June 15, 2016

வாகன நெருக்கம் மிக்க நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்!

ஜேர்மனி நாட்டில் சிறிய ரக விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறை தொடர்ந்து வாகன நெருக்கம் மிக்க நெடுஞ்சாலையில் விமானம் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Lower Saxony என்ற நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் பறந்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 66 வயதான விமானி இந்த விமானத்தை ஓட்டிச்சென்றுள்ளார்.

அப்போது, விமானம் நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது அதன் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தின் வேகம் குறைந்து கீழே விழுவது போன்று பறந்துள்ளது. சூழ்நிலையை உணர்ந்த விமானி அவரசமாக கட்டுப்பாட்டை அறையை தொடர்புக்கொண்டுள்ளார். அவசர தகவலை பெற்ற அதிகாரிகள் அருகில் உள்ள Oelde விமான நிலையத்தில் இறங்குமாறு ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால், விமானத்தின் உயரம் குறைந்துக்கொண்டு சென்றதால், விமான நிலையத்திற்கு பறக்க முடியாது என்பதை விமானி உணர்ந்துள்ளார்.
உடனடியாக விமானத்தை தாழ்வாக செலுத்திய அவர் அங்கிருந்த நெடுஞ்சாலையில் இறக்கி ஓட்டியுள்ளார். சிறிது தூரம் சென்ற விமானம் எதிரே வந்த லொறி மீது மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் விமானத்தின் இறக்கை ஒன்று சேதம் அடைந்துள்ளது. எனினும், விமானியும், லொறி ஓட்டுனரும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். நெடுஞ்சாலையில் விமானம் தரையிறங்கியது தொடர்ந்து அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment