அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் இணையத்தளங்கள் தொடர்பில் ஆராய பாதுகாப்பு பிரிவின் புலனாய்வு அதிகாரிகளை கொண்ட தனியான புலனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி இணையத்தளங்கள் ஊடாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுவதை தடுக்கவும் அதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயும் இந்த புலனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக சகல செய்தி இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை பகுப்பாய்வு செய்வது, இணையத்தளங்களின் ஊடகவியலாளர்கள், அவற்றின் உரிமையாளர்கள், அந்த இணையத்தளங்கள் பெறும் தொழிற்துட்ப வசதிகள் தொடர்பாக இந்த புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த உள்ளது.
அத்துடன் குறிப்பிட்ட சில இணையத்தளங்கள் பற்றி விசேட விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
இந்த இணையத்தளங்களுக்கு இணையான பெயருள்ள இணையத்தளங்கள் பற்றியும் விசாரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சில மாதங்கள் ரகசியமான விசாரணைகளை நடத்தி பின்னர், ஸ்ரீலங்கா மிரர் மற்றும் ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் ஆகிய இணையத்தள அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.
அத்துடன் இந்த முற்றுகைக்கு முன்னர், குறித்த இணையத்தளங்களுக்கு எதிராக அரச ஊடகங்களில் அவதூறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்திற்கு ஆதரவான ஊடகங்கள் தற்போதும் செய்தி இணையத்தளங்களுக்கு எதிராக அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.
இன்போநெட் உட்பட 8 செய்தி இணையத்தளங்கள் எவ்விதமான நியாயமான காரணங்களும் இன்றி இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவினால் வாசகர்கள் பார்வையிட முடியாது தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த செயற்பாடுகளின் பின்னணியில் சில மோசடியான அரசியல்வாதிகள் மற்றும் பணத்திற்கு அடிபணிந்த அதிகாரிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment