August 11, 2016

புலிகளின் தலைவரின் இன்னல்களில் மதிவதனியின் ஆறுதல்!

தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் பல இன்னல்களுக்கு மத்தியிலும் பிரியாமல் என்றுமே கூட பயணித்த “அண்ணி” மதிவதனி அவர்கள்.


வரலாறாய் வாழும் தமிழிச்செல்வன் எனும் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் நினைவுக்குறிப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அவர்கள் தலைவர் குடும்பம் அன்று எதிர்நோக்கிய பிரச்சினைகள் பற்றி விபரிக்கையில் “அண்ணி” மதிவதனி அவர்களின் வாழ்வு எமது போராட்ட பாதையில்……

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். நாம் திட்டமிடுவதற்கு அவகாசம் எதையுமே எமக்குத்தராத திடீர்நெருக்குதல். தேசத்தின் விடுதலைக்கான பற்றுறுதி, எதற்காகவும் விடுதலைப்போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் முன்நிறுத்திய முடிவுகள். யாழ்ப்பாணம் கொக்குவில் எமது தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அவரைக் கொன்றுவிடும் முடிவில் தரையிறங்கினர் இந்திய இராணுவ அதிரடிப் பராத்துருப்பினர். இன்னொரு தளத்தில் நின்று விடுதலையை வழிநடாத்தவேண்டியது தலைவரின் கட்டாயமானது.

தலைவரிடமிருந்து மனைவியாரும், பிள்ளைகள் இருவரும் பிரிந்து, தனித்திருப்பது தவிர்க்கமுடியாத தானபோது அவர்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றது தமிழ்ச்செல்வன்.

ஆரம்பசிலநாட்கள் அவன் ஒழுங்கு செய்து கொடுத்த வீடுகளில் மாறிமாறி நின்ற போதும், இந்தியப்படை வெறியாட்டமாடி மக்களை அச்சுறுத்தி, தலைவரது குடும்பமென குறிப்பிட்டு தேடத்தொடங்க, மதியக்காவும், பிள்ளைகளும் மிகவும் சிரமப்பட்டனர்.

மூன்றுவயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவருடன் தம்மையே குறிவைத்துநடந்த பெரும்தேடுதல்களில் சரியான உணவுமின்றி வீடுகளில், வயல்களில், ஆளில்லாக் காணிகளில் என்று அவர்கள் அக்காலப் பகுதியில் ஆருமின்றி அலையும்நிலை வந்தது. எல்லாஊரையும் ஒரே வேளையில் வளைக்கும் பெரும்படை முற்றுகை. ஏதாவதொரு ஊருக்குள் தலைவரின் குடும்பம் சுற்றிவளைக்கப்பட இன்னொரு ஊருக்குள் அதேமாதிரி தமிழ்ச்செல்வனும் அகப்பட்டிருப்பான்.

இந்த நேரம் பார்த்து அந்தப்பகுதியில் இந்தியப் பத்திரிகை நிருபர்கள் இருவர் ஆண் பெண்ணாக நடமாட, அது தலைவரும், அவரது மனைவியும்தானென எண்ணி இந்தியப்படை தம் தேடுதலை உச்சமாக்க தலைவரின் குடும்பத்தினர் பட்டபாடு கொஞ்சமல்ல. மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டின் தகவலறிந்து சென்றனர் இந்தியப் படையினர்.

ஆட்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் உண்மையான தகவலொன்றை அறிந்துவிட்டனர். தலைவரின் மகள் குழந்தை துவாரகா நோயுற்றிருந்த தகவல் அது.

அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட தீவிரநோயுற்ற பிள்ளையும், தாயும் தப்பிவிட்டதை அறிந்த படையினர் செய்தி வெளியிட்டு விட்டனர். வயிற்றோட்டத்தால் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இந்தியா வெளியிட்ட செய்தியின் உண்மை – பொய் தெரியாது கலங்கிநின்றது தேசம். எல்லோருடனும் எல்லாத்தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்த நேரமது. பலநாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனின் சிறுக டிதக் குறிப்பிலேயே தன் மகள் உயிருடனிருப்பதை அறிந்தார் தலைவர். அக்காவும், பிள்ளைகளும் மட்டுவில் சென்ற பின்னர் காணிக்கை அண்ணரின் வீட்டடியைச் சுற்றியே சுழலும் தமிழ்ச்செல்வனின் மனம்.

‘எம் நாட்டின் தலைவரின் வீட்டாரை காப்பாற்றித்தந்த பெருந்தகை காணிக்கை அண்ணர்’ தலைவரது மனைவியும், பிள்ளைகளும் அங்கேதான் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தித் தெரிந்தபின் அவர்களை நோக்கிய இந்தியத் தேடுதல் அதிதீவிரமான போதும் நெஞ்சுரத்துடன் கைகொடுத்த நாட்டுப்பற்றாளர் அவர். தமது தேடுதலிலிருந்து தலைவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி அனுப்பியது அவர் தானென்று தெரிந்த போது இந்தியப் படையினர் தமது கைக் கூலிகளை ஏவிவிட்டு காணிக்கை அவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தனர்.

கிராமத்துச் சுற்றிவளைப்பில் இந்தியப்படை முற்றுகைக்குள் மதியக்காவும், பிள்ளைகளும் – முற்றுகைக்கு வெளியே நெஞ்சுபதறக் காத்திருப்பான் தமிழ்ச்செல்வன். ‘அவன் அவர்களைச் சந்திப்பதும் பிரச்சனை’ அவர்களை அடையாளம் காட்டுவதாய் அமைந்துவிடும். விலகியே இருப்பான். ஆனால் விலகாமல் இருப்பான்.

“தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த வேளையில் அலெக்ஸ் போல்” – அந்தக் காலத்தில் அவனது நம்பிக்கைக்குரிய போராளி வின்சன் – கெங்காதரன் மாஸ்ரரின் மகன் – மட்டுவில் சென்று மதியக்காவையும், பிள்ளைகளையும் பார்த்து விட்டு வரவேண்டும். இப்போது வந்துசேர்ந்திருக்க வேண்டுமே? காணவில்லையே? வின்சனுக்கு என்னவானது? அக்காவிற்கு, பிள்ளைகளுக்கு என்னவானது? நெஞ்சுபதற அன்று தமிழ்ச்செல்வன் மனம் துடித்து நின்றதை இன்றும் மறக்கமாட்டார்கள் அவனது நண்பர்கள்.

ஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி!. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.

அக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.

வின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை.

இனி வேறு வழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்க முடியாததானது.

இந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக் கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, படம் போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர்.

தலைவரின் குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ச.பொட்டு அவர்கள் எழுதிய “வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்” எனும் நினைவுக்குறிப்பில் இருந்து ……..

No comments:

Post a Comment