August 25, 2015

நல்லூர் உற்சவத்தினை முன்னிட்டு பொலிசாரினால் பலத்த பாதுகாப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திற்கு வருகை தரும் அடியவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்தும் முகமாக அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மேலதிக பொலிஸாரைக் கொண்டே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிவில் உடைகளிலும் பெரும் தொகையான பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமமாகியிருந்தது. திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 6 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலல் இனிவரும் காலங்களில் விசேட திருவிழாக்களும் நடைபெறவுள்ளது. இத் திருவிழாக் காலங்களில் சுமார் 600 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டடிருந்தனர்.
இவ் விசேட திருவிழாவிற்கு பெரும் தொகையான அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தருவார்கள். இச் சமயத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்கும், திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தும் முகமாக மேலதிக பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் உள்ள பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஆலய சூழலில் பாதுகாப்பு கடமைகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதே போன்று மக்களோடு மக்களாக பாதுகாப்பு வழங்குவதற்கு சிவில் உடைகளில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இது தவிர ஆலயத்தினை வந்தடையும் அனைத்து வீதிகளிலும் பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் தங்களுடைய உடமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment