இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைமீறல்கள், மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கலப்பு விசேட நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து பரிந்துரைகளும் நடை
முறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள பரகுவே மற்றும் எஸ்டோனியா நாடுகள் அதற்கு தாம் முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.ஜெனிவாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியின் தலைவரான சுரேஷ் பிரே மச்சந்திரன், மற்றொருபங்காளிக்கட்சியான ரெலோவின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பானவரும், வடமாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம், புலம் பெயர் அமைப்புக்களின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய தமிழ்த் தரப்பு குழுவினருக்கும் பரகுவே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மற்றும் எஸ்டோனியா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஆகியேருக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஐ.நா. காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அந்நாட்டு பிரதிநிதிகளால் வலிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பாக ஜெனீவாவிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன் கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில்,மத்திய தெற்கு அமெரிக்க நாடான பரகுவேயின் பிரதி வெளிவிவகார அமைச்சரையும், வடக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் வெ ளிவிவகார அமைச்சரையும் நாம் சந்தித்திருந்தோம்.இச்சந்திப்பின்போது இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான மீறல்கள், குற்றங்கள், சட்ட மீறல்கள் தொடர்பாக நாம் சர்வதேச விசாரணையொன்றையே கோரிவந்தோம். ஆனால் தற்போது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் விசாரணை மேற்கொண்டு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களையும் உள்ளடக்கிய கலப்பு விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென கூறப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் அரசாங்கம் அதனை நிராகரிப்பதாக கூறுவதோடு உள்ளக விசாரணையை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. எம்மைப்பொறுத்தவரையில் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளமுடியாது. அது சுயாதீனத் தன்மையாக பக்கச்சார்பின்றி நியாயமாக இடம்பெறுமா என்ற பிரச்சினை உள்ளது. அதற்கு எமக்கு கடந்த காலத்தில் பல அனுபவங்கள் உள்ளன. ஆகவே ஐ.நா அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்டுள்ள கலப்பு விசேட நீதிமன்ற பொறிமுறையை அமைத்து விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோரினோம்.
அவ்விடயங்களை கவனமெடுத்த குறித்த இருநாட்டின் பிரதிநிதிகளும் ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனத் தெரிவித்ததுடன் அதற்காக தாம் முழுமையான பங்களிப்புக்களை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டனர் என்றார். அத்துடன் தொடர்ச்சியாக இவ்வாறாக பல்வேறு சந்திப்புக்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment