வடமாகாணத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது எமது நில, நீர் வளங்களை படையினர் தொடர்ச்சியாகக் கையகப்படுத்தும் நடவடிக்கையாகும் என்று அவுஸ்ரேலிய தூதுவர்களிடம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையைத் தனித்து இயங்க வைப்பதில் பல்வேறு முட்டுக் கட்டைகள் எமக்கு இருக்கின்றன. இதனால் மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதில் எமக்கு நெருக்கடிகள் உள்ளன. - இவ்வாறு சிறீலங்காவிற்கான ஆஸ்திரேலியத் தூதுவர் ரொபின் மூடியிடம் தான் எடுத்துரைத்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலியத் தூதுவர் ஆஸ்திரேலிய அரசினால் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகள் குறித்து ஆராய்வதற்காக வந்திருந்தினர்.
இதன்போது வடமாகாண சபை முதலமைச்சர் என்ற வகையில் அவர் என்னையும் சந்தித்திருந்தார். இதன்போது வடமாகாண சபை ஆஸ்திரேலியாவிடமிருந்து ஏதாவது உதவிகளை எதிர்பார்க்கின்றதா? வடமாகாண சபை தனித்து இயங்குவதற்குப் போதுமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு, வடமாகாணத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது எமது நில, நீர் வளங்களை படையினர் தொடர்ச்சியாகக் கையகப்படுத்தும் நடவடிக்கையாகும். அரசு தமக்குத் தேவையான செயற்றிட்டங்களை செயற்படுத்த முன் வருகிறார்களே தவிர மக்களுக்குத் தேவையான செயற்றிட்டங்களைச் செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. இவ்வாறு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசால் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்று நான் சுட்டிக்காட்டினேன்.
இதன்போது ஆஸ்திரேலிய அரசால் செய்யக்கூடிய உதவிகளை நாம் பரிசீலித்து வழங்கத் தயாராகவுள்ளோம் என மூடி உறுதியளித்தார் என முதலமைச்சர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment