இறுதிக்கட்ட யுத்தத்தின்போது திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உட்பட சரணடைந்தவர்களின் விபரம் எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி நிச்சயமாக சமர்ப்பிக்கப்படவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்குடன் தொடர்புடைய 58ஆவது படைப்பிரிவின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன மன்றில் முன்னிலையாகவேண்டுமென்றும் இல்லாவிட்டால், பிடியாணை பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இறுதி யுத்தத்தில் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிடுமாறு எழிலனின் மனைவியான சசிதரன் அனந்தி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் சரணடைந்தவர்களின் விபரங்கள் அனைத்தும் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில், இன்றைய வழக்கில் மேஜர் ஜெனரல் சாணக்ய குணரத்னவின் சட்டத்தரணி வெளிநாடு சென்றிருப்பதால் முன்னிலையாகவில்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், தற்போது தென்னிலங்கையில் வெள்ளப்பெருக்கு காரணமாக சாணக்ய குணவர்த்தனவால் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லையெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது குறுக்கிட்ட மனுதாரரின் சட்டத்தரணியான ரட்ணவேல், மனுதாரரும் அவர் தொடர்பானவர்களும் தூர இடத்திலிருந்து பேரூந்தில் பயணித்து முன்னிலையாகியிருந்த போதிலும் அனைத்து வசதிகளுடன் இருந்தும் எதிர்த்தரப்பின் மன்றில் முன்னிலையாகவில்லையென ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனை கவனத்தில் எடுத்த நீதிபதி சம்சுதீன், வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி ஒத்திவைத்ததுடன், அடுத்த விசாரணைக்கு மேஜர் ஜெனரல் சாணக்ய குணரத்ன முன்னிலையாகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் எனவும், அன்றைய தினம் சரணடைந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்படவேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment