March 26, 2015

கறுப்புப் பெட்டி சேதத்தால் தரவுகளை பெறுவதில் சிரமம்: ( படங்கள் இணைப்பு)

விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்தின் கறுப்புப் பெட்டி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதிலிருந்து பயன்படுத்தக் கூடிய தகவல்களை பிரித்தெடுத்துள்ளதாக பிரான்ஸ் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


இருப்பினும் இந்த தரவுகளிலிருந்து விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் அல்ப்ஸ் மலைத்தொடரிற்கு அருகில் 150 பேருடன் விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்க்ஸ் விமானத்தின் கறுப்புப் பெட்டி தற்போது பிரான்ஸ் நிபணர் குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆய்வினை மேற்கொண்டு வரும் பிரான்ஸ் விமானவிபத்து விசாரணை அமைப்பின் தலைவரான ரெமி ஜவுடி வெளியிட்ட கருத்தின் படி, விமானம் அதிவேகமாகச் சென்று அல்ப்ஸ் மலையுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது போல் ஆய்வுகளின் தன்மை வெளிப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கறுப்புப் பெட்டி சேதமடைந்து காணப்படுவதால் விபத்துக்கான சரியான காரணம் குறித்தோ அல்லது விமானிகள் ஏன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பது குறித்தோ தற்போது விளக்கம் தரக் கூடிய நிலையில் தாம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொடர்ந்தும் கறுப்புப் பெட்டியில் உள்ள தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் இரண்டாவது கறுப்புப் பெட்டி தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் தொழிநுட்பத் தகவல்கள் அனைத்தும் இரண்டாவது கறுப்புப் பெட்டியிலேயே காணப்படுவதால் அதனைத் தேடும் பணி அல்ப்ஸ் மலைத் தொடரில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதேவேளை விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு வெடித்து சிதறியிருக்க வாய்ப்பு இல்லை என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை, விபத்து இடம்பெற்ற பகுதிக்கு பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் ஸ்பெயின் நாட்டு தலைவர்கள் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment