June 17, 2016

ஆஸ்திரேலிய தேர்தல் 2016: புகலிடம் கோரிய 30 ஆயிரம் பேருக்கு நிரந்தர வதிவிடம்?

லேபர் கட்சி ஆட்சியமைத்தால் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட 30 ஆயிரம் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர வதிவிடம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.


லேபர் கட்சி பிரதமர்களான Julia Gillard மற்றும் Kevin Rudd ஆகியோரது ஆட்சிக்காலத்தில் படகு மூலம் புகலிடம் தேடி நாட்டிற்குள் வந்த சுமார் 30 ஆயிரம் புகலிடக்கோரிக்கையாளர்கள் தற்போது தற்காலிக விசாக்களுடன் இங்கு வாழ அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் இவர்கள் நிரந்தரமாக எந்த தீர்வுமில்லாத நிலையில் வாழ்வதாகத் தெரிவித்துள்ள லேபர்கட்சி, தாம் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக விசா நடைமுறை நீக்கப்படும் என்றும் இவர்களுக்கு வேலை செய்வதற்கான முழு உரிமையும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இது ஏற்கனவே நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் படகுகளைத் திருப்பி அனுப்புவது என்ற கொள்கையிலிருந்து தாம் ஒருபோதும் மாறப்போவதில்லை எனவும் அக்கட்சி கூறியுள்ளது.

இதன்மூலம் லேபர் ஆட்சி அமைந்தால் கடந்த லேபர் ஆட்சிக்காலத்தில் 800 படகுகளில் வந்த சுமார் 30 ஆயிரம் பேருக்கு நிரந்தர வதிவிடம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் எதிர்கட்சியின் கூற்றானது ஆட்கடத்தல்காரர்கள் மீண்டும் தமது செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அழைப்பு என குடிவரவுத்துறை அமைச்சர் Peter Dutton சாடியுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள எதிர்கட்சி தலைவர் Bill Shorten, தற்காலிக விசா நடைமுறையை நீக்குவதென்ற முடிவு 2015ம் ஆண்டு லேபர் மாநாட்டிலேயே எடுக்கப்பட்டுவிட்டதாக கூறினார்

No comments:

Post a Comment