September 2, 2016

யாழ். பொது நூலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கை வருகை தந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  தீரமானித்துள்ளது.


யாழ். பொது நூலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 அளவில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள்குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலி. வடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

போரின் போதும் அதற்குப் பின்னரும் கடத்தப்பட்டும், சரணடைந்த பின்னர் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென கண்டறிய வலியுறுத்தியும் அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வலியுறுத்தவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் அமைப்புக்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்புக்கள், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அமைப்புக்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தவுள்ள இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ. கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment