August 20, 2015

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே! (வீடியோ இணைப்பு)

எதிர்வரும் செப்டம்பர்  14ஆம் நாள் ஆரம்பித்து  ஒக்டோபர் 2 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 30 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. (இதன்போது, ஈழத்தமிழர்கள் மீது
தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், அடக்குமுறைகள் மற்றும் யுத்த மீறல்கள் குறித்து சிறீலங்காவிற்கு எதிராக சர்வதேச நாடுகளால் பல்வேறு அழுத்தங்கள், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.)
அதன்பொருட்டு எதிர்வரும்  செப்டம்பர்  மாதம் 21ஆம் திகதி சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் ஐரோப்பா வாழ் தமிழ்மக்கள் அனைவரும் எழுச்சிகொண்டு, மக்கள் போராட்டம் ஒன்றை நிகழ்த்துவதற்காக தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கிறோம்.எமது சுதந்திரத்துக்காக மண்டியிடாது தொடர்ந்து ஓயாது போராடிவரும் தமிழர்களாகிய நாம், சர்வதேச நாடுகள் ஒன்றுகூடுகின்ற இந்த காலப்பகுதியில் இனவழிப்புக்கு உட்பட்டுவரும் எமது மக்களுக்கான நீதியை வலியுறுத்தியும், எமது வரலாற்றுத் தார்மீக உரிமையை வலியுறுத்தியும் பல்வேறு எழுச்சி மிகு மக்கள் போராட்டங்களை ஓயாது தொடர்ந்து நிகழ்த்தவேண்டியிருப்பது இன்றைய வரலாற்றுத் தேவையாக இருக்கின்றது.
அழிக்கப்பட்டுவரும் எமது தேசிய இனத்தை காப்பதற்காக தமிழர்களுடைய தார்மீக வரலாற்று உரிமையை, தமிழ்த் தேசியத்தை, தமிழரின் இறைமையை தமிழர்களாகிய நாமே போராடி மீட்கவேண்டியிருப்பது என்பது ஒவ்வொரு தமிழனும் தனது இனத்துக்காக செய்யவேண்டிய ஒப்பற்ற கடமையாகும்! உலகிலே நாம் மிகவும் தொன்மையான, வீரமான, தனித்துவமான கலாச்சார பண்பாட்டு நெறிமுறைகளைக் கொண்ட ஓர் தேசிய இனம். நாம் எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரனால் வீரமூட்டி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறை.
‘தார்மீக அடிப்படையில் நாம் உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது. சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனியரசு அமைக்கும் தகுதி பெற்றவர்கள். அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது’.
என்ற எமது தேசியத் தலைவரின் சத்திய வாக்குக்கு அமைய, எமது தலைமை எமக்குக் காட்டுகின்ற வழியில், உலக ஓட்டங்களுக்கு இசைவாக, புவி அரசியல் அசைவுகளை நுணுகி ஆராய்ந்து, எமது தேசிய விடுதலைப் போராட்த்துக்கான பாதையில், காலம் எமக்கிட்ட பரிமாணத்தில் நாம் தொடர்ந்து போராடிவருகிறோம்.
எமது அன்புக்குரிய தமிழ் மக்கள் கடந்த காலங்களில் நிகழ்த்திய ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் வாயிலாக உலக அரங்கில் தமிழர்களுடைய தேசிய விடுதலை அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை உங்களால் அவதானிக்க முடிகிறது. முள்ளிவாய்க்காலை அடுத்து, எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்டு, உலக அங்கீகாரத்துக்காக ஒரு வெற்றிகரமான பரிமாணத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இது எமது மக்களின் போராட்டம். எமது மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டம். மக்கள்சக்தி வாய்ந்த போராட்டங்களை எந்த சக்தியாலும் அடக்கிவிட முடியாது என்னும் நியதி உண்டு. நாங்கள் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக எழுச்சிபெற்று, எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் காட்டிய பாதையில் இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம்! நிச்சயமாக வீரமிகு போராட்டங்களை நிகழ்த்தி சுதந்திர தமிழீழம் மீட்போம்!
எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால், ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 21ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம். பயண ஒழுங்குகளை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்குபடுத்துகின்றது குறிப்பிடத்தக்கது .

geneva 2015
பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மக்களாகிய நாம் இந்த மக்கள் சக்திப் போராட்டங்களை நிகழ்த்தவுள்ளோம் !
1.   பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2.   ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3.   இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4.   பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5.   மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

No comments:

Post a Comment