August 31, 2016

இலங்கையில் திடீரென மண்ணில் புதையுண்ட ரோலர் இயந்திரம்: அதிர்ச்சியில் மக்கள்!

கினிகத்தேனை - பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரமும்,
அருகில் இருந்த கற் குவியலும் சரிந்து நில தாழிறக்கத்தால் முற்றாக மண்ணில் புதையுண்டிருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் (30) அன்று இரவு 12 மணியளவில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், சுரங்கப்பாதையில் மேற்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் சில வீடுகள் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும், கூறியுள்ளார்.ஏற்கனவே இவ்விடத்தில் 50 அடி ஆழத்தில் வீடு ஒன்று புதையுண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இந்த இடிபாடுகளை சீர் செய்வதற்கு என அமைக்கப்பட்ட கற் குவியலே சரிந்து மண்ணுள் புதையுண்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடனும், அதிர்ச்சியிலும் உரைந்து போயுள்ளனர்.அவ்விடத்திலிருந்து ஏனைய பொது மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முற்றாக மண்ணால் மூடப்பட்டுள்ள ரோலர் இயந்திரம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுவதனால் அதில் ஏற்படும் அதிகமான அதிர்வுகள் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment