June 29, 2016

மக்கள் நம்பிக்கை வைக்காவிடின் விசாரணையில் அர்த்தமில்லை ;எஸ்.ஜே. இம்மானுவேல்!

உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டியது அவசியமாகும். அதாவது எவ்வாறான விசாரணை பொறிமுறையாக இருப்பினும் அது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவில் அமையவேண்டும்.


பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்காவிடின் எதனையும் செய்ய முடியாது. அது தீர்வாகவும் அமையாது என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் எஸ்.ஜே. இம்மானுவேல் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள டாக்டர் இம்மானுவேல் வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்து பகிர்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜெனிவாவில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறவேண்டியது அவசியமாகும். அதாவது எவ்வாறான விசாரணை பொறிமுறையாக இருப்பினும் அது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவில் அமையவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்காவிடின் எதனையும் செய்ய முடியாது. அது தீர்வாகவும் அமையாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்போக்குத்தன்மையுடன் பல்வேறு வரவேற்கத்தக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றார். அவை சிறந்த முறையில் அமைந்துள்ளன. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்னிலங்கை இனவாதிகளையும் மஹிந்த ராஜபக்ஷவையும் சமாளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பாரானால் நல்லிணக்கத்தை அடைய முடியாது போய்விடும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை வரவேற்கின்றோம். ஆனால் அரசாங்கம் இனவாதிகளை திருப்திபடுத்த முயற்சிக்குமாயின் நல்லிணக்கம் என்பது கேள்விக்குறியாகிவிடும். நான் அண்மையில் பேர்லினில் வைத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தபோது இந்த விடயத்தை வலியுறுத்திக்கூறினேன்.

நாங்களும் அந்த அறிக்கை கடுமையாக இருக்காது என்று எதிர்பார்க்கின்றோம். கடந்த 9 மாதங்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட விசேட அறிக்கையாளர்கள் மூவரும் அறிக்கையை வழங்கியிருப்பர். அந்த அறிக்கைகள் கூட அழுத்தம் குறைந்ததாகவே அமையும் என கருதப்படுகின்றது.

அடுத்தவருடம் மார்ச் மாதம் வரவுள்ள இறுதி அறிக்கையானது காட்டமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அறிக்கையானது உண்மையில் காட்டமானதாக அமையவேண்டியது அவசியமாகும்.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பதை யாரும் எதிர்க்கவோ மறுக்கவோ முடியாது.

தற்போது நாம் சர்வதேசத்தை நம்பித்தான் ஆகவேண்டும். சர்வதேசத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் தான் நாம் நம்பியாகவேண்டும். இதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்கள் நீதியை பெற முடியும். அரசாங்கம் என்னை இலங்கைக்கு வருமாறு அழைத்தது.

ஆனால் தற்போதைய நிலைமையில் இலங்கைக்கு வர விரும்பவில்லை. புலம்பெயர்ந்தோர் ஈழத்தை மட்டும் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர். அதில் ஒருவிதமான யதார்த்தமும் உள்ளது.

ஆனால் அனைவரும் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவேண்டும் என்பதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அதனை நோக்கியே அனைவரும் நகரவேண்டியுள்ளது என்றார்.


No comments:

Post a Comment