2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்காக தனது வங்கி கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வழங்கியதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் நேற்று ஒளிப்பரப்பான கலந்துரையாடல் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2005 ஆம் ஆண்டில் நான் இராணுவத்தில் இரண்டாவது தளபதியாக இருந்தேன்.
கோத்தபாய ராஜபக்சவை எனக்கு தெரியும் ஆனால் அதிகம் பழகியதில்லை. அவர் இராணுவத்தில் லெப்டினல் கேர்ணலாக இருந்தார். எமக்கு பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்டவர். ஒரு நாள் அமெரிக்காவில், நான் மற்றுமொரு இராணுவ அதிகாரியின் வீட்டில் கோத்தபாயவை சந்தித்தேன்.
அப்போது அவர் கஷ்டமான நிலையில் இருப்பதாகவே தென்பட்டது. அவர் வசதியற்றவராக இருந்தார். அவரை எவரும் கண்டு கொள்ளவில்லை. இப்படியான சூழ்நிலையில், 2005 ஆம் ஆண்டு கோத்தபாய மேலும் இரண்டு நபர்களுடன் என்னை சந்திக்க வந்தார்.
நான் இராணுவ தலைமையகத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தேன். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், என்னை சந்திக்க வேண்டும் எனக் கூற அவர் வந்திருந்தார்.
தவறியேனும் ரணில் அவர்கள் வென்றிருந்தால், எனது இராணுவ வாழ்க்கை இல்லாமல் போயிருக்கும். ஆனால், நான் அதனை பொருட்படுத்தவில்லை. பரவாயில்லை வாருங்கள் என நான் கூறினேன். கோத்தபாய மற்றுமொருவருடன் என்னை சந்திக்க வந்தததுடன் மிகவும் துக்கமாக பேசினார்.
தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள முடியவில்லை. முடிந்த நிதியுதவி செய்ய முடியுமா என கோத்தபாய என்னிடம் கேட்டார். நான், பணக்காரன் இல்லை. எனது நடைமுறை கணக்கில் சுமார் 6 லட்சம் ரூபா இருந்தது. முடிந்த நேரத்தில் திருப்பி தருமாறு கூறி அந்த 6 லட்சம் ரூபா பணத்தை நான் அப்படியே கொடுத்தேன்.
ஆனால், அந்த கடன் திருப்பி கொடுக்கப்படவில்லை என பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment