன் பாய்வார்கள் என்றால், இடைப்பட்ட காலத்தில் இவர்களது தேசபக்தி எங்கே போயிருந்தது? அழுக்கு நீங்க அடித்துத் துவைத்து கஞ்சிபோட்டுக் காயவைத்திருந்தார்களா?
இந்திய ராணுவத்தை ராஜீவ் அரசு எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தி விட்டது என்பதை, இதயத்தின் அடித்தளத்திலிருந்து எடுத்துரைத்த வைகோவின் நாடாளுமன்ற உரையை இவர்கள் படித்துப் பார்க்க வேண்டும். 1988 நவம்பர் 4ம் தேதி வைகோ ஆற்றிய அந்த உரை, எம் இனத்துக்குக் கிடைத்திருக்கிற அழுத்தந்திருத்தமான ஆவணம்.
இந்திய அமைதி காப்புப் படையை தமிழரை அழிக்கும் படையாக இலங்கை உருமாற்றியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில், பிரதமர் ராஜீவ்காந்தியின் முகத்துக்கு நேராகவே தனது குற்றச்சாட்டை எடுத்து வைத்தார் வைகோ. ஆதிக்க சக்திகளைக் குறித்த அச்சமின்றி மனசாட்சியுடன் பேசவேண்டியதுதான் ஒரு போராளியின் முக்கியக் கடமை. அதை எடுத்துக்காட்டுவதாக இருக்கும் வைகோவின் உரை, காங்கிரஸ் எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கிடையில் தான் நிகழ்த்தப்பட்டது.
"இந்திய ராணுவத்துக்கென்று ஒரு மரபும் மரியாதையும் இருக்கிறது என்று பிரதமர் ராஜீவ் குறிப்பிட்டார். அதன் திறமைகள் குறித்து வெகுவாகப் பாராட்டினார். இலங்கைத் தீவில் தமிழர்களை இந்திய ராணுவம் கொன்று குவிக்கிறதே... இதுதான் இந்திய ராணுவத்தின் மரபா?...........
இந்திய ராணுவத்தை ஒரு அடியாட்கள் படையாக, கூலிப்படையாக ராஜீவ்காந்தி எப்போதோ மாற்றிவிட்டார். இலங்கையில் ஜெயவர்தனேவின் கூலிப்படையாகத்தான் இந்திய ராணுவம் செயல்படுகிறது.....
ஜெயவர்தனேவின் வேண்டுகோளை ஏற்றுத்தான் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பினார்கள். தனது இந்த தவறான அணுகுமுறையால், இலங்கைப் பிரச்சினையை விடுபட முடியாத புதைகுழியாக ஆக்கி, அதில் இந்திய ராணுவத்தைச் சிக்க வைத்திருக்கிறார் பிரதமர். அந்தப் புதைமணலிலிருந்து விடுபடமுடியாத இந்திய ராணுவம், நாள்தோறும் தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்கிறது. இதற்குக் காரணம் பிரதமர்தான்....
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு, இந்திய ராணுவம் அல்லது ராணுவத்தை ஏவிவிட்ட பிரதமர்தான் பொறுப்பு என்று குற்றஞ்சாட்டுகிறேன்.... இந்துமகா சமுத்திர வட்டாரமெங்கும் அமைதியை நிலைநாட்டுவதே இந்தியாவின் நோக்கம் என்று பிரதமர் கூறினார். அது எந்த வகையான அமைதி? மயான அமைதியா? இலங்கையில் எம் தமிழர்கள் வாழும் பகுதியில் நீங்கள் ஏற்படுத்த முயல்வது மயான அமைதியைத் தவிர வேறென்ன? அதனால்தான், இந்திய அரசு ராணுவத்தைப் பயன்படுத்தும் முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்........"
வைகோ இப்படிக் கண்டிக்கும்போது குறுக்கிடுகிறார் பிரதமர் ராஜீவ்காந்தி.
'இந்திய ராணுவம் குறித்து உறுப்பினர் செய்யும் விமர்சனம் ஆபத்தானது மட்டுமல்ல... நாட்டுப்பற்று இல்லாத செயல்..... இந்திய ராணுவத்தைக் குறித்து இப்படி விமர்சிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்திய நாட்டின்மீது பற்றுதல் இருந்தால், இந்திய ராணுவத்தை விமர்சிக்க மாட்டார்கள்....' என்பது ராஜீவின் வாதம்.
ராஜீவின் அந்த உப்புசப்பற்ற வாதத்துக்கு உடனடியாகப் பதிலளித்திருக்கிறார் வைகோ. 'நாட்டுப்பற்று குறித்து ஒரு புதிய தத்துவத்தைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார் பிரதமர். இந்திய ராணுவம் அக்கிரமம் செய்தால், அதைக் கண்டிப்பது நாட்டுப்பற்றுக்கு எதிரானதா? இலங்கையில் தமிழ் மக்களை ஈவிரக்கமில்லாமல் இந்திய ராணுவம் படுகொலை செய்வதைக் கண்டிக்கக் கூடாதா' என்று ராஜீவின் முகத்துக்கு நேராகவே கேட்டிருக்கிறார் வைகோ.

தன் நாட்டின் ராணுவம் தன் கண்ணெதிரிலேயே ஒரு கூலிப்படை ரேஞ்சுக்கு சிறுமைப்படுத்தப்படுவதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சமகாலத்திலேயே சீறிப்பாய்ந்த வைகோவின் ஆதங்கம் தான் உண்மையான தேசபக்தனின் ஆதங்கம். வைகோ மாதிரி மனம்திறந்து பேசாமல், 30 ஆண்டுகள் கழித்து உப்பு புளி மிளகாய் விற்க வருகிற வி.கே.சிங் போன்றவர்கள் என்ன சொல்லவருகிறார்கள்?
1987ம் ஆண்டுச் சூழலில் இந்திய எல்லையில் நிலவிய பதற்றம் குறித்து விரிவாகப் பேசுகிறது வரலாறு. அதைப்பற்றிக் கவலையேபடாமல், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப ராஜீவ் முடிவெடுத்ததுதான் உண்மையான தேசபக்தி என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பப் போகிறார்களா என் நண்பர்கள்!
பிரதமர் என்கிற ஆகப்பெரிய பதவியில் இருக்கிற ஒரு மனிதர் -அண்டை நாட்டுக்கு ராணுவத்தை அனுப்புவதென்கிற அதிமுக்கிய முடிவை எடுப்பதற்குமுன், உயர் அதிகாரிகளோடும் ராணுவத் தளபதிகளோடும் அமைச்சரவையோடும் ஆலோசித்திருக்க வேண்டுமா இல்லையா? தேசபக்த சிகாமணி ராஜீவ்காந்தி அப்படிச் செய்தாரா? 'கொழும்பில் இருக்கும்போதே அப்படியொரு முடிவை ராஜீவ் தன்னிச்சையாக எடுத்தார்' என்பதுதானே ராஜீவின் சகா நட்வர்சிங்கின் குற்றச்சாட்டு.
இந்திய ராணுவத்தின் மரியாதைக்குரிய அடையாளமாகவே மாறிவிட்டிருக்கும் பீல்டுமார்ஷல் மானெக் ஷா, ராஜீவின் அந்தப் பொறுப்பற்ற நடவடிக்கையை வெளிப்படையாகவே விமர்சித்திருந்தாரே.... நினைவிருக்கிறதா இந்த மாஜி அதிகாரிகளுக்கு!
இந்தியாவுக்கும் நன்மை பயக்காத, தமிழர்களுக்கும் நன்மை பயக்காத இந்த நடவடிக்கை தேவைதானா - என்பது தானே மானெக் ஷா போன்ற மேதைகளின் கருத்தாக இருந்தது. அப்படிக் கேட்ட மானெக் ஷா போன்றவர்கள் தேசபக்தர்களா, அதையெல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் இந்தியாவையே ஆபத்து சூழ்ந்திருந்த நேரத்தில் இலங்கையைக் காப்பாற்ற ராணுவத்தை அனுப்புவதென்று தன்னிச்சையாக முடிவெடுத்த ராஜீவ்காந்தி தேசபக்தரா?
தமிழின அழிப்பை ஒரு நிரந்தர பொழுதுபோக்காகவே வைத்திருக்கும் பௌத்த சிங்களப் பொறுக்கிகள்தான் இலங்கையின் அரியணையில் ஏறுகிறார்கள் எப்போதும்! தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன என்று அவர்கள் ஆராய்ந்ததாகச் சரித்திரமே இல்லை. 'பிரபாகரனைத் தீர்த்துக் கட்டிவிட்டால் பிரச்சினைக்குத் தீர்வு கட்டி விடலாம்' என்கிற அதுலத்முதலித்தனம் தான், அத்தனை சிங்களத் தலைவர்களின் அடிப்படைத் தீர்வுத் திட்டமாக இருந்தது. ராஜீவ் அரசுக்கும் அதுதான் மிக மிக எளிதான தீர்வென்று தோன்றியது.
பிரபாகரனைக் கொன்றுவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் - என்று நம்பியதால்தான், நயவஞ்சகமாக அந்த மாவீரனைக் கொல்ல உத்தரவிட்டார் ராஜீவ். இந்தியத் தளபதிகள் ராஜீவின் அந்தக் கோழைத்தனத்துக்கு உடன்பட மறுத்துவிட்டனர். அதன்பிறகுதான் மணலாற்று முற்றுகை. தன்னைக் கொல்வதற்காக இந்தியா நிறுத்திய நாற்பதாயிரம் வீரர்களைக் குறித்துக் கவலையே படாமல், சரணடைவதென்ற பேச்சுக்கே இடமில்லை - என்று ஆண்மையோடு அறிவிக்க முடிந்தது பிரபாகரனால்!
பிரபாகரனைக் கொல்ல எல்லாவகையிலும் முயற்சித்துத் தோல்வியடைந்த இந்திய ராணுவத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகவோ என்னவோ, 'பிரபாகரனைத் தப்பவிட்டது இந்தியாதான்' - என்கிறார் ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி வி.கே.சிங். அதை உறுதியாக மறுக்கிற ஹரிஹரனும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தான்.
ஹரியும் சிவனும் ஒண்ணு, அதை அறியாதவன் வாயில மண்ணு - என்பதைப் போல, சிங்குக்கும் ஹரிஹரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர், 'பிரபாகரனை ஏன் கொல்லவில்லை' என்று கேட்கிறார். இவர், 'நாங்கள் கொல்லத்தான் முயன்றோம்.... அவர்தான் தப்பிச் சென்றுவிட்டார்' என்று சொல்லாமல் சொல்கிறார்.
இலங்கையில் அமைதியைக் காக்கச் சென்றார்களா, பிரபாகரனைக் கொல்லச் சென்றார்களா - என்கிற கேள்விக்கான உண்மையான பதிலை போட்டிபோட்டுக் கொண்டு தெரிவிக்கிறார்கள் இருவரும்! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசிய ராஜீவின் துரோகமும் இந்தியாவின் துரோகமும் ஓட்டைவாயர்கள், உளறுவாயர்கள் மூலம் எப்படியெல்லாம் அம்பலமாகிறது பாருங்கள்.
'இலங்கைப் பிரச்சினைக்கு ராஜீவால் தீர்வுகாண முடிந்ததா? தீர்வு காண முடியாத ஒருவர், நம் ராணுவத்தைக் கூலிப்படை மாதிரி எதற்காக அனுப்பிவைத்தார்? போரில் ஈடுபட்ட ஒரே தரப்புடன் ஒப்பந்தம் செய்துவிட்டு, ராணுவபலத்தைக் காட்டி மிரட்டி இன்னொரு தரப்பின் தலையில் அதைத் திணிக்க முயற்சித்ததன் பெயர் மத்தியஸ்தமா' என்றெல்லாம் கேட்கவில்லை வி.கே.சிங். பிரபாகரனை ஏன் கொல்லவில்லை - என்பதுதான் அவரது ஹோல்சேல் கவலையாக இருக்கிறது.
உண்மையிலேயே ராணுவத்தின் மீது அக்கறை இருந்திருந்தால், 'இந்திய ராணுவத்தைக் கூலிப்படை மாதிரி மாற்றிய ராஜீவின் நடவடிக்கை மிகப்பெரிய பிழை' என்றோ, 'இன்னொருநாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காக இந்திய வீரர்களைப் பலிகொடுக்க ராஜீவ் யார்' என்றோ கேட்டிருக்க வேண்டும் சிங். அப்படியெல்லாம் நியாயம் கேட்காமல், 'பிரபாகரனை ஏன் கொல்லவில்லை' - என்று கேட்கிற ஒருவர் நமக்கு வெளியுறவுத் துறை அமைச்சராக வாய்த்திருப்பது கொடுமையிலும் கொடுமை!
வி.கே.சிங்குக்கு பதில் என்கிற போர்வைக்குள் முகமொளித்துப் பேசுகிறார் ஹரி. 'ஒரே ஒருமுறைதான் பிரபாகரனை நாங்கள் நெருங்கினோம். ஆனால், அதற்குள் அவர் தப்பிச் சென்றுவிட்டார்' என்று சொல்கிற இந்த ஹரிஹரன்தான் இந்திய அமைதி காப்புப் படையின் உளவுத்துறை அதிகாரி. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக முரசறைந்த துறையில் முதன்மையானவர். 'பிரபாகரன் உயிருடன் இல்லை' என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்த பிரகஸ்பதிகளின் நிலைமை இன்றைக்கு எப்படி ஆகிவிட்டது பாருங்கள்.
முதலில் கொல்ல முயன்றார்கள்...
முடியவில்லை என்றானவுடன் கொன்று விட்டதாக செய்தி போட்டு மகிழ்ந்தார்கள்... அற்பப்பிறவிகள்..
மணலாற்றிலேயே பிரபா இறந்துவிட்டதாக செய்தி பரப்பிய இந்த மனிதர்கள், பிரபா உயிருடன் இருப்பது தெரியவந்ததும், தாங்கள் சொன்ன பச்சைப் பொய்க்காக மன்னிப்பாவது கேட்டார்களா?
நந்திக்கடல் மர்மத்தைக் குறித்து நாம் விலாவாரியாகக் கேள்வி கேட்டபோது, அந்தக் கேள்விகளில் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், 'பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக வதந்தியைப் பரப்புவதால் இலங்கைக்கு என்ன லாபம்' என்று அதிமேதாவிகள் மாதிரி நம்மைத் திருப்பிக் கேட்ட நண்பர்களெல்லாம் இருக்கிறார்கள். மணலாற்றிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகச் செய்தி பரப்பப்பட்டதைக் குறித்து எழுதும் 'வீரகேசரி', எதற்காக அதைச் செய்தார்கள் என்றும் எழுதுகிறது.
'பிரபாகரன் செத்துவிட்டதாக வதந்தியைக் கிளப்பினர். அது விடுதலைப் புலிகளின் மன உறுதியைக் குலைப்பதற்கான முயற்சி' என்கிறது வீரகேசரி. அந்த முயற்சிதான் நந்திக்கடலிலும் தொடர்கிறது. இப்போது, இது தமிழர்களின் மன உறுதியைக் குலைப்பதற்கான முயற்சி.
மணலாற்றில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பரப்பப்பட்ட வதந்திக்கும் ஹரிஹரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றோ, பிரபாகரனைச் சுட்டுக்கொல் என்கிற மேலிடத்து உத்தரவுக்கும் ராஜீவுக்கும் அறவே தொடர்பில்லை என்றோ யாராவது சொன்னால், அது கால்பந்தைக் கொண்டுவந்து கிரிக்கெட் பந்துக்குள் ஒளித்துவைக்க மேற்கொள்கிற புத்திசாலித் தனமற்ற முயற்சி. அவர்களுக்கே தெரியாமல் அவர்களது அலுவலக குமாஸ்தாக்கள் அதைச் செய்தார்கள் என்கிறார்களா?
இதையெல்லாம் மூடி மறைக்கிற வேலையை நிறுத்திவைத்துவிட்டு, வேறொரு சதியில் இறங்கியிருக்கின்றன இந்தியாவும் இலங்கையும். அது, நடந்த இனப்படுகொலையை மூடி மறைக்கிற முயற்சி. அந்தச் சதியை உடைக்க வேண்டியதுதான் நமது முதல் முக்கியக் கடமை.
அந்த அடிப்படையில், இந்த வாரம் ஒருவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் - கமலஹாசன். நடந்தது இனப்படுகொலைதான் என்பதை, மனவேதனையுடன் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார் கமல்.
"பக்கத்துல தமிழினம் அழிஞ்சிடுச்சி... ஒண்ணுமே செய்ய முடியலையே நம்மால! 20 வருஷமா பேசினோம், போராடினோம். ஆனா, இனப்படுகொலை நடந்து முடிஞ்சிடுச்சே! செயல்படாத அரசியல்வாதிகள்தான் நடந்த தமிழ் ஈழ இனப்படுகொலைக்குக் காரணம்" என்கிற கமலின் மனக்குமுறலை முன்னணிப் பத்திரிகை ஒன்று வெளியிட்டிருக்கிறது.
அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த இயக்குநர் ஆர்.சி.சக்தியின் 75வது பிறந்த தின விழா கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடந்தது. அதில் பேசியபோது, தனக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பைப் பற்றி மனநெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கமல். சக்தி பற்றி கமல் பேசியது, இப்போது அவருக்கும் பொருந்துகிறது முழுமையாக! அடுத்த இதழில் அதை எழுதுகிறேன்....

நன்றி - தமிழக அரசியல்

No comments:

Post a Comment