March 22, 2015

அமரர் திரு.இரா. நாகலிங்கம் ஐயா அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால், எமது தேசத்தின் அதியுயர் விருதான உணர்ச்சிலை மாமனிதர் உணர்ச்சிலை விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கை!


தமிழீழ விடுதலைப் புலிகள்.
தமிழீழம்.
20:03:2015.

தமிழ் மொழிக்காகவும் இனத்துக்காகவும் அயராது உழைத்த ஓர் உன்னத மனிதர் மறைந்துவிட்டார். புலம்பெயர் தேசத்தில் தமிழ்மொழி பாதுகாக்கப்படவும் தழைத்தோங்கவும் வழிகோலிய விளக்கு ஒன்று அணைந்துவிட்டது. புகலிட நாடுகளில் பிறந்து வளர்ந்துவரும் எமது தலைமுறைக்கு இனத்தின் அடையாளமான தமிழை ஊட்டிவளர்க்க முதன்மையாக உழைத்த பெருந்தமிழன் திரு. இரா. நாகலிங்கம் அவர்களின் மறைவு தமிழர்களுக்குப் பேரிழப்பு ஆகும்.

யாழ்ப்பாணம் வசாவிளானில் பிறந்த திரு. இரா. நாகலிங்கம் அவர்கள் தமிழர் தாயகத்திலும் மலையகத்திலும் பல்லாண்டுகாலம் தமிழ் ஆசிரியராக இன உணர்வோடும் அர்ப்பணிப்போடும் பணியாற்றினார். தாயகத்தைவிட்டு 1979 இல் புலம்பெயர்ந்த இவர் யேர்மனியில் புகலிடம் தேடிக்கொண்டார். 1986ஆம் ஆண்டு யேர்மனில் தான் வாழ்ந்த நகரில் தமிழ்ப் பாடசாலையொன்றை நிறுவி நடாத்தத் தொடங்கினார். அடுத்த ஆண்டுகளில் அயல் நகரங்களிலும் தமிழ்ப்பள்ளிகள் நிறுவி தமிழ்க் கல்வி செழித்தோங்க வகைசெய்தார். 1990 ஆம் ஆண்டு மாவீரர் மேஜர் சுரேந்திரகுமாரின் ஒருங்கிணைப்பில் “தமிழாலயம்” தொடங்க வித்திட்டார். அத்தோடு உலகத்தமிழர் இயக்கத்தில் தொடக்க காலந்தொட்டே செயலாற்றிவந்ததுடன் அதன் கல்விப்பிரிவின் பொறுப்பை ஏற்றுச் செவ்வனே நிறைவேற்றினார். இவர் 1995ஆம் ஆண்டுவரை 90 இற்கும் மேற்பட்ட தமிழாலயங்கள் நிறுவுப்படத் தூணாக நின்றுழைத்த உத்தமராவார்.

தமிழாலயங்களுக்கான பாடநூல்கள் பாடநெறிகள் திட்டங்கள் என்பவற்றைத் தயாரித்ததோடு ஆசிரியர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கினார். புலம்பெயர்ந்த தேசத்தில் வாழும் இளந் தலைமுறையொன்று தமிழில் பரிச்சயமாகவும் தமிழ்த்தேசிய உணர்வோடு வாழவும் வித்திட்டு உழைத்த தமிழ்த் தந்தை இவர். தமிழ் மொழிக்கு மட்டுமன்றி தமிழ்த்தேசியத்துக்காகவும் அயராது உழைத்த திரு. இரா. நாகலிங்கம் ஐயாவை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 2004ஆம் ஆண்டு தாயகத்துக்கு அழைத்து மதிப்பளித்தார்.

எமதினத்தின் ஆன்மாவாகிய தமிழ் மொழியைப் புலம்பெயர் தேசத்தில் கட்டிக்காக்கக் கங்கணங் கட்டிப் பணியாற்றிய திரு. இரா. நாகலிங்கம் அவர்களின் தேசப்பற்றையும் மொழிப்பற்றையும் இனப்பற்றையும் மதிப்பளித்து 'மாமனிதர்' என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம். தமிழ்த் தேசியம் உயிர்ப்போடு இருப்பதற்கு அடித்தளமே தமிழ்மொழியின் இருப்புத்தான் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு செயலாற்றி இன்று மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்ட திரு.இரா. நாகலிங்கம் ஐயாவின் பணியின் சுவடுகளைக் காலம் அழித்துவிடாது. தமிழ் மொழியின் இருப்புக்காகவே உழைத்தவரின் புகழ் மொழியுள்ளவரை நிலைத்திருக்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகள்.
தமிழீழம்.


No comments:

Post a Comment