June 14, 2016

இனப்படுகொலைக்கான நீதியில்தான் ஈழத் தமிழரின் இருப்பு!-தீபச்செல்வன்.!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத்தில் இலங்கை தொடர்பில்
பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது பிரேரணையின் முக்கிய விடயமாக கருதப்பட்டது. இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு முக்கால் வருடத்தின் பின்னர் மனித உரிமைப் பேரவை இன்று கூடுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும் வாய் மூல அறிக்கையை இந்தக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கின்றார். பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது தொடர்பில் ஆராய்வது குறித்தும் இந்தக் கூட்டத் தொடரில் கவனம் செலுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் தன்னை காப்பாற்றும் வகையிலேயே அணுகி வந்திருக்கிறது.
இனப்படுகொலை உச்சம் கண்ட 2009
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முப்பது ஆண்டுகளுக்க மேலாக இன ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1983இலும் அதற்குப் பிந்தைய கால போர் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் 2006இலிருந்து 2009 வரையான காலப் பகுதியில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வடகிழக்குப் பகுதியில் இனப்படுகொலை நடவடிக்கை மிகவும் விஸ்தரிக்கப்பட்டது. இனவாத மேலாதிக்கப் போக்கின் கடும் விளைவாகவும் உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் பொருட்டும் 2008இன் இறுதிக் காலப் பகுதியிலும் 2009 மே வரையான காலப்பகுதியிலும் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை உச்சம் கண்டது.
இனப்படுகொலை என்பது நிகழும் காலத்துடன் மாத்திரம் தொடர்புடையதன்று. அது வரலாற்று ரீதியான அரசியல் காரணங்களுடன் நிகழ்த்தப்படுவது. அதனுடைய பாதிப்பு என்பதும் இனப்படுகொலை நிகழும் காலத்துடன் முடிவடைதில்லை.
இனப்படுகொலை ஒரு இனத்தை வரலாறு முழுவதும் உத்தரிக்கும் காயத்தை ஏற்படுத்துகிறது. எனவே இனப்படுகொலையை சந்தித்த ஒரு மண்ணில் அதற்கான காரணங்களை கண்டறிந்து, அதற்குரிய பிரச்சினைகை தீர்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கி அவர்களின் காயங்களை ஆற்றுதல் அவசியமாகிறது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட சமூகம் ஒரு உட்புண்ணுடன் வாழ நேரிடுகிறது. நியாயமான அணுகுமுறையும் நீதியுமே இங்கு அவசியமானது.
அனைத்துலக சமூகத்தின் கடமை
ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் முப்பது வருடங்களாக இன ஒடுக்குதல் மற்றும் இனப்படுகொலையினால் சந்தித்த அனுபவங்கள் காரணமாக உள் நாட்டில் நீதி கிடைக்கும் என்பதில் ஒருபோதும் நம்பிக்கை கொண்டதில்லை. இதனால் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு மாத்திரமின்றி வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன ஒழிப்புச் செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகத்தை நோக்கி நீதியை எதிர்பார்த்திருக்கிறார்கள். இப் பூமியில் ஒரு இனத்திற்கு எதிராக திட்டமிட்ட ரீதியாக, மிக கூர்மையாக முன்னெடுக்கப்படும் இன ரீதியான ஒடுக்குதல் செயற்பாடுகளை குறித்து அக்கறை கொள்வதும் அதனை தடுப்பதும் அதன் வேர்களை கண்டறிந்து தீர்ப்பதும் அனைத்துலக மக்கள் சமூகத்தின் கடமை.
ஏனெனில் உலகில் நடைபெறும் எல்லா ஒடுக்குமுறைகளும் பூமி எங்கும் வாழும் எல்லா மனிதர்களையும் பாதிக்கிறது. பூமிப் பந்தின் ஏதோ ஒரு மூலையில் இடம்பெறும் இனப்படுகொலையை தடுக்கத் தவறும் பட்சத்தில் அதுவே இன்னொரு மூலையில் வாழும் ஒரு இனத்தை ஒடுக்க ஊக்கமளிக்கிறது. எனவே இன ஒடுக்குதல் என்ற கொடுஞ்செயற்பாடு ஒரு இனத்தோடு முடிவதில்லை. கடந்த பல நூற்றாண்டுகளாக பூமியின் பல்வேறு பாகங்களிலும் பல இனங்கள் இன அழிப்பை சந்தித்து வந்துள்ளன. அதனை தடுக்கத் தவறிய செயற்பாடுகளும் அதற்கு நீதியை பெற்றுக்கொடுக்கச் தவறிய செயற்பாடுகளுமே இந்தப் பூமியில் மனித இனம் இன அழிப்பை மீண்டும் மீண்டும் சந்திக்கக் காரணமாகின்றது.
உலக நலன்களும் இனப்படுகொலைகளும்
அவ் இன அழிப்புச் செயற்பாடு இப்போது ஈழத் தமிழ் மக்களின் விடயத்திலும் சூழல்கிறது. ஈழத் தமிழ் மக்கள் முப்பது ஆண்டுகளாக இன ஒடுக்குதல் மற்றும் இன அழிப்பை சந்தித்தபோது அதனை தடுக்கத் தவறிய விளையே முள்ளிவாய்க்காலில் உச்ச இனப்படுகொலை நிகழ்த்தக் காரணமானது. இப்போதும் தமிழ் இனம் சந்தித்த இனப்படுகொலையை எவ்வாறு இவ் உலகம் அணுகுகிறது என்பதற்கு ஐ.நாவின் செயற்பாடுகள் உதாரணமாகின்றன. தனது பூகோள நலன்களை மையாகக் கொண்டே தேசிய இனங்கள்மீதான ஒடுக்குமுறையையும் இன அழித்தல்களையும் உலகம் அணுகி வருகிறது. இன ஒடுக்குதல்களை மேற்கொள்ளும் மேலாதிக்க வாதிகளின் அணுகுமுறையைக்காட்டிலும் உலகின் இந்தச் செயற்பாடு படு பயங்கரமானதும், மனித உரிமைகளுக்கு விரோதமானதுமாகும்.
1994ஆம் ஆண்டில் ருவாண்டாவில் இனப்படுகொலை நடைபெற்றது மிகவும் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அந்நாட்டில் துட்சி இனத்தவர்களும் ஊட்டு மிதவாதிகளும் இன அழிப்புச் செய்யப்பட்டனர். அங்கு எட்டு லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். பெரும்மையினரான ஊட்டு அரசு இனவாதக் கொள்கைகளைப் பரப்பி இன அழிப்புக்கு வித்திட்டது. கடந்த 2015ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்ற விசாரணை தீர்ப்பாயம் சுமார் 24 ஆண்டுகளின் பின்னர் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனைணை அறிவித்தது. அத்துடன் ருவாண்டா இனப்படுகொலை விடயத்தில் ஐ.நா வெட்கப்படவேண்டும் என்று ஐ.நா செயலாளர் பான்கி மூன் கூறினார்.
ஐ.நாவின் வெட்கம்
உண்மையில் ருவாண்ட இனப்படுகொலையில் மாத்திரமல்ல, உலகின் அனைத்து ஒடுக்குமுறைகளுக்காகவும் ஐ.நா வெட்கப்படவேண்டும். வல்லாதிக்க நாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவும், அரசியல் நலன்களுக்காக ஒடுக்குமுறைகளுக்கு ஒத்துழைப்பு புரிவதனாலும் ஐ.நா நிறையவே வெட்கப்படவேண்டும். இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது பாரிய ஆயுதங்களால் போரிட வேண்டாம் என்று இலங்கை அரசுக்கு ஐ.நா ஆலோசனை கூறியது. இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றபோது பாரிய ஆயுதங்களால் மக்களை கொல்லாமல் சிறிய ஆயுதங்களால் மக்களை கொல்லுங்கள் என்று ஐ.நா இனப்படுகொலைக்கு ஆலோசனை அளித்தது?
இன அழிப்பு என்பது வெறுமனே ஆயுதங்களுடன் மாத்திரம் தொடர்புடையதா? ஐ.நா மேற்போந்த ஒத்துழைப்பை வழங்கியமையான் காரணத்தினால்தானா ஆயுதங்களை தவிர்த்து பாலியல் வன்முறை ஆயுதங்களும் காணாமல் போதல்களும் இடம்பெற்றன? இறுதியுத்தத்தில் ஈழத் தமிழ் மக்களால் ஆயுதங்களால் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அவர்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் பல்வேறு வழிமுறைகளில் இனப்படுகொலை நடந்தது. இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது ஐ.நா தன்னுடைய பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டதாக சில ஆண்டுகளின் முன்னர் பான்கி மூன் கூறினார்.
இதேவேளை கடந்த 2013இல் ஐக்கிய நாடுகளின் 68ஆவது கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.நா செயலாளர் பான்கி மூன் இலங்கை விடயத்தில் ஐ.நா தோல்வியை தழுவியதாக குறிப்பிட்டார். இலங்கை இறுதி யுத்த உயிரிழப்புக்களுக்கு ஐ.நாவே பொறுப்புக் கூறவேண்டும் என்ற கருத்துக்கள் ஐ.நாவிற்குள் இருக்கும் மனித உரிமை சார்ந்த பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஐ.நாவின் பங்களிப்பும் இருக்கிறது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக ஐ.நா வருந்துகிறது என்ற நிலைக்கு ஒரு நாள் அவ் அமைப்பு வரநேரிடும். அதுவும் பூகோள அரசியல் நலன் பொருட்டாய் இருக்கும் என்பதே கவலைக்குரியது.
வடமாகாண சபையின் தீர்மானம்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்தது இனப்படுகொலை என்பதை ஐ.நா. இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை. மனித உரிமை மீறல் என்றும் போர்க்குற்றம் என்றுமே அழைக்கிறது. ஐ.நா தன்னுடைய அறிக்கையில் சுமார் 40ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக சொல்கிறது. ஆனால் இறுதிப்போரில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அத்துடன் முப்பது வருடங்களாக இன அழிப்பில் கொல்லப்பட்டவர்கள் பல லட்சம் ஈழத் தமிழர்கள். இவர்கள் இன அழிப்பு நோக்கம் கருதி, இன, மத பண்பாட்டு கலாசார அடையாளங்கள் காரணைமாக கொல்லப்பட்டவர்கள். இதனை முழு உலகமும் அறியும். எனினும் தன்னரசியல் காரணமாக இனப்படுகொலை என்பதை ஏற்க உலகம் பின்னடிக்கிறது.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று போர் நடைபெற்ற வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான வடக்கு மாகாணத்தின் மக்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எங்களுக்கு என்ன நடந்தது என்பதை முறையாகவும் தரவுகளுடனும் முன் வைப்பது எமது கடமை. அதுவே வட மாகாண சபையின் இனப்படுகொலைத் தீர்மானம் ஆகும். இலங்கை அரசோ, இனப்படுகொலை நடக்கவில்லை என்றும் வட மாகாண சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டது. இலங்கை அரசாங்கம் தன்னை ஐ.நாவில் பாதுகாக்கும் அடிப்படையிலேயே செயற்படுகிறது. நடந்த உண்மைகளின் அடிப்படையில் நீதியை நிலைநாட்டுவதற்கு இவ் அணுமுறை எதிரானது.
ஒடுக்குமுறையை ஊக்குவிக்கும் உலகு
ஐ.நா உள்ளிட்ட உலகம் எவ்வாறு பூகோள அரசியலுக்காக தமிழ் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள தயங்குகிறதோ அதைப்போலவே இலங்கை அரசு தன்னுடைய அரச இருப்புக்காக தமிழ் மக்களுக்கு நடந்த அநீதியை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறது. இது இலங்கையின் பேரினவாதப் போக்கை பேணும் ஒரு செயலாகவும் ஈழத் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் செயலாகவும் தொடர்ந்தும் ஒடுக்குமுறையைக்கு வழி செய்யும் செயலாகவும் இருக்கிறது. அறுபது ஆண்டுகளாக இன ஒடுக்குதலை சந்தித்த இனம் உண்மையின் அடிப்படையிலும் நீதியின் அடிப்படையிலும் தீர்ப்பை எதிர்ப்பார்ப்பது மிகவும் அவசியமானது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இனப்படுகொலை விவகாரத்தை இலங்கை அரசுடன் அணுகிய விதமும் தற்போது அணுகும் விதமும் மிகவும் வேறுபாடுகளைக் கொண்டது. தமக்கு எதிரான பிரேரணைக்கு இணை அனுசரனை அளித்த இலங்கை இந்த விவகாரத்திலிருந்து எவ்வாறு தப்பிக்கொள்வது என்பதன் பொருட்டே தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை வெளிப்படையாக மேற்கொள்கிறது. போரில் ஈடுபட்டவர்களை மின்சாரக் கதிரைகளிலிருந்து பாதுகாத்ததாகவும் இனியும் ஏதும் நடக்க விடமாட்டோம் என்றும் கூறுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் நடந்த அநீதிகளுக்கான உண்மையான பொறுப்புக்கூறுதல் இடம் பெறாது என்பதையே உணர்த்துகிறது.
எனவே இந்தக் கூட்டத் தொடரில் ஐ.நாவின் செயற்பாடுகளும் மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழிமூல அறிக்கையும் இலங்கை அரச தரப்பின் கருத்துக்களும் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதியையும் பொறுப்புக்கூறுதலையும் மெய்யாகவே கொண்டிருக்கிறதா என்பதே முக்கியம். தமக்குகந்த வழியிலேயே அவர்கள் இதனைக் அணுகக்கூடும். ஐ.நாவின் செயற்பாடுகளும், உலகின் அணுகுமுறையும் எப்படி இருந்தாலும் இனப்படுகொலைக்கு நீதியைப் பெறும் செயற்பாட்டை நாம் தவிர்க்க இயலாது. ஏனெனில் இனப்படுகொலைக்கான நீதியில்தான் இந்த தீவின் அமைதியும் ஈழத் தமிழ் மக்களின் இருப்பும் எதிர்காலமும் தங்கியிருக்கிறது. அந்த இலக்கை நோக்கிய வகையிலேயே ஈழத் தமிழ் இனத்தின் அனைத்து மட்டச் செயற்பாடுகளும் இருக்க வேண்டும். ஆயுதப் போராட்ட வீழ்ச்சியின்பின்னரான ஈழத் தமிழர் போராட்டம் என்பது இனப்படுகொலைக்கான நீதியை பெறுதலே.
தீபச்செல்வன்.

No comments:

Post a Comment