August 31, 2016

ஐ.நாவை ஏமாற்றுவதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம்!

இறுதிக்கட்டப் போரின்போது ஓமந்தை, செட்டிகுளம் - மெனிக்பாம் முகாம் உட்பட இந்த மக்கள் சென்ற சகல இடங்களிலுமே ஒன்றுக்குப் பத்துத் தடவைகள் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.


இறுதிக்கட்டப் போரில் சரணடைந்தவர்களுக்கு ஆகக் கூடியளவிலான பதிவுகளை மேற்கொண்ட நாடு தெற்காசியாவிலேயே இலங்கையாகத்தான் இருக்கும். எனவே காணாமல் போனவர்களது விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இருக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இறப்புக்களின் பதிவு சட்டமூலம் தொடர்பான விவாதம் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

காணாமற்போனவர்கள் தொடர்பாகவும், காணாமற்போனவர்களுக்கான தற்காலிகச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாகவும் பலரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்த வண்ணம் இருக்கின்றார்கள். உண்மையில் இந்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அப்பால் அல்லது இவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கு அப்பால் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் உள்ள காணாமற்போனோரின் குடும்பங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவேண்டும்.

பிள்ளைகளை அல்லது உறவினர்களை இராணுவத்தினரிடம் கையளித்தவர்களினதும் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களினதும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வடக்கு, கிழக்கில் இருக்கின்றனர். எனவே, முதற்கட்டமாக வடக்கு, கிழக்கில் இருக்கின்ற காணாமற்போனவர்களது உறவினர்களோடு நேரடியான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டிய தேவையிருக்கின்றது.

அவர்கள் மாவட்டந்தோறும் காணாமற்போனோருக்கான சங்கமொன்றை வைத்திருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் மாவட்ட மட்டத்திலே காணாமற்போனோருக்கான சங்கம் இருக்கின்றது.

அதேபோன்று வடக்கு - கிழக்கு இணைந்த காணாமற்போனோர் சங்கமும் இருக்கின்றது. எனவே, முதலாவதாக அவர்களோடு இந்தக் காணாமற்போனோர் தொடர்பான விடயங்களைக் கலந்துரையாட வேண்டியிருக்கின்றது.

தற்காலிகமாக இரண்டு வருடங்களுக்குக் காணாமற்போனோர் என்று உறுதிப்படுத்திச் சான்றிதழ் வழங்கப்படுவதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா? இல்லையா? அல்லது அவர்களுடைய உண்மையான பிரச்சினைகள் என்ன? என்பன தொடர்பில் ஆராயப்படவேண்டிய தேவையிருக்கின்றது.

காணாமற்போனவர்கள் வெறுமனே ஒரு திருவிழாவிலோ அல்லது அவர்கள் விமானத்தில் சென்றபோதோ காணாமற்போகவில்லை. இறுதிக்கட்டப் போரிலே இராணுவம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஓமந்தையிலும் முள்ளிவாய்க்கால் பகுதியிலுமே பல நூற்றுக்கணக்கானவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள்.

முக்கியமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளது முக்கியஸ்தர் அல்லது 'ஈரோஸ்' அமைப்பினுடைய தலைவராக இருந்த திரு. பாலகுமார், அவருடைய மகன் உட்படப் பல நூற்றுக்கணக்கானவர்கள் அரசாங்கத்தினுடைய வேண்டுகோளை ஏற்றுத்தான் சரணடைந்தார்கள். ஆகவே, இவ்வாறு சரணடைந்தவர்கள் ஒவ்வொருவருடைய பெயர் விபரங்களும் அன்றைய காலகட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளிடம் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும்.

அன்றைய காலகட்டத்திலே யார், யார் சரணடைந்தார்கள்? அவர்களுடைய பெயர், வயது, பால் போன்ற சகல விடயங்களையும் உள்ளடக்கிய விபரம் அதில் இருக்கும்.

இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும்போது ஓமந்தையில் வைத்து இராணுவம் ஒலிபெருக்கியூடாக அழைத்து அரசியல் துறை, நிதித்துறை எனப் பல்வேறுபட்ட துறை சார்ந்தவர்களைத் தரம் பிரித்து பஸ் வண்டியில் ஏற்றினார்கள்.

இதற்கப்பால் 3 இலட்சம் பேர் தங்கவைக்கப்பட்டிருந்த செட்டிகுளம் 'மெனிக் பாம்' முகாமில் அன்றைய காலகட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிசாட் பதியுதீன் இராணுவத்தினருடன் இணைந்து ஒரு நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள் கூடச் சரணடைய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

அவ்வாறு சரணடையத் தவறும் பட்சத்தில் தங்களால் கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யப்படும்போது கடுமையான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஒலிபெருக்கியூடாக வேண்டுகோள் விடுத்தார்கள்.

அதனையடுத்து, 'மெனிக் பாம்' முகாமிலிருந்துகூடப் பலர் சரணடைந்தார்கள். இறுதிக்கட்டப் போரின்போது ஓமந்தை, செட்டிகுளம் 'மெனிக் பாம்' முகாம் உட்பட இந்த மக்கள் சென்ற சகல இடங்களிலுமே ஒன்றுக்கு பத்துத் தடவைகள் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்தவர்களுக்கு ஆகக் கூடியளவிலான பதிவுகளை மேற்கொண்ட நாடு தெற்காசியாவிலேயே இலங்கையாகத்தான் இருக்கும்.

ஒருவர் 10 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டார். அதாவது புலனாய்வுத்துறையினர், இராணுவத்தினர், கடற்படையினர் எனப் பலர் இந்தப் பதிவுகளை மேற்கொண்டார்கள்.

அன்று இந்தப் பதிவுகளை மேற்கொண்டவர்கள், அதற்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகள் இன்னமும் இங்கேதான் இருக்கின்றார்கள். ஆகவே, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களுடைய அல்லது இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுடைய பெயர் விபரங்கள் முழுவதும் இன்று இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றது.

இதற்கு அப்பால் பரணகம ஆணைக்குழுவும் கூட இந்தக் காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்திருந்தது. எனவே, அங்கும் விபரம் இருக்கின்றது. இவ்வளவும் இருக்கத்தக்கதாக மீண்டும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமொன்று அமைக்கப்படுமென இங்கே கூறப்படுகிறது. காணாமற்போனோர் தாங்களாகவே காணாமல் போகவில்லை. அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

ஆகவே, இது உண்மையில் 'காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்' என்றல்ல 'காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்' எனப் பெயர் மாற்றப்பட வேண்டும். இந்த அலுவலகம் தொடர்பாக இந்த நாட்டின் ஜனாதிபதி, 'காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது வெறுமனே தகவலைத் திரட்டுகின்ற அல்லது பதிவுகளை மேற்கொள்வதற்கான ஓர் அலுவலகமே தவிர, இதன்மூலமாக இராணுவத்தினரையோ அல்லது இதுதொடர்பாகக் குற்றமிழைத்தவர்களையோ தண்டிக்கப்போவதில்லை' என்று கூறியுள்ளார்.

அப்படியானால் காணாமற்போனவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் வெறுமனே ஐ.நா.வை ஏமாற்றுவதற்கான ஓர் அலுவலகமாக இருக்கப்போகிறதா?

இந்த அரசாங்கத்திடம் சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் போன்ற சகல விபரங்களும் பாதுகாப்பு அமைச்சிடம் இருக்க வேண்டும். வருடந்தோறும் பாதுகாப்பு அமைச்சுக்காக வரலாறுகாணாத அளவுக்குப் பெருந்தொகையான நிதி ஒதுக்கப்படுகின்றது.

இந்த அமைச்சு இந்த நாட்டிலுள்ள ஒரு முக்கிய அமைச்சாகவும் இருக்கிறது. ஆனால், இந்த அமைச்சில் இருக்கின்ற முக்கியமான விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் காணாமற்போகின்ற நிலைமை காணப்படுகின்றது.

உதாரணமாக, 'மிக்' விமானம் கொள்வனவு, 'அவன்காட்' நிறுவனத்தின் ஆவணங்கள், தாஜுடீன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடல் பதிவு விபரங்கள் காணாமற்போயுள்ளன. இப்படி பாதுகாப்பு அமைச்சிடமிருக்கின்ற முக்கியமான தகவல்கள் - முக்கியமான விடயங்கள் காணாமற்போயுள்ளன.

அத்துடன், இவ்வமைச்சின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருகின்ற பல நூற்றுக்கணக்கான மனிதர்கள் காணாமற்போயிருக்கிறார்கள். ஆகவே. இவை சாதாரணமான சிறிய விடயங்களல்ல. எனவே, பாதுகாப்பு அமைச்சு இன்று பலவீனமான ஒரு நிலையில் இருக்கின்றதா?

காணாமற்போனோருக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கு முன்பதாக வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாட வேண்டிய தேவையிருக்கின்றது. மேலும், இராணுவத்திடம் சரணடைந்தவர்களை, அவர்கள் குற்றவாளிகளாக இருந்திருந்தால் நீதிமன்றத்தில் பாரப்படுத்தியிருக்க வேண்டும், அல்லது சுற்றவாளிகளாக இருந்திருந்தால் விடுவித்திருக்க வேண்டும்.

இதுவரை காலத்தில் இவை இரண்டுமே நடைபெறவில்லை. வெறுமனே சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தைத் திறந்து பதிவுக்கு மேல் பதிவு செய்வதில் எந்தப் பயனுமில்லை.

கடந்த 7 வருட காலமாக தொடர்ச்சியாக காணாமற்போனோரின் குடும்பத்தினர் இலங்கையின் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் ஏறி இறங்காத இராணுவ முகாம்களில்லை. கடற்படை முகாம்களில்லை. பொலிஸ் நிலையங்களில்லை. மேலும் செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை அமைப்புகள் என்று சகல இடங்களுக்கும் இந்தக் குடும்பத்தினர் ஏறியிறங்கியிருக்கிறார்கள்.

அதற்கும் அப்பால் எத்தனையோ நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். வீதியிலே விழுந்து புரண்டு கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார்கள்.

ஆனால், இன்று வரைக்கும் அவர்களுக்கு உண்மையான ஒரு நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமைதான் காணப்படுகின்றது. ஆகவே, கடந்தகாலப் போரினால் ஏற்பட்டிருக்கின்ற அழிவுகள், மனித உரிமை மீறல்கள் என்பவை பற்றிய உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment