June 27, 2016

தாய் நாடு திரும்பும் இடம்பெயர்ந்தோர்!

அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய (UNHCR) வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் 36 இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து 2016 ஜூன் மாதம் 28ஆம் திகதி இலங்கைக்கு வருகைதர உள்ளனர்.


இவர்கள் சென்னையிலிருந்து மிஹின்லங்கா விமானசேவை (MJ 130) இனூடாக மு.ப. 11.45 மணியளவில் வருகைதர உள்ளனர்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் கௌரவ அமைச்சர் சுவாமிநாதன் அவர்களின் முயற்சியால் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சும் மிஹின்லங்கா விமானசேவை நிறுவனமும் அவர்களது பயணப்பொதியின் அளவையும் அதிகரித்துள்ளது.

இவ் அகதிகள் 36 பேரில் 20 ஆண்களும் 16 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு மீள்குடியமர்வதற்காக வருகை தருகின்றனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

இவர்களுக்கு இலங்கையை வந்தடைவதற்கு இலவசமாக விமானபயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படும்.

அத்துடன் மீள் சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 19 அமெரிக்க டொலர்களும், உணவு அல்லாத பணநன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படுகின்றது என அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி அவர்கள் தெரிவித்தார்.

2011ம் ஆண்டிலிருந்து மொத்தமாக 4,799 இலங்கை தமிழ் அகதிகள் (1,741 குடும்பங்கள்) தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் 64,000 பேர் இந்தியாவிலுள்ள 109 முகாம்களில் இருக்கின்றனர்.

மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்தியாவில் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்ததன் பேரில் தற்போது அமைச்சினால் ஆகக்கூடிய தொகையாக 100,000 ரூபா தாயகம் திரும்பும் தமிழ் அகதிகள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக வழங்கப்படுகின்றது.

மேலும் மீள்குடியமரும் மக்களுக்கு 6 மாதகாலத்திற்கு உலர் உணவுகளை வழங்குவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ் அமைச்சானது, வீடுகள் மற்றம் தமது உறவினர்களை இழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நட்ட ஈடுகளை வழங்குமாறு, ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபைக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

வீடுகளை இழந்தவர்களுக்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

அரசாங்கமானது இந்தியாவிலிருந்து கட்டம் கட்டமாக சுயவிருப்பில் இலங்கைக்கு அகதிகளை அழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், அதிகரித்த அகதிகளின் வருகையானது நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான சமிஞ்சையாக காணப்படுவதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment