எதிர்வரும் 15வது நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் சைக்கிள் (மிதிவண்டி) சின்னத்தில் தனித்துப்
போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு உங்கள் வாக்கினை வழங்கி வெற்றியடையச் செய்யுமாறு தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.
சிறிலங்காவின் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ளது. இவ்வேளையில் ஈழத்தமிழர்களின் தெரிவு யாராக இருக்க வேண்டும்?தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளில் யாரை தெரிவு செய்வது எனும் கேள்வி வரும்பொழுது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இத் தேர்தலில் ஈழத்தமிழர்களின் தெரிவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாகவே இருக்க வேண்டும்.
இவ்வேளையில் ஏன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழர்களின் தெரிவாக இருக்க வேண்டும், இவர்கள் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து வேறுபடுகிறார்கள் என்பதை பார்ப்பது முக்கியமாகிறது.
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளை கொண்டு 2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றுவரை அக்கொள்கையுடனே செயற்பட்டு வருகின்றது. தாயகத்திலும், சர்வதேசரீதியிலும் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கான நீதிக்காகவும், சர்வதேச விசாரணைக்காகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒப்பிடும்போது தாயகம், சுயநிர்ணய உரிமை, தேசியம் ஆகிய கோட்பாடுகளை கொண்டு 2001ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டாலும், 2009ம் ஆண்டிற்குப் பிறகு அதாவது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலப்பகுதிக்கு பிறகு அவை தேர்தல் கால கொள்கைகளாகவே உள்ளன. தேர்தல் காலங்களில் மட்டும் தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றி பேசுபவர்களாகவும், தேர்தல் முடிந்த பிறகு தமிழர்களின் நலன்களுக்கு எதிராக தாயகத்திலும், சர்வதேசரீதியிலும் செயற்படுபவர்களாகவும் இருக்கின்றனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தினாலேயே இதுவரையில் அதிகளவான வாக்குகளை பெற்று வருகிறார்கள். இவ் வேளையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் யாரால் ஆரம்பிக்கப்பட்டார்கள் என்பதை விட எதற்காக ஆரம்பிக்கப்பட்டார்கள் என்பதே முக்கியத்துவமாகிறது. ஈழத்தமிழர்களின் நலன்களிற்காக ஜனநாயக வழியில் போராடும் சக்தியாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டது. ஆனால் ஈழத்தமிழர்களின் நலன்களிற்காகவும், உரிமைகளுக்காகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்பட தவறிவிட்டது. எனவேதான் இவ்வேளையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாற்று சக்தியாக விளங்குகிறது.
ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதின் மூலமாகவே எமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகத்திடம் கொண்டு போய் சேர்க்க முடியும். எனவேதான் மக்களே வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றி அத்தியாவசியமாகிறது.
எதிர்வரும் 15வது நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் சைக்கிள் (மிதிவண்டி) சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு உங்கள் வாக்கினை வழங்கி வெற்றியடையச் செய்யுமாறு தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது. அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியின் முக்கியத்துவத்தை தாயகத்தில் வாழும் எல்லா மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கும் விதத்தில் செயற்படுமாறும், குறிப்பாக தாயகத்தில் வாழும் மாணவர்களை முன்னின்று செயற்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்


No comments:
Post a Comment