September 9, 2015

இலங்கையின் வெளிவராத திட்டமிட்ட 2014 இன் படுகொலை. (படங்கள் இணைப்பு)

2014 ஒக்டோபர் 29 ஆம் திகதி இடம்பெற்ற மீரியபெத்த மண்சரிவு சம்பவமானது இயற்கை அனர்த்தம் என்ற பெயரோடு மூடி மறைக்கப்பட்டு விட்டது.

ஆனால் உண்மையில் அது திட்டமிட்ட ஒரு படுகொலை சம்பவம் இப்படியான அனர்த்தம் இங்கு இடம்பெறப்போகின்றது என்பது மலையக பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே தெரியும் ஆனால் எவரும் அக்கறை எடுக்கவில்லை என அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கிறார்.

இச்சம்பவத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரையும் மண்ணுக்கு இரையாக்கி விட்டு தனிமரமாக நிற்கும் யோகராஜ் ஒரு சாரதியாவார் மீரியபெத்த அனர்த்தம் இடம்பெற சற்று நேரத்திற்கு முன்பு இவர் வீட்டை விட்டு தொழில் நிமித்தம் வெளியேறியுள்ளார் .இதன் காரணமாக இச்சம்பவத்தில் இவர் தப்பித்தார். இவரது மனைவி ,பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என ஐந்து பேர் இச்சம்பவத்தில் மண்ணில் புதையுண்டு போனார்கள். மீட்பு பணிகளின் போது இவரது மனைவியின் கால் பகுதியும் பேரக்குழந்தையின் உடலுமே கிடைத்தன. 

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையிலேயே வசித்து வரும் யோகராஜ் இரவு நேரங்களில் அந்த மலைப்பிரதேசத்தில் அலைந்து திரிந்து பின்பு இரவு வீடு வந்து தனது சொந்தங்களின் படங்களைப்பார்த்து அழுது நித்திரை இல்லாமல் இன்று வரை தவித்து வருகிறார். மேலும் இச்சம்பவம் ஒரு அனர்த்தம் அல்ல படுகொலையே என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் முறைப்பாடு செய்திருக்கிறார். இச்சம்பவம் பற்றி அவர் வழங்கிய நேர்காணல்,

இந்த சம்பவம் இலங்கையை மட்டுமல்ல முழு உலகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது ஆனாலும் இப்படி ஒரு சம்பவம் இடம்பெறப்போகின்றது என்பது எமது தலைவர்களுக்குத்தெரியும். 2006 ஆம் ஆண்டு இவ்விடத்தில் மண்சரிவு அபாயம் இருக்கின்றதா என ஆராய ஒரு குழு வருகை தந்திருந்தது. இப்பிரதேச மண்ணை ஆய்வுக்குட்படுத்தியதன் பின்னர் இவ்விடம் மக்கள் வசிப்பதற்கு உகந்தது அல்ல என ஒரு அறிக்கையை அரசாங்கத்திற்கு வழங்கியது.

இங்கு வசிப்பவர்களுக்கு வேறு இடம் வழங்கும்படியும் இங்குள்ள குடியிருப்புக்களை அகற்றும் படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அப்போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமானிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் பிரகாரம் தோட்ட நிர்வாகத்துடன் பேசக்கூடிய அதிகாரம் கொண்ட அமைச்சு அவரிடம் இருந்ததால் அது குறித்து பேசி இங்கு வசித்து வரும் 64 குடும்பங்களை வேறு இடத்திற்கு குடியமர்த்த ஆவண செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

அதன் படி இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளில் தோட்ட நிர்வாகமானது குடியிருப்புக்களை அமைக்க புதிய இடத்தை ஒதுக்கித்தந்தது.இருப்பினும் 2014 ஆம் ஆண்டு வரை அவ்விடத்தில் 17 வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டன. அதிலும் அந்த 17 வீடுகளும் குறித்த தொழிலாளர்களின் ஊதியத்தில் ஒரு தொகை பிடிக்கப்பட்டே கட்டப்பட்டு வந்தது.

அவர்களின் சொந்தப்பணமே அதற்கு செலவளிக்கப்பட்டது. இதை உறுதியாக நான் எப்படி கூறுகிறேன் என்றால் அந்த வீடுகளை கட்டுவதற்கு மணல், கற்களை எனது லொறியில் தான் அவர்கள் கொண்டு வந்தனர். சிலர் தமது மனைவிமாரின் தாலியை விற்றுக்கூட பொருட்களை வாங்கினர் காரணம் அவ்விடத்திலிருந்து தமது குடும்பத்தின் பிள்ளைகளின் உயிரை காப்பாற்றிக்கொண்டு விரைவாக சென்றுவிட வேண்டும் என்ற பயம் தான். 

இந்த 17 பேரும் அங்கிருந்து ஒருவாறு சென்று விட்டனர் ஆனால் மிகுதியானவர்களுக்கு அவ்வாறு செல்ல முடியவில்லை.காரணம் அமைச்சின் மூலம் அவர்களுக்கு எந்த வித உதவியும் கிடைக்கவில்லை. சரியான நேரத்தில் அந்த 64 குடும்பங்களுக்கும் குடியிருப்புக்களை அமைத்து கொடுத்து அபாயகரமான பிரதேசத்திலிருந்த குடியிருப்புக்களை அழித்திருந்தால் அங்கு யாரும் சென்று குடியிருந்திருக்கமாட்டார்கள். 

எனது மனைவி ஒரு குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர். 1999 ஆம் ஆண்டு இந்த தோட்டத்தில் அவர் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் வைத்தியசாலை குவார்ட்டஸில் எனது பிள்ளைகளோடு இருக்க நான் அச்சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். 1997 ஆம் ஆண்டு எனது மூத்த மகனுக்கு மூளையில் ஒரு கட்டி உருவானது அதற்கான மருத்துவ செலவுகள் சுமார் 6 இலட்சத்தை தாண்டியது எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் இறந்து விட்டார். வாழ்வாதாரம் மிகவும் மோசமானது ஒரு புறம் மகன் இறந்த சோகம் மறுபுறம் பொருளாதார நெருக்கடி காரணமாக பஸ் சாரதியாக இருந்த நான் வெளிநாடு செல்ல தீர்மானித்தேன்.

ஆகவே எனது மனைவி இந்த தோட்டத்திற்கு வரும் போது நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். மண் சரிவு அபாயம் பற்றி எனது மனைவி அறிந்து வைத்திருந்தார். அது தொடர்பில் தனது குடும்பத்திற்கு வேறு இடத்தில் காணியோ அல்லது வீடோ அமைத்துத்தரும்படி தோட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியும் பலனில்லை.



அந்தத்தோட்டத்திற்கே எனது மனைவி சேவையாற்றினார் ஆனால் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அவரது சேவைக்காலத்தில் ஒரு சிசுமரணமோ அல்லது தாய்மார் இறப்போ ஏற்படவில்லை அவர் அர்ப்பணிப்போடு கடமையாற்றினார். அதிலும் எனது மனைவி இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு மாதாந்தம் சந்தா செலுத்தும் ஒருவர் .

இந்த சம்பவம் இடம்பெற்ற மாதம் வரை அவர் இறுதியாக செலுத்திய சந்தா ரசீது என்னிடம் உள்ளது. இவ்வளவு நடந்த பிறகும் கூட இந்த கட்சியைச்சேர்ந்த தலைமைகள் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை மௌனம் சாதித்துக்கொண்டு தொடர்ச்சியாக இந்த மக்களை ஏமாற்றியே வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கவில்லை தற்காலிக குடியிருப்பு வசதியில்லை என்று தான் இவர்கள் பேசி வருகிறார்களே ஒழிய இந்த மக்களும் தமக்கு என்ன தேவை என்பதை தலைவர்மாரிடம் கேட்பது இல்லை.

இவ்வளவு நடந்தும் இவர்கள் நாங்கள் தான் உங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இவர்கள் பின்னே சிலர் அணி திரண்டு கொண்டும் வருகிறார்கள். ஆனால் அணி திரள்பவர்கள் விரைவாக அனுபவிப்பார்கள். ஏனென்றால் மீரியபெத்த மட்டுமல்ல மலையகம் முழுக்க இந்த ஆபத்து இருக்கின்றது இங்கு உயிரிழந்த 37 பேரோடு முடியப்போவதில்லை இந்த அனர்த்தம். ஊவாவின் பல இடங்களில் இந்த ஆபத்து இருக்கின்றது ஆனால் நான் எவ்வளவு கத்தினாலும் எவரும் இதை காதில் போட்டுக்கொள்ளவதில்லை.

இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணமாக இருந்த ஆறுமுகன் தொண்டமானும் செந்தில் தொண்டமானும் நாங்கள் தான் உங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் எங்களை அணைத்து ஆள்பவர்கள் தான் தேவையே ஒழிய அடித்து ஆள்பவர்கள் இல்லை.அடித்து ஆளும் நிலை இங்கு சரிவராது அது இந்தியாவில் தான் சரிவரும். 

வழக்கு தொடர்ந்துள்ளேன் எனக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து நான் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டு வழக்கு தொடர தீர்மானித்துள்ளேன் அதாவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மீது தான் வழக்கு, ஏனென்றால் எனது மனைவி இறுதி வரை அந்த தொழிற்சங்கத்திற்கு சந்தா செலுத்தினார். ஏனையவர்களுக்கு நான் எடுத்துக்கூறியும் அவர்கள் அதை கவனத்திற்கு எடுக்கவில்லை ஏதோ எல்லோரும் செத்து விட்டார்கள் என மௌனமாகி விட்டனர்.

ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது தனிமை என்னை கொல்கிறது.நான் தங்கியிருக்கும் வீட்டின் சுவரில் மாட்டியிருக்கும் எனது மனைவி குழந்தைகளின் படங்களைப்பார்க்கும் போது இப்படி ஒரு சம்பவம் எமக்கு நடந்ததே நீங்கள் என்ன செய்தீர்கள் என என்னிடம் கேள்வி எழுப்புவது போல் உள்ளது. 2006 இல் இங்கு இனங்காணப்பட்ட ஆபத்தை இவர்கள் அக்கறையோடு உணர்ந்திருந்தால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்காது ஆகவே இவர்கள் கொலை செய்தவர்கள் இந்த மரணங்களுக்கு காரணமாக இருந்துவிட்டு மீண்டும் மீண்டும் நம்மிடம் வந்து நாம் தான் உங்கள் பிரதிநிதிகள் என்றால் இதை பொறுத்துக்கொள்ள முடியாது.

பிரதமர் வழங்கிய காணி உறுதிபத்திரத்தை பொய் என்கிறார்கள் தலவாக்கலையில் மீறியபெத்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கப்பட்டது. அதில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருந்த திகாம்பரம் அவர்களூடாக பிரதமர் ரணில் அவர்கள் எனக்கும் காணி உறுதி பத்திரத்தை வழங்கினார். ஆனால் அது பொய் என இ.தொ.கா கதைகளை அவிழ்த்து விட்டது.

ஒரு நாட்டின் பிரதமர் வழங்கிய காணி உறுதி பத்திரம் பொய்யாக இருக்குமானால் இவர்கள் அதை நீதிமன்றத்திற்கு சென்று நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து தாமாகவே கற்பனை கலந்த கதைகளை சொல்லக்கூடாது. தாம் 75 வருடங்களாக மலையக மக்களுக்காக குரல் கொடுத்தோம் என்கிறார்கள் இத்தனை வருடத்தில் ஒரு அங்குலம் நிலத்திற்கு இவர்களால் காணி உறுதி வாங்க முடிந்ததா? ஆனால் இன்று 7 பேர்ச்சஸுக்கு காணி உறுதி வழங்கப்பட்டு வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. நானும் அந்த வீடமைப்பு திட்டம் நடக்கும் இடத்திற்கு தினமும் போய் வருகிறேன். 

பிள்ளைகளிடம் ஒரு வார்த்தை கேளுங்கள் 

இப்போதுள்ள அரசியல்வாதிகள் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என அவர்களிடம் ஒருவார்த்தை கேளுங்கள். ஏனென்றால் பேஸ் புக்,இண்டர்நெட் என அவர்கள் தான் உலகத்தைப்பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் அவர்களுக்குத்தெரியும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என.

இனியும் ஐயாவுக்கா அம்மாவுக்காக என்பதை விட்டு விடுங்கள் நீங்கள் உங்களுக்காக வாழப்பழகுங்கள். இப்போது நான் எனக்காக மட்டுமே கத்திக்கொண்டிருக்கிறேன், எனக்கு யாரும் இல்லை எனக்கு ஒன்றுமே இல்லை.. நான் பேரப்பிள்ளையும் எடுத்து அவர்கள் எல்லோரையும் தொலைத்து விட்டு இருக்கிறேன். எனது குரலுக்கு சற்று மதிப்பு கொடுங்கள் என்பதே எனது கோரிக்கை. உங்களின் வருங்காலம் உங்கள் பிள்ளைகள் கைகளில் தான். 

என்னை முதலாளியாக்க சொல்லுங்கள்

அனைத்து தொழிலாளர்களும் எமது பக்கம் தான் இருக்கின்றனர் என இ.தொ.கா தலைவர்கள் சொல்கிறார்கள் அப்படியானால் இத்தனை காலமும் அவர்கள் கொடுத்த சந்தா பணத்தில் மாதத்திற்கு மூன்று வீடுகளை கட்டியிருக்கலாம். அது மட்டுமா எனது பின்னே அணி திரளுங்கள் தொழிலாளிகளை முதலாளிகளாக்குகிறேன் என ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார் இதோ அத்தனைப்பேரையும் இழந்து இன்று மீரியபெத்தையில் சுற்றிக்கொண்டிருக்கிறேனே முதலில் என்னை முதலாளியாக்கிகா ட்டுங்களேன் ? ஏனென்றால் நான் ஒ ருதோட்டத்தொழிலாளியி்ன் பிள்ளை எனது மனைவி உங்கள் சங்கத்திற்கு சந்தா கொடுத்து வந்தவர், இறுதியில் உயிரையே கொடுத்தவர் .

எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை விடுவதில் அர்த்தமில்லை களத்தில் இறங்க வேண்டும். ஆனால் எமது தொழிலாளர்களுக்கு அந்த தெளிவு வேண்டும். அவர்கள் சரியான முறையில் சொன்னால் கேட்பார்கள் முதலில் இவர்களை அரசியலில் இருந்து நாம் ஒதுக்க வேண்டும் இவ்வாறானவர்கள் எமக்குத்தேவையில்லை அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் ஆரம்பித்த தொழிற்சங்கம் இருக்கட்டும் அதன் மூலம் நன்றாக சம்பாதித்தவர்கள் இப்போது தேவையில்லை. 

எனக்கு எனது மனைவி கொடுத்த சந்தாவிற்கு பதில் கூற வேண்டும் நான் இது குறித்து சகல ஊடகங்களுக்கும் தெரியப்படுத்திக்கொண்டே இருப்பேன். அவர்களுக்கும் நமது நாட்டு அரசியலுக்கும் சரிபட்டு வராது. ஏனென்றால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை அரசாங்கமே கேட்கவில்லையே? ஆகையால் அவர்களுக்கு இந்தியாவில் கட்டப்பஞ்சாயத்து அரசியல் தான் சரிவரும். இவர்கள் தேர்தல்களில் சாராயம் வாங்கிக்கொடுத்து வாக்குகள் கேட்பது இங்கு எல்லோருக்கும் தெரியும். ஒரு சமூகத்தைவைத்தே அந்த சமூகத்தை எப்படி அழிப்பது என்பதும் தெரியும். 

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் தோட்டங்கள் மூடப்படவில்லை.இப்போது 75 வருட தொழிற்சங்கம் என்கிறார்கள் நாங்கள் அமரர் தொண்டமான் அவர்களின் காலத்தைப்பார்ப்போம். அவரது காலகட்டத்தில் எந்த தொழிற்சாலையாவது மூடப்பட்டிருக்கின்றதா? இல்லை தோட்டங்களும் மூடப்படவில்லை. ஜெயவர்தன ,பிரேமதாச ஆகியோரிடம் போராடி எமது மக்களுக்கு சில உரிமைகளை வாங்கிக்கொடுத்து விட்டு அவர் இறந்து விட்டார்.

ஏதோ நவீன அரசியல் செய்கிறோம் எனக்கூறிக்கொண்டு இவர்கள் களமிறங்கினார்கள். இன்று ஆசிரியர் , உதவி ஆசிரியர் என்ற அரசாங்க உத்தியோகத்தைத்தவிர வேறு என்ன தொழிலை இவர்கள் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்து விட்டனர்? அதுவும் அரசாங்கம் கொடுப்பதை வாங்கி இவர்கள் தாம் வாங்கிக்கொடுத்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர்.

இவர்களால் உருவாக்கப்பட்ட கல்விமான்கள் புத்திஜீகள் யாரையாவது இவர்கள் பட்டியல் படுத்த முடியுமா? இன்று தோட்டப்பகுதிகளில் இருக்க வேண்டிய முகாமையாளர்கள்,உதவி முகாமையாளர்கள் அனைவரும் எமது பிள்ளைகளாக இருக்க வேண்டும் அப்படி எதுவும் நடந்ததா? அவர்கள் உண்ணும் உணவிலிருந்து ஏனையவற்றுக்கு செலவளிக்கும் அனைத்தும் அவர்களது பணம் அல்ல அது தொழிலாளர்களின் வியர்வை,அவர்களின் உழைப்பு எமது அம்மா ,அப்பா,சகோதரிகளின் பணம் அது. சந்தா பணத்திற்கு வாயில் கணக்கு சொல்லி சரி வராது இந்த பணத்திற்கு இது தான் செலவு என அவர்களால் பத்திரிகை ஒன்றில் விபரம் வௌியிட முடியுமா? 

ஆறுமுகன் வந்தார் பார்த்தார் சென்றார்

மீறியபெத்த சம்பவம் இடம்பெற்று முடிந்த பிறகு அந்த இடத்திற்கு நாட்டின் முக்கியமான தலைவர்கள் வந்து அனைவருக்கும் ஆறுதல் சொல்லி விட்டு சென்றனர். ஊவா மாகாண முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் ரணில் ,மாகாண எதிர்கட்சி தலைவர் பலரும் வந்து குறிப்பாக எனக்கு மிகவும் ஆறுதலான சொற்களை கூறினர். எம்மால் உயிரைத்தவிர மற்ற அனைத்தையும் உங்களுக்குத்தந்து உதவுகிறோம் இப்படியான சம்பவம் நடந்திருக்கக்கூடாது என அவர்களும் கண்கலங்கினர்.

ஆனால் சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களுக்குப்பிறகே இந்த மக்களின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஆறுமுகன் வந்தார். கறுப்புக்கண்ணாடி அணிந்து பரிவாரங்களுடன் வந்த அவரிடம் சென்று எனது நிலைமையை கூறலாம் என அருகே சென்ற போது அவரி்ன் பாதுகாவலர்கள் என்னை பிடித்து தள்ளி விட்டதில் நான் கீழே விழுந்து விட்டேன் நான் அவரிடம் உதவி கேட்கப்போகவில்லை.

உங்கள் தொழிற்சங்கத்திற்கு சந்தா செலுத்திய எனது மனைவிக்கு ஏற்பட்ட கதியை கூறத்தான் போனேன் ஆனால் அவரை நெருங்க விடவில்லை . அதற்கடுத்த நாள் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் கணேஷா வித்தியாலயத்திற்கு பலரும் வந்து உலர் உணவுப்பொருட்கள் வழங்கிச்சென்றனர். இதை கேள்விப்பட்ட செந்தில் தொண்டமான் அங்கு வந்து அரசியல் பேசினார். " ஒங்களுக்கு தங்கவே வீடு இல்ல கொடுக்கிற சாமான்கள எங்க வச்சிக்கப்போறிங்க " என கேள்வி எழுப்பி விட்டு அவர் போய் விட்டார். மறுநாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வந்தார். தலைவர் ஒரு மனிதர் என்ற ரீதியில் அவர் பேசினார்.

உங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள் நாங்கள் கல்வி கொடுத்து பராமரிக்கின்றோம் என்றார். அப்போது ஒரு ஊடகவியலாளர் இந்த மக்களுக்கு என்ன உதவிகள் செய்யப்போகின்றீர்கள் என கேட்ட போது ஏன் அவர்களுக்கு இங்கு இருக்க கடினம் என்றால் அவர்கள் சம்மதித்தால் அவர்களையும் நாம் பொறுப்பேற்கிறோம் என்றார். இது தான் ஒரு தலைவருக்கு அழகு. ஆனால் பாருங்கள் அடுத்த நாள் இவர்கள் பத்திரிகையில் அறிக்கை விடுகின்றனர் வடக்கு கிழக்கை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் எங்கள் மக்களை நாம் பார்த்துக்கொள்கிறோம் .... இவர்கள் மக்களைப்பார்த்த இலட்சணத்தை தான் இப்போது உலகமே பார்க்கிறதே? நீங்கள் சரியாக பார்த்திருந்தால் இவ்வளவு பேரும் இங்கு பலியாகியிருக்க மாட்டார்களே ? அவர்கள் செய்வது அரசியலா இவர்கள் செய்வது அரசியலா?

மகிந்தவிடம் பேசுவதாக மக்களை ஏமாற்றினார்

மக்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்த ஆறுமுகன் தொண்டமான் அனைவரையும் ஏமாற்றும் ஒரு வேலையைச்செய்தார். அவர் வந்தவுடன் எல்லோரும் அவரி்ன் பின்னாள் ஓடினார்கள். தனது கையடக்கத்தொலைபேசியை எடுத்து சிங்களத்தில் நீங்கள் நாட்டில் இருக்கின்றீர்களோ வௌிநாட்டில் இருக்கின்றீர்களோ எனது மக்களுக்கு 200 வீடுகளை உடனடியாக கட்டித்தர வேண்டும் என கதை்தார் ஆனால் தொபை பேசி அழைப்பு ஏற்படுத்தப்படவே இல்லை என எனக்குப்புரிந்தது இருந்தாலும் பாருங்கள் அதற்கும் அவரை சூழவுள்ள மக்கள் கைகளை தட்டி ஆர்ப்பரித்தனர். இப்படி இந்த மக்களை ஏமாற்றுவது என்பது கொலை செய்வதை விட கொடியது. 

சுடுகாட்டில் அடிக்கல் நாட்டினர்

நமக்கு ஏதாவது செய்வார்களா ஆறுதல் கிடைக்குமா என பாதிக்கப்பட்ட மக்கள் ஏங்கியிருக்கும் போது அப்படி ஒரு ஏமாற்று நாடகம். 200 வீடுகள் என்றவர் இது வரை 2 வீடுகள் கூட கட்டித்தரவில்லை. வீடுகள் அமைத்துத்தருகிறோம் என சுடுகாட்டில் போய் அடிக்கல் நாட்டினார்கள் அந்த இடத்திற்கு நான் போகவில்லை ஏனென்றால் அது மக்கள் வாழ உகந்த இடம் இல்லை என்பது எனக்குத்தெரியும். அங்கு மண்சரிவு அபாயம் இல்லை ஆனால் அப்பிரதேசத்தில் வீசும் காற்றில் குடியிருப்பின் கூரைகள் பறந்து விடும். எமது மக்கள் தமது குழந்தைகளை கூரையில் கயிறு கட்டி தான் தொட்டிலில் போடுவார்கள் அப்படி தொட்டிலில் போட்டு விட்டு சமையலறையி்ல் இருக்கும் போது கடுங்காற்று வீசினால் பிள்ளையோடு கூரையும் சேர்ந்து போய்விடும். ஆனால் புதிய அரசாங்கத்தில் ஒதுக்கப்பட்ட இடம் அப்படியில்லை .அங்கு பணிகள் இப்போது முடியும் தறுவாயில் இருக்கின்றன. 

தலவாக்கலை நிகழ்வை குழப்ப ஆட்கள் அனுப்பினார்கள்

தலவாக்கலையில் காணி உறுதி வழங்கும் நிகழ்வை குழப்ப ஒரு கோஷ்டியினர் முன்வரிசையில் இருந்தனர் அனைவரும் குடிபோதையில் வந்திருந்தனர். சத்தமிட்டு நிகழ்வை குழப்பிக்கொண்டிருந்தனர். நான் அவர்களில் ஒருவரிடம் சென்று தம்பி நீங்க எல்லாம் யாருப்பா இங்க என்ன நடக்குது ? மீறியபெத்தையில பாதிக்கப்பட யோகராஜ் வந்திருக்கேன் அஞ்சு உயிர்கள பறிகொடுத்துட்டு வந்துருக்கேன் ஏன் இப்படி சத்தம் போடுறிங்கன்னு கேட்டேன் அதற்கு அவர் உங்களுக்கு கட்டாயம் வீடு கெடைக்கும் அண்ணே ஒன்னும் பிரச்சினையில்ல இந்த கூட்டத்தத கொழப்பு எங்கள அனுப்புனாங்க அது தான் உண்மைன்னு சொன்னார். அப்போது நான் தெரிந்து கொண்டேன் என்ன இருந்தாலும் நம்ம ஆளு நம்ம ஆளு தான் அவன் எங்கள ஏமாத்த மாட்டான் ஆனா அவங்க? 

அனைத்தையும் மாற்றும் சக்தி எங்கள் பிள்ளைகளிடம் உள்ளது

ஜனாதிபதி தேர்தலில் நடந்தது என்ன என்பதை நாடே அறியும் குறிப்பாக மலையகம் அறியும். கொழும்பிலிருந்து பஸ் பஸ்ஸாக மலையகத்துக்கு வந்து வாக்கு போட்டவர்கள் அனைவரும் எமது பிள்ளைகள் தான். மாற்றம் வேண்டும் என அவர்கள் அங்கிருந்து வந்தார்கள். அதைத்தான் நானும் மறுபடி வலியுறுத்துகிறேன். இப்போது சொன்னதை செய்யும் தலைவர்கள் வந்திருக்கின்றார்கள், அவர்களும் செய்யாவிட்டால் அவர்களையும் மாற்ற வேண்டும்.அதை எமது பிள்ளைகளிடம் விட்டு விடுங்கள். எனது குடும்பம் புதைந்து விட்டது நான் அவர்களின் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருப்பேன். என்னால் முடிந்த நல்லதை மற்றவர்களுக்கு செய்வேன்.

எனக்கு ஆறுமுகன் தொண்டமானிடமோ ,செந்தில் தொண்டமானிடமோ அல்லது முத்து சிவலிங்கத்திடமோ தனிப்பட்ட கோபங்கள் எதுவும் இல்லை ஆனால் அவர்கள் இந்த மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். ஒரு சமூகத்தின் அழிவுக்கு அதே சமூகத்தை சேர்ந்தவர்களை உருவாக்குகிறார்கள்.ஆகவே இந்தவிடயத்தில் நான் ஓயவே மாட்டேன். நான் இந்த சம்பவத்தில் பலியான அனைவர் சார்பாகவும் தான் போராடுகிறேன் மட்டுமல்லாது இவ்வாறான அனர்த்தத்தில் சாக இருப்பவர்களுக்காகவும் தான் பேசுகிறேன்.எனக்கு தான் தெரியும் அந்த கடினம். மண்ணுள் புதைந்து போன 37 பேரையும் எனக்குத்தெரியும் அவர்களுக்காகவும் எனது குடும்பத்தினருக்காகவும் நான் தினமும் மூன்று நான்கு தடவை கதறி அழுகிறேன். இனி இந்த துயரம் வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது. 

நன்றி சூரியகாந்தி

No comments:

Post a Comment