June 30, 2016

யுத்தம் பதித்து சென்ற வடுக்கள்! மாற்றுத்திறனாளிகளின் குமுறல்!

எனக்கும் ஏனைய பெண்பிள்ளைகளைப் போல வாழ ஆசைதான். ஆனால் யுத்தம் என்னுடைய வண்ணக் கனவுகளைச் சிதைத்து விட்டது. எனது திருமணத்துக்கு எல்லா இடங்களிலும் மாப்பிள்ளை பார்த்தார்கள்.


ஆனால் என்னுடைய புகைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு கையில்லை என்று எல்லோருமே நிராகரித்து விட்டார்கள். நாங்கள் இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து நந்திக்கடல் ஊடாக சென்று கொண்டிருக்கும் போதே ஷெல் பட்டு என்னுடைய வலது கையை இழந்தேன்.

எனது சகோதர சகோதரிகள் அனைவரும் திருமணம் முடித்து சென்று விட்டார்கள். நானும் எனது வயதான பெற்றோருமே இப்போது வீட்டில் இருக்கின்றோம்" என்கிறார் கார்த்திகா (30 வயது).

எனக்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் செயற்கைக் கால்கள் இரண்டு வழங்கப்பட்டன. ஆனால் கடந்த ஜனவரி மாதமளவில் அந்த செயற்கைக் கால்களும் உடைந்து விட்டன" என்கிறார் தயாளன் கலைப்பிரியா ( வயது 27).

இவை கொடிய யுத்தத்தினால் மாற்றுத்திறனாளிகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட இரு பெண்களின் ஆதங்கம் கலந்த வார்த்தைகளாகும்.

இலங்கையில் மூன்று தசாப்தத்துக்கு மேலாக இடம்பெற்ற போரினால் ஏற்பட்ட சொல்லொணா துயரங்களை இன்றும் மக்கள் வாழ்க்கையில் அனுபவித்து வருகின்றார்கள். அந்த வகையில் யுத்த நிலைமைகளினால் தமது அங்கங்களை இழந்தவர்கள் மனதளவிலும், உடலளவிலும் அதிக வலிகளை சுமந்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

கையில்லை, காலில்லை, கண்ணில்லை, காது கேட்கவில்லை என்ற உடல் ரீதியான பாதிப்புகள் ஒரு பக்கமிருக்க தன்னால் எதையும் இன்னுமொருவரின் உதவியின்றி செய்ய முடியவில்லையே என்ற எண்ணமானது அவர்கள் மத்தியில் உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஏதோவொரு வகையில் மாற்றுத்திறனாளியாக்கப்பட்டவர்கள் 18104 பேர் இருப்பதாக வடமாகாண சமூக சேவை திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அரசசார்பற்ற நிறுவனங்களின் தரவுகளின்படி 20000-- முதல் 30000 வரை மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்த நிலைமை காரணமாக வலுவிழப்புக்குட்பட்டவர்கள், நேரடியாக போரில் பங்குபற்றியவர்கள், போர்ச் சூழலினால் வலுவிழப்புகளை சந்தித்தவர்கள், கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட போர் சூழல் அதிர்ச்சிகளினால் வலுவிழப்புகளுடன் பிறந்தவர்கள் என பல வகைகளாக இவர்களைப் பிரிக்கலாம்.

பொதுவாக இயற்கையாகவே வலுவிழந்தவர்களாகப் பிறந்து வாழ்ந்தவர்களிடம் தங்களுடைய வலுவிழப்பை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் ஒரளவுக்கு இருக்கும். காரணம் அவர்கள் சிறுவயது முதலே வலுவிழப்பை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப வாழப் பழகியிருப்பார்கள்.

ஆனால், யுத்தத்துக்கு முன் அல்லது இடம்பெயர்வுகளுக்கு முன் தனது சொந்தக் காலில் நின்று தனது சுய முன்னேற்றத்துக்காகவும், தனது குடும்பத்தின் முன்னேற்றத்துக்காவும் உழைத்தவர்களுக்கு யுத்த நிலைமைகளினால் ஏற்பட்ட வலுவிழப்பினை தாங்கிக்கொள்ளும் தன்மை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

இதில் கவலையளிக்கும் விடயம் என்னவென்றால், ஒருகாலத்தில் சிறந்த வாழ்க்கையை நடத்திச் சென்ற பலர் இன்று சக்கர நாற்காலிகளே தஞ்சம் என வாழ்கின்றார்கள். அதுமட்டுமின்றி அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் பல மாற்றுத்திறனாளிகள் பாரிய பொருளாதார நெருக்கடிகளையும் சந்திக்கின்றனர். பலர் நிரந்தர வீடுகள் இன்றி தற்காலிக குடிசைகளில் பிள்ளைகளுடன் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இதைத் தவிர இளம் வயதிலேயே மாற்றுத்திறனாளிகள் என்ற நிலையில் வாழ்பவர்கள் தமது உடல் ரீதியான உணர்வுகளுக்கும் தனது இயலாமைக்கும் இடையில் புறக்கணிக்கப்படும் போது பாரிய உளரீதியான தாக்கங்களுக்கு உள்ளாவதாக உளவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்க மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களினால் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் அவற்றின் உண்மைநிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால், அவை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாகவிருப்பதுடன், மாற்றுத்திறனாளிகளின் தேவையறிந்து அவை வழங்கப்படுவதுமில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் தங்கிவாழும் நிலைக்கே செல்வதாக பாதிக்கப்பட்ட பலர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நாம் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பான புதுக்குடியிருப்பு 'ஒளிரும் வாழ்வு' என்ற அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினோம்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை காரியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரும், மாற்றுத்திறனாளிகளுக்கான புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவருமான ராஜ் குமார் (39 வயது) இது தொடர்பாக தெரிவிக்கையில்,

நானும் யுத்த காலத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் என் பார்வையை இழந்து விட்டேன்.அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் கஷ்டங்களை நானும் வாழ்க்கையில் அனுபவித்துள்ளேன். எங்களுடைய பிரதேசத்தில் சில மாற்றுத்திறனாளிகள் சக்கரநாற்காலிகள், செயற்கைக் கால்கள், விசேட மலசலகூட வசதிகள் கூட இல்லாமல் அவதிப்படுகின்றார்கள்.

அதைத் தவிர அவர்களுக்கான மருத்துவ வசதிகளுக்காக பெரும் தொகையான பணம் செலவழிகின்றது. அரசாங்கத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்கப்பட்டாலும் அவை அவர்களின் செலவுகளுடன் ஒப்பிடுகையில் போதுமானதாகவில்லை எனத் தெரிவித்தார்.

எங்களுக்கென்று தொழிலொன்று இருக்குமானால், நாங்கள் யாரிடமும் தங்கியிருக்க வேண்டிய தேவையிருக்காது. இதுவரை எங்களுக்கு எந்தவித தொழில் பயிற்சிகளும் கிடைக்கவில்லை. அரச சார்ப்பற்ற நிறுவனமொன்றினால் தட்டச்சு இயந்திரமொன்றைத் தந்தார்கள். அதை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியவில்லை. அதனால் அதில் எந்தப் பயனுமில்லை" என்கிறார் இராசம்மா எலிசபெத் (39 வயது).

யுத்தத்துக்கு பிறகு முகாம்களில் இருந்த காலத்தில் அரசாங்கத்தினால் எங்களுக்கு எந்தவித பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. அதன்பிறகு தேவாலயத்தில் எங்களுக்கு பைகள் தயாரித்தல் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனால், அதற்கு பிறகு அதற்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதிலும்,உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் சிக்கல்கள் உருவாகியமையால் அதை என்னால் தொடர்ந்து செய்ய முடியாமல் போனது என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத மாற்றுத்திறனாளியொருவர்.

வைத்திய சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு வைத்தியர்கள் கூறியிருக்கின்றார்கள். ஆனால் எனக்கு வைத்தியசாலைக்கு பஸ்ஸில் செல்ல முடியாது. அரசாங்கத்தினால் மாதாந்தம் 3000 ரூபா தருகின்றார்கள். ஆனால், அதை அப்படியே மருந்துகளுகே செலவழிக்கப் போனால், வீட்டில் எல்லோரும் பட்டினி கிடக்க வேண்டியது தான் என்கிறார் கவலையுடன் கிருஷ்ணலீலா (32).

நான் ஒரு முன்னாள் போராளி. எனக்கு இறுதிக் கட்டப் போரின் போது ஷெல் பட்டது. இன்றும் எனது உடலில் ஷெல் துண்டுகள் காணப்படுகின்றன.தடுப்பில் சிகிச்சைகள் சரியாக வழங்கப்படவில்லை. அவற்றை சிகிச்சை மூலம் அகற்ற பெருமளவான பணம் செலவாகும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றார்கள். என்னிடம் அவ்வளவு பணமில்லை. எனது குடும்பத்தின் செலவுகளுக்காக முச்சக்கரவண்டி ஓட்டுகின்றேன். ஆனால், என்னால் அதிக நேரம் வெயிலில் இருந்து வேலை செய்ய முடியாது. இதனால் கடனிலே என்னுடைய குடும்ப சக்கரம் நகர்கின்றது என்கிறார் முன்னாள் போராளி ஜோசப் விநாயகம் .

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையிலும்,நிலைபேறான மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்குடன், ஒரளவு சுயமாக இயங்கக் கூடிய புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் ஒன்றிணைந்து புதுக்குடியிருப்பு 'ஒளிரும் வாழ்வு' என்ற அமைப்பாக செயற்பட்டு வருகின்றனர்.இதன் அடிப்படையில் இவ்வமைப்பின் ஊடாக பல சேவைகள் இது வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புலம்பெயர் அமைப்புகளின் ஊடாக மாற்றுத்திறனாளிகளின் மனநிலையை மாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் இவ்வமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட மலசலகூடங்களை அமைத்துக்கொடுப்பது சக்கர நாற்காலிகளை பெற்றுக்கொடுப்பது போன்ற சேவைகளையும் அரசாங்க, அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்ட இன்றைய நிலையில் அரசாங்கம் இது தொடர்பில் இன்னும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறான நிலை தொடருமாகவிருந்தால், யுத்தத்தினால் பாரிய இழப்புகளை சந்தித்த வடக்கு,கிழக்கு பிரதேசங்கள் மேலும் நலிவடைய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே மாற்றுத்திறனாளிகளை வளப்படுத்த வேண்டிய தேவை இன்றைய நல்லாட்சி அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

No comments:

Post a Comment