எங்களுக்கு மேலே ஒரு குண்டைப் போட்டு எங்களைக் கொன்றுவிடுங்கள். நாங்கள் எங்களுடைய பிள்ளைகளைத் தேடி வரமாட்டோம்.
முன்னர் குண்டு போட்டு எல்லாரையும் கொன்றது போல குண்டைப் போட்டு எங்களையும் கொன்று விடுங்கோ.
பிறகு எங்களுக்குப் பிள்ளைகளின் வலி தெரியாது ‘ இவ்வாறு கதறி அழுதார் மகனைத் தொலைத்த தாயொருவர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற காணாமற்போன உறவுகளினுடைய அமைதி வழிப் பேரணியில் கலந்துகொண்டிருந்த தாயொருவர் தாங்காத துன்பத்தால் இவ்வாறு கூறி கதறி அழுதார்.
“ராஜபக்ச இருந்தார் அவரும் ஒரு முடிவு சொல்லேல்ல. இப்ப மைத்திரிபால வந்திருக்கிறார். அவரும் கூட எங்களுக்க ஒரு முடிவும் சொல்லேல்ல. பிள்ளையள் எங்க இருக்கின்றார்கள் என்று காட்டுங்கோ. நாங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கோ, கூட்டங்களுக்கோ வரமாட்டோம். ஆறு வருடமாக நாங்கள் கண்ணீர் வடித்து போகாத இடமில்லை, கும்பிடாத கடவுள் இல்லை.
எங்களுக்கு ஒருவரும் இல்லை. நாங்கள் எல்லாம் அநாதைகளாகப் போய்விட்டோம். தேர்தலுக்கு வரமுதல் சொல்லுறீங்க முதலாவதா காணாமற்போன பிள்ளையள பெற்றோரிட்ட ஒப்படைக்கின்றோம் என்று. பிறகு அது பற்றிய ஒரு கதையும் கதைக்க மாட்டியளாம். எல்லாரும் ஒரே மாதிரித்தான் இருக்கிறீங்கள்.
எங்கட பிள்ளைகளைத் தேடித் தேடி எத்தனை வருசமா நடைபிணங்களாய் அலைஞ்சு திரியிறம். போட்டோ கொப்பி அடிச்சு அடிச்சு எத்தின இடத்தில குடுத்தாச்சு, முகாமில தந்த அரிசி பருப்பை வித்துப் போட்டுக்கூட எங்கட பிள்ளையள ஜோசப் காம்பில பாக்கப் போனனாங்க.
இப்ப எங்களுக்க ஒண்டும் இல்ல. உழைச்சுத் தாறது அந்த பிள்ளையள் தான். அவங்களும் இல்லாட்டா நாங்கள் ஏன் இருப்பான்?
எல்லாரையும் குண்டு போட்டு கொன்றது போல எங்களையும் குண்டு போட்டு கொன்று விடுங்கோ. நாங்கள் எங்கட பிள்ளையளத் தேடி வரமாட்டோம்.’ என்று அந்தத் தாய் கதறி அழுதார்.
எல்லாரையும் குண்டு போட்டு கொன்றது போல எங்களையும் குண்டு போட்டு கொன்று விடுங்கோ. நாங்கள் எங்கட பிள்ளையளத் தேடி வரமாட்டோம்.’ என்று அந்தத் தாய் கதறி அழுதார்.
“எங்கட பிள்ளையள் வராததால நாங்கள் பயித்தியம் பிடிச்சு அலையிறம். எப்படியாவது சாகிறதுக்கு இடையில எங்கட பிள்ளையள மீட்டு ஒரு முடிவைத் தாங்கோ.’ என்று யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடி மனுகையளித்த காணாமற் போனவர்களின் உறவுகள் கூறினர்.
“எவ்வளவு காலத்துக்கு இப்படி அலைந்து திரிகிறது. பிள்ளைகளைக் காணாமலேயே செத்துப் போவோமோ என்று பயமாக இருக்கிறது’ என்று ஒரு தாய் கண்ணீருடன் கூறினார்.
அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்திருந்தனர். அவ்வாறு எடுத்த ஒருவரை போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாயொருவர் ஏசிக் கலைத்தார். “நீயும் தமிழன்தானே. எங்களை எடுத்து என்ன செய்யப்போகிறாய். அச்சுறுத் தவா பார்க்கிறாய்’ என்று அவர் திட்டித்தீர்த்தார்.
No comments:
Post a Comment