‘அளப்பரும் கருணை’ என்னும் நடன நாடகம் கடந்த 8,9,12 ஆகிய திகதிகளில் யாழ்பாண மருத்துவபீட அரங்கில் மேடையேற்றப் பட்டிருந்தது. மருத்துவபீட
மாணவர்களின் விடுதிக்கட்டட நிதிச்சேகரிப்பை நோக்கமாகக் கொண்டு மேடையேற்றப்பட இந்நாடகத்திற்கான எழுத்துருவை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுத நெறியாள்கையை திருமதி சாந்தினி சிவநேசன் அவர்களும் திருமதி தேவந்தி திருநந்தனும் அவர்களும் செய்திருந்தனர் மேலும் இசை அமைப்பை திரு றொபேட் அவர்களும் காட்சியமைப்பை யாழ் நுண்கலைப்பீட விரிவுரையாளர் திரு சனாதனன் அவர்களும் ஒளியமைப்பை திருஞானம் தர்மலிங்கம் அவர்களும் செய்திருந்தனர்.நாடகத்தைப் பார்வையிட்டவர்கள் நாடகத்தின் எழுத்துரு இசையமைப்பு நெறியாள்கை நடிப்பு காட்சியமைப்பு மற்றும் ஒளிப்பதிவு ஆகிய சகல அம்சங்களும் சிறப்பாக இருந்ததாகவும் குறித்த நாடகம் செவ்வியல் அரங்கிற்குரிய சகல தகுதிகளையும் வெளிக்காட்டி மிளிர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். முகப் புத்தகத்திலும் இந்நாடகம் குறித்த சிலாகிப்புகள் பகிரப்பட்டிருந்தன. குறித்த நடன நாடகத்தின் நுழைவுக்கட்டணம் நிதி சேகரிப்பை மையமாகக் கொண்டு நிர்ணயிக்கப் பட்டிருந்தமையால் எல்லோராலும் செலுத்தப்பட முடியாததாக இருந்ததாகவும் சிலர் தெரிவித்தனர். மருத்துவபீடத்தின் நிதித்தேவைகள் நிறைவடைந்ததும் இனிவரும் காலங்களில் எல்லோரும் செலுத்திக்கொள்ளக் கூடிய கட்டணவசதிகளுடன் இந்நாடகம் பரவலாக மேடையேற்றம் செய்யப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நாடகம் தொடர்பாக அதனைப் பார்வையிட்ட இரு இரசிகர்களின் கருத்துக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
தயாளன் அம்பலவாணர்( வைத்தியர்)
இந்நாடகத்தின் இரண்டாவது மேடையேற்றத்தை 9/08/2015 அன்று பார்த்தேன். மிகவும் அருமையாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு உள்ளும் வசதிக்குறைவுகளுக்குள்ளும் யாழ்பாணத்தில் இத்தகையதொரு தரம் வாய்ந்த படைப்பைத் தயாரிக்க முடிந்ததையிட்டு இந்நாடகத்தைப் பார்த்த அனைவரும் பெருமை கொண்டிருப்பர். இந்நாடகத்தயாரிப்பைக் கூட்டிணைத்த வைத்திய கலாநிதி திரு. சிவயோகன், எழுத்துருவாக்கம் செய்த திரு குழந்தை ம.சண்முகலிங்கம், நெறியாள்கை செய்த திருமதி சாந்தினி சிவனேசன்,இசையமைப்பாளர் திரு.ரொபேட், காட்சி அமைப்பாளர் திரு.சனாதனன் ஆகியோர் இப்பெருமைக்கு உரியவர்கள். இந் நாடகம் கொழும்பிலும் மேடையேற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் இந்நாடகத்தை அந்நாடுகளிற் பார்வையிடக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படின் அது அவர்களுக்கும் அருமையான அனுபவத்தை வழங்கும்.
கலாநிதி என். எதிர்வீரசிங்கம்.
(1952 மற்றும் 1956ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர். 1958 ம் ஆண்டு நிகழ்ந்த ஆசிய விளையாட்டுப்போட்டியிற் இலங்கை சார்பிற் பங்கேற்றுத் தங்கப்பதக்கம் வென்றவர்.)
இன்று தாகூரின் கவிதைகளைத் தழுவி எழுதப்பட்ட அளப்பரும்கருணை என்னும் நடனநாடகத்தை மருத்துவபீட அரங்கிற் பார்த்தேன். கொக்குவில் கலாபவன நடனப்பள்ளியின் மாணவர்களினால் மிக அற்புதமாக அளிக்கை செய்யப்பட்ட இந்நாடகத்தைப்பற்றி உடனேயே ஒருகுறிப்பை எழுத மனம் உன்னியது. வெறுமனே நடனத்தையும் பாடல்களையும் கொண்ட ஒரு அளிக்கையாக இதுவிருக்கும் எனவே ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக மிக நன்கு வடிவமைக்கப்பட்ட நடனத்தையும் பாடல்களையும் கொண்ட ஒரு நடனநாடகத்தை என்னாற் தரிசிக்கமுடிந்தது. பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட பாடகர்களால் இசையூட்டப்பட்ட தாகூரின் வரிகளைக் கொண்ட கதையை இந்நாடகம் கொண்டிருந்தது. முகபாவங்களையோ கவிதை வரிகளையோ தவறவிட்டாலும் அவையின்றி நடன அசைவுகளினூடேயே நாடகத்தைப்புரிந்து கொள்ளக் கூடியளவுக்கு கலைஞர்களின் உடல்களினதும் கரங்களினதும் பாதங்களினதும் அசைவுகள் இசையுடன் இணைந்திருந்தன. நடனக்கலைஞரகள் அனைவரும் அழகானவர்கள். அவர்கள் வர்ணமயமான உடைகளில் மிளிர்ந்தனர்.
நாடகத்தில் வந்த ஒவ்வொருவருடைய பாத்திரத்துக்குமுரிய பாடல்கள் பாடப்படும் போது அதற்கான நடனமானது பாடல்களால் விபரிக்கப்பட்ட பாத்திரத்தை அப்பழுக்கின்றித் தெளிவாக ஒத்திசைவுடன் உருவகப்படுத்தி வெளிபடுத்தியதைக் கண்ணுற்றேன். பல நடனக் கலைஞர்களைக் கொண்ட இந்நாடகத்தில் ஒவ்வொருவருக்கு உள்ளும் ஓர் கதையிருந்தது. ஒவ்வொருவரும் தனித்துவமான பாத்திரமாக உருவாகி இருந்தனர். ஆனால் இவர்கள் யாவரும் ஒன்றிணைந்து மூலக் கதையின் முழுவுருவமாகவும் ஆகியிருந்தனர்.
ஒருதுறவியின் ஆன்மாதான் சிறந்ததென என நினைத்திருந்தேன். ஆனால் ஒளியைக் காண முன்பும் கண்ட போதும் கண்டபின்பும் அழகியவொரு பெண்ணின் வடிவில் வந்து தன் எண்ணங்களை வெளிப்படுத்திய துறவிவின் ஆன்மா சிறந்ததாக இருந்தது. துறவி கைவிட விரும்பிய பற்றுக் கோட்டின் குறியீடாக விளங்கியதே அவ்வழகிய பெண்ணாகும். தான் கைவிட விரும்பியதையே புனிதமாகக் கருதிப் பற்றிக் கொள்ளும் நிலையைப் பிற்பாடு துறவி அடைக்கிறார்.
தாகூரின் கவிதைகள் வாழ்வைத் துறக்கும் துறவறத்தை வலியுறுத்துபவை அல்ல.பதிலாக உயர்ப்பான வாழ்விற்கட்டுண்டு புனிதத்தை இறைத்துவத்தைத் தேடுவதை வலியுறுத்துபவை. தயவு செய்து தாகூரின் கவிதைகளை வாசித்துப் பாருங்கள். நீண்ட காலத்திற்கு முன்பு நான் அவற்றை வாசித்திருக்கிறேன்.
இவ்வகையான நடனம் கவிதை இசை என்பன இணைந்த அருமையானதொரு அளிக்கையை நான் முன்பொருபொழுதும் வடக்கு இலங்கையிற் தரிசித்திருக்கவில்லை. இதனை நான் உங்களைப் பெருமைப்படுத்துவதற்காக மட்டும் சொல்லவில்லை. இத்தகைய கலாசாரச் செயல்கள் யாழ்ப்பாணத்தில் இடம் பெறுகின்ற போது அவை எமது மக்களின் உள்ளத்தை ஆற்றுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. இதனையிட்டு நாங்கள் எல்லொரும் கூடப் பெருமை கொள்ளலாம். யுத்தத்திலும் புலம்பெயர்விலும் நமது காலங்கள் கழிந்தபோதும் அவற்றினூடே எமது கலாசாரச் செயற்பாடுகள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்பதற்கு இந்த நாடகம் நல்லவுதாரணமாகும். மேலும் எமது மக்களின் ஆன்மாவை எரித்து விட்ட கடந்த காலக அனுபவங்களில் இருந்து அவர்கள் மீள, அவர்களுக்கு வளம் சேர்ப்பதாகவும் இந்நாடகம் அமையும். இந்நாடகத்தை எல்லோரும் பார்க்கவேண்டும் என வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment