August 31, 2016

தமிழீழத் தேசியத் தலைவர் தன்னை பாராட்டியது மறக்க முடியாது!

வானிலிருந்து குண்டுகள் பொழிகின்றன. ஆனையிறவு முகாமிலிருந்து பீரங்கிக் குண்டுகள் ஏவப்படுகின்றன.


ஆனையிறவுச் சமர்க் களத்திற்குச் சமீபமாக யாழ், மாவட்டச் சாரணர் சங்கமும், யாழ். மாவட்டச் சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்களுமாக 150க்கும் மேற்பட்டவர்கள் மனிதாபிமான சேவையை வழங்கியிருந்தோம்.

நிமிடம் தோறும் போராளிகளும், காணுமிடமெங்கும் மக்களும் காயமடைந்து கொண்டிருந்தனர். இதன் போது முதலுதவிகள் செய்து பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். இதன் போது எங்கள் மடியிலேயே பலர் இறந்திருக்கின்றனர்.

இந்நிலையில், எங்களுடைய போராளிகளுக்குச் செய்த உதவியை மறக்க முடியாது என தமிழீழத் தேசியத் தலைவர் தன்னைச் சந்தித்த போது குறிப்பிட்டதாக வல்வெட்டித் துறை நகர சபையின் முன்னாள் தலைவர் வல்வை ந.அனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் சாரணர் சங்கத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு நூற்றாண்டு ஞாபகார்த்த முத்திரை நேற்று வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,



கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து மக்களுக்கு அவசியமான சேவைகளை நாங்கள் செய்வதற்குத் தயாராகவிருக்க வேண்டும்.

வாழும் மக்கள் மிக அரிய முத்திரைகளை வெளியிட்டு வருகிறார்கள். எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு முத்திரை வெளியிடப்பட்டது மறக்க முடியாதது.

இவ்வாறு முத்திரை வெளியிடப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. அவுஸ்திரேலியா அரசாங்கம் அதற்கு விட்டுக் கொடுக்கவில்லை.



இவ்வாறு முத்திரை வெளியிடுவது மக்களின் அடிப்படை உரிமை. அவர்கள் தாங்கள் விரும்பியவற்றைச் செய்வதற்கு இங்கு தடையில்லை. எங்களால் இதனைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறியது.

தற்போது தமிழீழத் தேசியத் தலைவரின் முத்திரை பரவலாக அனைத்து நாடுகளிலும் உள்ளது. அதேபோன்று பேராசிரியர் சிவத்தம்பிக்கும், புரவலர் வைத்திலிங்கப் பிள்ளை ஆகியோருக்கும் முத்திரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் சர்வதேச ரீதியாக அனைவரது மனதிலும் ஆழமாகப் பதிந்து முத்திரை பதித்த சாரணர் இயக்கத்திற்கு இன்று முத்திரை பதித்து வெளியிடுகின்றமை பெரிதும் வரவேற்புக்குரியது.


நான் கணடாவிற்கும், நியூசிலாந்திற்கும் சென்ற போது நியூசிலாந்து மாவட்டச் சாரணர் ஆணையாளர் அலுவலகத்தையும், மாவட்டச் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் அலுவலகத்தையும் சென்று பார்வையிட்ட போது நான் வெட்கப்பட்டேன்.

அங்கு ஒவ்வொரு அலுவலகங்களிற்கும் போதியளவிலான அனைத்து வசதிகளையும் அந்த நாட்டு அரசாங்கங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால், எமது நாட்டு அரசாங்கம் அவ்வாறான எந்தவித வசதிகளையும் ஏற்படுத்தாமை கவலையளிக்கிறது.

வடமாகாண சபையின் ஊடாக யாழ். மாவட்டத்தில் சாரணர் சங்கத்தையும், சென்.ஜோன்ஸ் அம்புலன்சையும் மீண்டும் புத்துயிர் பெற வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.








No comments:

Post a Comment