June 13, 2016

வடக்கில் சிங்களக் குடியேற்றப் பகுதிகளில் மாத்திரம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்!

வவுனியாவில் சிங்களக் குடியேற்றக் கிராமமான போகஸ்வெவவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார்.


போகஸ்வெவ சிங்களக் குடியேற்றப் பகுதியில் வாழும், 1500 குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்காக, போகஸ்வெவ இராணுவ முகாம் பகுதியில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த சிறிலங்கா அதிபர், சிறுநீரக தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 100 குடும்பங்களுக்கு நீர் சுத்திகரிப்பு கருவிகளையும் வழங்கினார்.

இதையடுத்து, போகஸ்வெல மகாவித்தியாலயத்தில் நடந்த தேசிய சிறுநீரக  தொற்று தடுப்பு திட்ட நிகழ்விலும் சிறிலங்கா அதிபர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன் போது அவர், வடக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும், வடக்கில் வாழும் மக்களின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களே சிறுநீரகத் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாவட்டங்களிலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ளது.

வவுனியாவில் போகஸ்வெவவிலும், முல்லைத்தீவில், வெலிஓயா எனப்படும் மணலாறு பகுதியிலும் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இவையிரண்டும் சிங்களக் குடியேற்றப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment