காணாமல் போனவர்கள், கடந்த்தப்பட்டவர்கள் தொடர்பாக இராணுவத்தினருக்கெதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை இராணுவம் ஏற்றுக்கொள்ளும் என தான் நம்பவில்லையென முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக சிறீலங்கா இராணுவம் ஒத்துக்கொள்ளும் என நான் ஒருபோதும் நம்பவில்லை.
கடும் யுத்தம் நடைபெற்ற தென் ஆபிரிக்காவில் தவறு இழைத்தவர்களும், பாதிக்கப்பட்ட வர்களும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டனர். எனினும் சிறீலங்காவில் அவ்வாறு நடைபெறவாய்ப்பில்லை.
ஏனெனில் இலங்கையின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் தவறு இழைத்தவர்கள் தாமாக முன் வந்து தமது குற்றங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். யுத்தத்தினால் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கு பல்வேறு விடயங்கள் அவசியமாகின்றது.
அந்த வகையில் காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் மூலம் அவர்கள் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு கூறும் முன்னாள் அதிபர் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு சந்திரிக்காவும் பொறுப்புக்கூறவேண்டிய நிலை வரும் என்பதையும், காலத்துக்குக் காலம் பதவிக்கு வரும் சிறீலங்கா அதிபர்கள் அனைவரும் தமது இரத்தக்கறை படிந்த கைகளை மறைத்துவிட்டு தம்மைப் புனிதர்களாக அடையாளங்காட்டிக் கொள்கின்றனர் என்பதே உண்மையாகும்.
No comments:
Post a Comment