July 19, 2016

தமிழகத்தை மிரட்டிவரும் கூலிப்படைகள்!

கூலிப்படைக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கும் அளவுக்கு தமிழகத்தில் மிக அபாயகரமான சூழல் நிலவுகிறது.


அரசியல், தொழில்போட்டி போன்ற காரணங்களுக்காகக் கூலிப்படையை வைத்து எதிராளிகளைப் போட்டுத்தள்ளுவது என்று இருந்த நிலைமை இப்போது, கணவனை காலி செய்ய மனைவியும், மனைவியின் கள்ளக்காதலனைப் போட்டுத்தள்ள கணவனும், மருமகனை தீர்த்துக்கட்ட மாமியாரும்... எனக் குடும்பப் பிரச்னைகளுக்குக்கூட கூலிப்படையை அனுப்பி ஆளை அட்ரஸ் இல்லாமல் ஆக்கும் கலாசாரம் தமிழகத்தை மிரட்டி வருகிறது.

கூலிப்படையின் பின்னணி!

பணம் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் கொலை செய்பவர்களே கூலிப்படையினர். ஒருவரின் கதையை எப்படி முடிக்க வேண்டும் என்று ‘ஸ்கெட்ச்’ போட்டுக் கொடுக்கத் தனி டீம், அதைச் செயல்படுத்த ‘ஆபரேஷன்’ டீம், கொலை செய்ய வேண்டிய நபரின் நடமாட்டத்தைக் கண்காணித்து ரிப்போர்ட் கொடுக்க ‘ஒற்றர்கள்’ டீம் என கூலிப்படைகளில் தனித்தனி டீம்கள் உண்டு. பணம் கொடுப்பவர்களே இவர்களின் எஜமானர்கள்.

தமிழ்நாட்டில் ஏராளமான கூலிப்படை குழுக்கள் செயல்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே கூலிப்படையில் அதிகம். இதில், 20 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்பதும், 18 வயது நிரம்பாத மைனர்களும் உண்டு என்பதும் அதிர்ச்சித் தகவல்.

கூலிப்படை கொலையாளிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதை ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் சசிகுமார் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். ஜாலியாக ஊருக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் இளவட்டப் பசங்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்யும் அரசியல் புள்ளி ஒருவர், அதற்குப் பிரதிபலனாக சென்டிமென்டாகப் பேசி கொலை செய்யத் தூண்டுவார். அவர்கள் சிறைக்குச் சென்ற பிறகு, அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார். சிறைக்குள் ஏற்படும் நட்புக்காக வெளியில் வந்து மீண்டும் அவர்கள் கொலை செய்யவார்கள். அவர்களின் வாழ்க்கை அதே திசையிலேயே போகும்.

ரேட் என்ன?

கொலை செய்யப்பட வேண்டிய நபரின் பின்னணியை வைத்து ரேட் ஃபிக்ஸ் பண்ணுகிறார்கள். சாதாரண நபர் என்றால் ரேட் குறைவாக இருக்கும். அரசியல்வாதி, தொழிலதிபர் என வி.ஐ.பி அந்தஸ்த்தில் இருப்பவர்கள் என்றால், ரேட் பல மடங்கு எகிறும். கூலிப்படையினர் ஒரு கொலையை நிகழ்த்திவிட்டால், பல நேரங்களில் அந்தக் கொலைக்குச் சம்பந்தம் இல்லாத டம்மியான ஆட்களே நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள்.

மொத்தமாக ரேட் பேசும் கூலிப்படையினரும் உண்டு. கொலை செய்வதற்கான கூலி, வழக்கு நடத்துவதற்கான செலவு என மொத்தமாகப் பணம் வாங்கிக்கொள்வார்கள். சிலர், கொலை செய்வதற்கு தனி ரேட் வாங்கிக்கொள்வார்கள். யார் கொலை செய்யச் சொல்கிறாரோ, அவர், வழக்கைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

கூலிப்படையில் இருந்த ஒருவரிடம் பேசியபோது, “மற்ற தொழில்களைப்போல, இதுவும் எங்களுக்குத் தொழில். அவ்வளவுதான். பணத்துக்காக நாங்கள் கொலை செய்கிறோம். மற்ற எந்தத் தொழில் செய்தாலும் அதற்கு முதலீடு செய்யப் பணம் தேவைப்படுகிறது. இதற்கு முதலீடு எதுவும் தேவையில்லை. உறுதியான உடலும் மன தைரியமும் இருந்தால் போதும். இதில், பணத்தைச் சம்பாதிப்பது ஈஸியாக இருக்கிறது” என்று கூசாமல் சொல்கிறார்.

ஏன் இப்படி?

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூகப் பிரச்னைகள் காரணமாகவே கூலிப்படைக்குப் பலர் செல்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களும்கூட கூலிப்படையாக மாறும் போக்கு வேதனைக்குரியது. மாணவர்களுக்கு இடையே நடக்கும் சிறு சிறு மோதல்களின்போது, கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் சில உதவிகளைச் செய்து அந்த மாணவர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்கிறார்கள்.

கூலிப்படையினரிடம் சிக்கிக்கொள்ளும் அந்த இளைஞர்களின் வாழ்க்கை திசைமாறிப் போகிறது. அவர்களால், கூலிப்படையில் இருந்து வெளியேறவே முடியாது. சொந்த பந்தங்களை மறந்துவிட்டு மும்பை, சென்னை எனப் பல ஊர்களிலும் தலைமறைவு வாழக்கையை வாழப் பழகிக்கொள்கிறார்கள்.

சாதி ஆதிக்கம்!




கூலிப்படைகளில் எல்லாச் சாதியினரும் இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள், சாதியாகவே ஒன்று சேருகிறார்கள். ஒரு கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்றால், சிறைக்குள் ஏற்படும் தொடர்புகளை வைத்து பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஒரு டீம் ஆகச் சேர்கிறார்கள். பல மாவட்டத்துக்காரர்கள் ஒரு டீமில் இருந்தாலும் அவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

சாதிய அமைப்புகளுக்குத் தலைமை தாங்கும் சிலரும் கூலிப்படைகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்டம் ஒன்றில், ஒரு பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே சில மாணவர்கள் சேர்ந்து கல்லூரி முதல்வரை வெட்டிச் சாய்த்தனர்.

அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜாமீனில் எடுப்பதற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு முன்பாகவே களமிறங்கினார், சாதிய பின்புலம் உள்ள ஒரு தலைவர். இப்போது, அந்தத் தலைவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் அந்த இளைஞர்கள் ‘செயல்பட்டு’ வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

மும்பை அடைக்கலம்!

ஆதாரங்களை அழிப்பதில் கூலிப்படையினர் மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்கள் தங்கியிருக்கும் இடமும் இரகசியமாகவே இருக்கும். தங்களின் இருப்பிடம் போலீஸுக்குத் தெரிந்துவிட்டது என்பதை அறிந்தால் அடுத்த நிமிடமே இடத்தைக் காலி செய்துவிடுவார்கள். மிகவும் ரிஸ்க் இருப்பதாக உணர்ந்தால், உடனே மும்பைக்குச் சென்று பதுங்கிவிடுவார்கள். தமிழ்நாட்டில் முக்கியமான பல கொலை வழக்குகளில் தொடர்புடைய கூலிப்படை கொலையாளிகளில் பலர் தற்போது மும்பையில் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறார் சிறை டு கூலிப்படை!

குற்றச்செயல்களில் ஈடுபட்டுச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்படு வோரும்கூட, கூலிப்படையில் சேரும் போக்கு உள்ளது. இதுகுறித்து சமூகநலத் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரியிடம் பேசியபோது, “சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள், விசாரணைக்காகச் சிறுவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அங்கு காத்திருக்கும் கூலிப்படையினர், அந்தச் சிறுவர்களை உன்னிப்பாக நோட்டமிடுவார்கள். 18 வயது நிறைவடைந்த உடன் அந்தச் சிறுவர்கள், பொதுவான சிறைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அங்கு, அந்தச் சிறுவர்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களிடம் ஆறுதலாக இருந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். பிறகு, கஞ்சா போன்ற போதை வஸ்துகளுக்கு அவர்களைப் பழக்கி, படிப்படியாகத் தங்கள் வலைக்குள் கொண்டு வந்து கூலிப்படைக்குத் தயார் செய்கிறார்கள்” என்றார்.

கொலை செய்வது ஃபேஷன்!

கூலிப்படையாக இளைஞர்கள் மாறுவதற்கு வேலையின்மை என்பது முக்கியக் காரணமாக இருக்கிறது. கொலை செய்வதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதற்குப் பலர் தயாராக இருக்கிறார்கள். எனவே, ஒரு கொலையை செய்வதன் மூலம் இவர்களால் எளிதாகப் பெரும் பணத்தை சம்பாதிக்க முடிகிறது.

அரசியல்வாதிகள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர் தங்களுக்கு ஒரு பாதுகாப்புப் பின்புலம் வேண்டும் என்பதற்காகக் கூலிப்படையினரை வைத்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. செல்வாக்கு மிகுந்தவர்களின் நிழலில் இருப்பதால் இத்தகைய கூலிப்படையினருக்கு சட்டம் உட்பட எதைப்பற்றியும் அச்சம் இருப்பதில்லை.

எனவே, அவர்கள் தொடர்ந்து குற்றங்களைச் செய்கிறார்கள். கொலை செய்வதை ஒரு ஃபேஷன் மாதிரி நினைக்கிறார்கள். சாதி சார்ந்தும், மதம் சார்ந்தும் கூலிப்படைகள் உருவாகிவிட்டன. முறையாக விசாரணை செய்தால் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பெரும்பாலான வழக்குகளில் முறையான விசாரணை நடப்பதாகத் தெரியவில்லை” என்கிறார் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜு தாகூர்.

கூலிப்படையினரைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

தமிழகத்தில் ஆண்டுக்கு 1,800 - 2,000 கொலைகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இவற்றில், 35-40 சதவிகிதம் கூலிப்படையினர் செய்த கொலைகள்தான். ஐயாயிரம், 10 ஆயிரம் ரூபாய்க்கு எல்லாம் கொலை செய்கிறார்கள். எட்டுப்பேர் ஒரு கொலையில் ஈடுபட்டால், 2 அல்லது 3 பேர்தான் போலீஸில் சிக்குவார்கள். இவர்கள் சில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வருகிறார்கள்.

அடுத்த சம்பவத்தில் ஈடுபடும்போது இவர்கள் வெளியில் இருக்க, மற்றவர்கள் சிறைக்குச் செல்வதற்கு பிளான் பண்ணிச் செயல்படுகிறார்கள். கூலிப்படையை இயக்குபவர்கள், கொலை செய்ய சொன்னவர்கள் போலீஸில் சிக்குவதில்லை. அதேபோல் ஊர்விட்டு ஊர் சென்றுதான் கொலை செய்கிறார்கள்.

கூலிப்படைக்கு பின்னணியில் அரசியல், தொழில், சாதி உள்ளன. கூலிப்படையினருக்கு வெறும் தண்டனை கொடுத்தால் மட்டுமே இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியாது. இவர்களின் பொருளாதாரப் பின்னணி, சமூகப் பின்னணியை ஆய்வுசெய்து அவர்களுக்கு மறுவாழ்வுக்கு வழி செய்ய வேண்டும்” என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர்.

சமூகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது, எவ்வளவு மோசமாக மாறும் என்பதற்கு அடையாளம்தான் இந்தக் கூலிப்படையினர்!

மதுரையும் கூலிப்படையும்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், இப்போது கூலிப்படையினர் வளர்ந்துகொண்டு இருக்கிறார்கள். பிழைப்புக்காக மதுரைக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களில் சிலரே இதற்குக் காரணம். வேறு பகுதிகளில் இருந்து பிழைப்புத் தேடி மதுரையில் செட்டில் ஆனவர்கள், ஏலம் எடுப்பது, சாராயக் கடைகள் நடத்துவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது... எனச் செயல்பட்டனர்.

அரசியல் கட்சிகளில் முக்கியப் பதவிகளைப் பிடிக்க தங்களுக்குப் பின்னால் ஒரு கும்பலை வைத்துக்கொள்ள விரும்பினர். அதற்கு, வேலையில்லாமல் சுற்றித் திரிந்த இளைஞர்களை இவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். தங்களுக்குப் பிடிக்காதவர்களை மிரட்டவும், அவர்களின் உயிரை எடுக்கவும் இந்த இளைஞர்களைப் பயன்படுத்திக்கொண்டனர். அப்படி அடியாட்களாக வலம் வந்த பலர், இன்று மதுரையில் பல அரசியல் கட்சிகளிலும் முக்கியப் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.

சிறைக்குள் கூலிப்படை!

சிறைக்கும் கூலிப்படைக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. கூலிப்படையைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகள் சிலர், சிறைக்குள் இருந்தவாறு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பார்கள். இங்குள்ள சிறைச்சாலைகள் எப்படி இருக்கின்றன தெரியுமா? “நம்முடைய சிறைச்சாலைகள் கிரிமினல்களின் கூடாரங்களாக விளங்குகின்றன.

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், எட்டு மணி நேரத்துக்கு மட்டுமே சிறை அறையில் அடைக்கப்படுகிறார். ஆனால், 16 மணி நேரம் திறந்தவெளியில் சுதந்திரமாக உலவுகிறார். அங்கு எல்லாக் கிரிமினல்களும் சந்தித்துக்கொள்கிறார்கள், குழுக்களாக உருவாகிறார்கள், குற்றங்கள் தொடர்பான விஷயங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அடுத்து, நிகழ்த்தவிருக்கும் குற்றத்துக்கான திட்டங்களை வகுக்கிறார்கள்.

இத்தகைய சுதந்திரம் நம் சிறைச்சாலைகளில் இருக்கிறது” - இவ்வாறு, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான கே.ராமானுஜம், தமிழ்நாடு காவல் துறையின் தலைவராக இருந்தபோது சொன்னார்.

போலீஸிடம் கணக்கு இல்லை!

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சுப.முத்துக்குமார் 2011-ம் ஆண்டு கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில், தமிழகத்தில் செயல்படும் கூலிப்படைகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. கூலிப்படை யினர் பற்றிய விவரங்கள் காவல் துறையிடம் இல்லை என்று தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்தது. சூப்பர் பதில்!

கூலிப்படையும் போதையும்

கூலிப்படையைப் பொறுத்தவரையில் பச்சிளம் குழந்தை, முதியவர்கள், பெண்கள் என யாருக்கும் ஈவு இரக்கம் காட்ட மாட்டார்கள். யாரை வேண்டுமானாலும் கொலை செய்வார்கள். அதற்குப் பணம் மட்டுமல்லாமல், போதையும் ஒரு முக்கிய காரணம். தினமும் மதுவும் கஞ்சாவும் இல்லாமல் கூலிப்படையினரால் இருக்க முடியாது.

No comments:

Post a Comment