அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம்!!!
தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள், அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம்
அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது.
ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளை தரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையும் உள்வாங்கிய இயக்கம்) இன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது.
இவ்வாறு தெரிவித்தார் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளரும், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமான
யுத்தம் நிறைவடைந்து 5 வருட பூர்த்தி தொடர்பாக ‘மாற்றம்’ தளம் அவரிடம் கருத்து கேட்டபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழர் போராட்டத்தை விளங்கிக்கொள்ளாத சர்வதேசம்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது பெரும்பாலான உலக நாடுகள், குறிப்பாக இலங்கை சார்ந்து அக்கரையோடு இருந்த – இலங்கை தொடர்பாக தங்களுடைய நலன்களை வைத்திருந்த – நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்து யுத்தத்தை நடத்தி முடிந்திருந்தன என்பதனை நாங்கள் கவனிக்கவேண்டும். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதே யுத்தத்துக்கு தாங்கள் ஆதரவு வழங்குவதற்கான அடிப்படை காரணம் என அந்த நாடுகள் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தன. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த விடயத்தை முன்னிறுத்தியே ஆதரவு தெரிவித்திருந்தன. அதிலும் குறிப்பாக இந்தியா.
யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் விடுதலைப்புலிகளை அழித்ததன் பின்னர் தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்குவதற்கான வாய்ப்பு இன்னும் உருவாகவில்லை. மாறாக, சிங்கள – பௌத்த அரசியல் வலிமை பெற்றிருக்கின்றதே அன்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பு – சந்தர்ப்பம் – வெளி இன்னும் உருவாக்கப்படவில்லை.
விடுதலைப் புலிகளை அழித்தால் ஒரு வாய்ப்பு வரும் என்று கூறுவது அடிப்படையின் தவறு என்றே நான் கருதுகிறேன். தென்னிலங்கையில் மாறி மாறி வந்த அரசுகளுடன் தமிழ் தலைமைகள் மேற்கொண்ட பேச்சுகள் தோல்வி அடைந்ததன் பின்னணியிலேயே விடுதலைப் புலிகளது போராட்டம் அல்லது பொதுவாக தமிழர்களது ஆயுதப் போராட்டம் உருப்பெற்றது. ஆகவே, தமிழ் தலைமைகளின் வன்முறையற்ற முறையிலான பேச்சுகளின் தோல்வியின் பின்னர் உருப்பெற்ற ஆயுதப் போராட்டத்தை பிரச்சினைக்குரியதாக்கி, ஆயுதப் போராட்டம் இல்லாது நீங்கப்பட்டால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் எனத் தெரிவிப்பது தமிழர் பிரச்சினையை முழுமையாக விளங்கிக்கொள்ளாத தன்மை காட்டுகிறது.
5 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக உலக நாடுகள் எதற்காக ஆதரவு வழங்கினவோ அந்த எதிர்பார்ப்பு தவறானது, பிழையானது என்பதை இப்போது தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
தற்போது தென்னிலங்கையில் செயற்பட்டு வரும் அடிப்படைவாத அமைப்புக்களான பொதுபல சேனா, ராவணா பலய போன்றன விளிம்பு நிலை அமைப்புகள் என்று சிலர் பேச தலைப்படுகின்றனர். அவர்கள் முன்வைக்கும் சித்தாந்தத்தின் மூலம் தென்னிலங்கையில் செயற்படுவது சிங்கள – பெளத்த அரசு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் தென்னிலங்கையில் தொடர்ந்து வருகின்ற அரசியல் எவ்வாறு நகர்ந்திருக்கிறது என்பதன் வெளிப்பாடே இந்த அமைப்புக்களின் பிறப்பும் – செயற்பாடும். இந்த அமைப்புகள் விளிம்பு நிலை அமைப்புகள் இல்லை என்பதை நாம் இதன் மூலம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
யுத்தம் முடிவுறவில்லை
யுத்தம் முடிவடைந்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. யுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலை (Post War) என்று கூறுகிறார்கள். ஆனால், தற்போதைய நிலையை யுத்தத்துக்குப் பின்னரான சூழல் என்பதா அல்லது முறண்பாட்டுக்குப் பின்னரான சூழல் (Post Conflict) என்பதா என விவாதத்துக்கு உட்படுத்துகின்றனர்.
தமிழ் மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமை தொடர்பாக பேச முன்வந்ததாலும், அது அடக்கப்பட்டதாலும், அதற்கு வன்முறையற்ற விதத்தில் பதில் கூறுவதற்கு சிங்கள அரசு முன்வராததனாலேயே யுத்தம் ஆரம்பமானது. ஆகவே, இன்று நாங்கள் பார்ப்பது அந்த யுத்தத்தின் ஒரு தொடர்ச்சிதான். தமிழ் தேசியத்தினுடைய ஆயுதம் தரித்த வடிவம் தோற்கடிக்கப்பட்டாலும் (விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்கள்) தமிழ் தேசியவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என்றால் தமிழர்களது நிலப்பரப்பு சார்ந்த தேசிய வடிவத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்ற முனைப்பில் முழு மூச்சாக தென்னிலங்கை அரசு செயற்பட்டு வருகின்றது. வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்பதை இல்லாமல் செய்யவேண்டும் என்பதோடு, நில அபகரிப்பின் மூலமும் தமிழரின் இருப்பை கேள்விக்குள்ளாக்க தென்னிலங்கை அரசு முயன்று வருகின்றது.
தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் மீது உள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்யவேண்டும் அல்லது பிடிப்பை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று இடம்பெற்று வருகின்றன. தமிழ் அரசியல் சார்ந்த, நேரடியாக கட்சி அரசியல் சாராத செயற்பாட்டாளர்களை முடக்குவதற்காக தொடர்ந்து இடம்பெற்று வரும் கைதுகள், பல்கலைக்கழக மாணவர்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் போன்றவற்றால் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியத்தில் வீழ்ச்சி ஏற்படும் என தென்னிலங்கை அரசு கருதுகிறது.
விடுதலைப் போராட்டம், தமிழ் மக்களுக்கான ஒரு அரசை தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் அநீதிகளுக்கு எதிரான ஒரு தடையாக இருக்கவேண்டும் என்றும் செயற்பட்டது. ஆகவே, ஆயுதப் போராட்டம் செயற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் வன்னியில் நில அபகரிப்பு இடம்பெறுவதற்கான ஒரு சூழ்நிலை அங்கு இருக்கவில்லை. சிங்கள – பௌத்த அரசின் நில விரிவாக்க மூலோபாயத்தை செயற்படுத்த ஆயுதப் போராட்டம் ஒரு தடையாக இருந்தது. தற்போது விடுதலைப் போராட்டம் இல்லாத ஒரு சூழ்நிலையில் சர்வதேசம் அதனை தடுத்து நிறுத்தும் என தமிழ் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். ஆனால், இதுவரை சர்வதேச சமூகம் எடுத்துள்ள செயற்பாடுகள் எவையுமே தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தபடும் அநியாயங்களை தடுத்துநிறுத்துவதற்காக எடுக்கப்படவில்லை என்றே கூறமுடியும். யுத்த காலப்பகுதியில் எவ்வாறு ஆயுதப் போராட்டம் இந்த அநியாயங்களை ஓரளவேனும் தடுத்துநிறுத்த முற்பட்டதோ, அந்த அளவில்தானும் சர்வதேச சமூகத்தால் நடவடிக்கை எடுக்கமுடியாமல் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அரசியல் இயக்கமொன்றை உருவாக்கவேண்டும்
இன்று எமது தமிழ் தேசிய பிரதிநிதித்துவ தலைமைகள் தமிழ் தேசிய அரசியலை ஆயுதப்போராட்டத்துக்கு முன்னரான மிதவாத அரசியலை நோக்கி கொண்டுசெல்கின்றனர் என நான் நினைக்கிறேன். தமிழ் மிதவாத அரசியல் தேர்தல் காலங்களில் ஒன்றையும், அதன் பின்னர் வேறொன்றையும் கூறியதனால்தான் ஆயுதப் போராட்ட அரசியல் உருவானது என அறிந்தவர்களாக நாங்கள் இருக்கின்றோம். கடந்த மாகாண சபைத் தேர்தலின்போதும் இதனைப் பார்த்திருந்தோம். தமிழ் தேசிய பிரதிநிதித்துவ அரசியலின் முன்னணி செயற்பாட்டாளர்களாக இருக்கக்கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலங்களில் சொல்வதற்கும் நடைமுறையில் அவர்கள் செய்வதற்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பதை அவதானிக்க முடிகிறது. மேலும், தலைமைத்துவம் மக்களின் விருப்புகளை பிரதிபலிக்காமல் – கொழும்பை மையமாகக் கொண்டு முடிவுகளை எடுக்கின்றமையானது மீள தமிழர் அரசியலை 80 முன்னர் இருந்த அரசியல் நிலைக்கு இட்டுச்செல்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
தமிழர் அரசியல் சுயமாக முடிவெடுக்கக்கூடிய தளமாக இல்லாமல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பது மீண்டும் எமது அரசியல் 80களை நோக்கி செல்வதற்கான இன்னுமொரு உதாரணமாகும்.
பிரதிநிதித்துவ அரசியலுக்கு அப்பால் புதிதாக, ஆக்கபூர்வமான, வினைத்திறனான சிந்தனைகளை முன்கொண்டுவந்து தமிழ் மக்களை எவ்வாறு ஒன்றுபடுத்துவது என்பது குறித்து சிந்திக்காத அரசியல் தலைமைத்துவமே தற்போது இருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உதாரணமாக பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தவர், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் இளைஞர்கள் போன்றோரை உள்வாங்கி எவ்வாறு வன்முறையற்ற, ஜனநாயக ரீதியிலான தமிழ் தேசிய அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்புவது என்பது தொடர்பாக எந்தவித முன்னெடுப்பும் மேற்கொள்ளாத தமிழ் தேசிய அரசியல் செல்நெறியை நாம் இன்று கண்டுகொண்டிருக்கிறோம்.
தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. சர்வதேசத்தை நம்பி பயனில்லை என தொடர்ந்து அடக்குமுறைக்குள் வாழ தமிழ் மக்கள் இசைவாக்கம் அடைந்துவிடுவார்களோ என்ற அச்சம் என்னிடத்தில் உள்ளது. இதுவரைக்காலமும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்காக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள் அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம் அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றிக்கொண்டு தமிழ் சமூகத்தை ஒரு அடக்குமுறைக்குள் வைத்திருந்தால் காலப்போக்கில் அவர்கள் வாழப்பழகிவிடுவார்கள் என அரசு எதிர்பார்க்கின்றது.
ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளை தரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையும் உள்வாங்கிய இயக்கம்) இன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம். இந்தத் தலைமை சுயமாக தமிழர் அரசியலை முன்னெடுக்கக்கூடிய வகையில், அரசு சாராது (இந்திய அரசு) களத்திலும், புலத்திலும் எமது நிலைப்பாட்டிருந்து அரசியல் செய்யக்கூடிய வகையில் அமையவேண்டும்.
No comments:
Post a Comment