மகிந்த ராஜபக்சேவை மின்சார நாற்காலியில் உட்காரவைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது முயற்சித்தது……? சர்வதேச விசாரணையிலிருந்து
அந்த மிருகத்தைக் காப்பாற்றும் முயற்சிக்குத்தானே கூட்டமைப்பு துணை நின்றது…..? இதுதான், சென்ற இதழில், இந்தப் பகுதியில், எழுப்பப்பட்ட கேள்வி.
தமிழ் தெரிந்த எவரும் அந்தக் கேள்வியிலிருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும். யாருக்காவது அது புரியாது போயிருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல! ‘ஏய்ய்ய்ய் நிறுத்து’ என்று ஏக வசனத்தில் ஏசினால் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்று யாராவது நினைத்தால், அவர்கள் என்னையும் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். இதற்கும் நான் பொறுப்பல்ல!
இத்தனைக்கும், அந்தக் கேள்வியை நானாகவே எழுப்பவுமில்லை. மகிந்த ராஜபக்சே தரப்பிலிருந்து அப்படியொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால்தான், அந்தக் கேள்வியை எழுப்பினேன். நியாயமாகப் பார்த்தால், தன்னைப் பற்றிய அந்தத் தவறான தகவலை கூட்டமைப்பு மறுத்திருக்க வேண்டும். ‘மகிந்த ராஜபக்சேவை மின்சார நாற்காலியில் ஏற்ற நாங்கள் எப்போது முயற்சி செய்தோம்? அப்படி நாங்கள் முயற்சித்திருந்தால் அதை உங்களால் நிரூபிக்க முடியுமா’ என்று மகிந்த தரப்பிடம் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நாலுவார்த்தை கேட்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் கேட்காததற்கான அரசியல் காரணங்கள் குறித்து நான் கேள்வி எழுப்பவுமில்லை.
தன்னைப்பற்றி அப்படியொரு ‘பில்டப்’ கொடுக்க கூட்டமைப்பே முயல்வதாகவோ, இந்த நாடகத்தில் கூட்டமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகவோ நான் குற்றஞ்சாட்டவுமில்லை. இப்படியொரு உண்மைக்கு மாறான தகவலைப் பரப்பி, சிங்கள இனவெறியைத் தூண்டிவிட முயலும் மகிந்த தரப்பின் அருவருப்பான நோக்கம் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பினேன். அந்தத் தகவல் முழுக்க முழுக்கப் பொய்யானது என்பதை நிரூபிக்க, சம்பந்தன் – சுமந்திரனின் சில நடவடிக்கைகளை நான் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது….. அவ்வளவே!
‘இனப்படுகொலை என்கிற உண்மையை மூடி மறைப்பதில் துணையாக நின்றவர்களே தமிழர் பிரதிநிதிகளாக மீண்டும் வந்தால்தான், ஜெனிவா நெருக்கடியைச் சமாளிப்பது எளிதாக இருக்கும் – என்று கணக்குப் போட்டே மகிந்த தரப்பு காய் நகர்த்துகிறதோ என்கிற ஐயம் எழுகிறது’ என்று நான் எழுதியிருந்ததை வேண்டுமென்றால், சம்பந்தன் – சுமந்திரன் மீதான குற்றச்சாட்டாகவே எடுத்துக் கொள்ளலாம். அச்சுஅசலான அந்த உண்மையை உலகறியச் சொல்வதில் என்ன தவறிருக்கிறது?
உண்மையில், ‘மின்சார நாற்காலி’ என்று மகிந்த தரப்பு குறிப்பிடுவது, சர்வதேச விசாரணையை! சிங்கள மக்களை உசுப்பேற்றி, அவர்களது வாக்குகளை அபகரிப்பதற்காகத்தான் – மின்சாரம், நாற்காலி என்கிற வார்த்தைப் பிரயோகங்கள். சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், மகிந்தன் திட்டமிட்டு நடத்திய இன அழிப்பு சர்வநிச்சயமாக அம்பலமாகிவிடும். அது, மகிந்தனை மின்சார நாற்காலியில் அமர்த்துகிறதோ இல்லையோ, தமிழீழத்தை ஐ.நா.வில் தனி நாடாக – உறுப்பு நாடாக அமர்த்திவிடும். அதை முறியடிக்கத்தான் இத்தனைத் தகிடுதத்தமும்!
நடந்தது இனப்படுகொலைதான் என்பது அம்பலமாகிவிட்டால், வாசல்கதவைத் திறந்து தமிழீழத்தை வரவேற்க வேண்டிய நிலைக்கு ஐ.நா. தள்ளப்படும். அதைத் தடுக்க வேண்டுமென்றால், சர்வதேச விசாரணையைத் தடுத்தே ஆகவேண்டும், இலங்கையை இலங்கையே விசாரித்துக் கொள்ளும் – என்கிற உலக மகா மோசடியை என்ன விலை கொடுத்தாவது அரங்கேற்றியாக வேண்டும். இந்த முயற்சியில், மகிந்தன் – ரணில் – மைத்திரி மூவரும் பேசி வைத்துக்கொண்டுதான் இறங்கியிருக்கின்றனர்.
இந்த ம.ர.மை. கூட்டணியின் உள்கையாக ஐ.நா.வுக்கு உள்ளேயே…. பான் கீ மூன் அலுவலகத்துக்குள்ளேயே சிலர் இருப்பதுதான் கொடுமை. (ஆதாரம் கேட்போர், இனப்படுகொலை நடந்த சமயத்தில், உள்கைகள் நடத்திய நயவஞ்சக நாடகங்களைத் தேடிப்பிடித்துப் படித்துக் கொள்க!) சர்வதேச விசாரணைக் கோரிக்கையை முடக்குவது, உள்ளக விசாரணையைத் திணிப்பது – என்கிற சதித்திட்டத்தை நிறைவேற்றுவதில் அவர்கள் ஏறக்குறைய வெற்றிபெற்றுவிட்டார்கள் போலிருக்கிறது. தமிழினப்படுகொலையை அம்பலப்படுத்திய மானுடன் கல்லம் மேக்ரேவின் குமுறலைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
“பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. உறுதி செய்திருக்கிறது. நடந்திருப்பது, சர்வதேச மனித உரிமை மீறல். அது குறித்து, உள்ளக விசாரணை தான் நடக்குமென்றால், அது கொடூரமாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் அத்தனைப் பேரையும் அவமதிக்கிற முடிவு…..
‘உள்ளக விசாரணை நடத்தப்படும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ – என்று சர்வதேசத்துக்கு வாக்குறுதி அளித்தபடியே, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உயர் பதவிகளில் அமர்த்திக் கொண்டிருக்கிறது மைத்திரி அரசு……”
என்று இந்தவாரத் தொடக்கத்தில் வேதனையோடு பேசியிருக்கிறார் மேக்ரே.
‘உள்ளக விசாரணை நடத்தப்படும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ – என்று சர்வதேசத்துக்கு வாக்குறுதி அளித்தபடியே, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உயர் பதவிகளில் அமர்த்திக் கொண்டிருக்கிறது மைத்திரி அரசு……”
என்று இந்தவாரத் தொடக்கத்தில் வேதனையோடு பேசியிருக்கிறார் மேக்ரே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, அதிலும் குறிப்பாக சம்பந்தன் – சுமந்திரனுக்கு ஐ.நா. மற்றும் இலங்கையின் இந்த தில்லுமுல்லுகள் விளங்குகிறதா, இல்லையா? அல்லது, அறிந்தும் அறியாதவர்கள்போல் அறிதுயிலில் இருக்கிறார்களா? புரியவில்லை. ஐ.நா.வுக்குள் இலங்கையின் உள்கைகள் இருக்கலாம்! தமிழருக்கான அமைப்பு – என்று சொல்லிக்கொள்கிற ஓர் அமைப்பில் இருக்கலாமா?
உள்நாட்டு விசாரணை ஒன்றை சிங்கள இலங்கை முறையாக நடத்திவிடும் என்று எந்த அடிப்படையில் சுமந்திரன்கள் நம்புகிறார்கள்? கடந்த 67 ஆண்டுகளாக, தமிழருக்கு, தண்ணீரில் எழுதித் தரப்படுகிற வாக்குறுதிகளின் அடிப்படையிலா! அந்த மோசடி வரலாற்றை அறிந்தே, ‘சர்வதேச விசாரணை நடைமுறை சாத்தியமற்றது…. உள்ளக விசாரணை கோருவதுதான் ராஜதந்திரம்’ என்று கூசாமல் பேச எப்படி முடிகிறது இவர்களால்?
ஓரிரு ஆண்டுகளுக்கு முன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்திசசீதரன், ‘நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்’ என்கிற வேண்டுகோளை ஜெனிவா அரங்கில் வெளிப்படையாக எழுப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது. அவரது குரல் ஈழத்தின் குரல் மட்டுமல்ல, காலத்தின் குரல்! அந்த யதார்த்தத்தை உணராமல், ‘இனப்படுகொலை, சர்வதேச விசாரணை என்றெல்லாம் பேசக்கூடாது’ என்று அனந்தி மீது பாய்ந்தவர் எவராக இருந்தாலும், அவர் சிங்களப் பொறுக்கிகளின் உள்கையாகத் தானே இருக்க முடியும்! பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதியாக எப்படி இருக்க முடியும்?
மீண்டும் தேர்தல் வரும் – என்பதையே மறந்து தன்னிச்சையாகச் செயல்படுகிறவர்கள், தேர்தல் வந்தவுடன் பழைய கதைகளை மறைக்கப் பார்ப்பது தமிழகத்திலும் தொடர்கிற கொடுமை தான்! என்றாலும், ஒன்றரை லட்சம் உயிர்களை மறந்து செயல்படுவதென்பது, கொடுமையிலும் கொடுமை.
இதையெல்லாம் நேரடியாகக் கதைக்காமல், பூடகமாகச் சொல்லியிருக்கிறார் வட மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன். ‘மக்களுக்காக அர்ப்பணிப்பவர்களுக்கு வாக்களியுங்கள்’ என்று அவர் சொன்னதற்காக அவர் மீது பாய்கிறார்கள் சிலர். அப்படிச் சொல்லாமல், ‘இனப்படுகொலையை மூடி மறைக்கத் துணை போனவர்களுக்கு வாக்களியுங்கள்’ என்றா விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுக்க முடியும்?
உள்ளதை உள்ளபடி பேசியதற்காக விக்னேஸ்வரன் பாராட்டப் படுகிறார் என்றாலும், ‘ஏறிய ஏணியை எட்டி உதைப்பவர், புரூட்டஸ்’ – என்றெல்லாம் ஏறி மிதிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘இனப்படுகொலை… சர்வதேச விசாரணை – என்றெல்லாம் பேசக்கூடாது… மூச்ச்…’ என்று மிரட்டி, ஒன்றரை லட்சம் மக்களின் உயிர்த்தியாகத்துக்குத் துரோகம் செய்த அவர்களிடமிருந்து இதைத்தவிர வேறெதை எதிர்பார்க்க முடியும்?
ஒன்றரை லட்சம் உயிர்களுக்குத் துரோகம் செய்தவர்கள், அந்த உயிர்களுக்கு நீதி கேட்க முயல்பவரைப் பார்த்து ஆத்திரப்படுவதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?
தேர்தலில் நடுநிலை வகிப்பதாக அறிவித்ததற்காகத் தான் விக்னேஸ்வரன் மீது பாய்கிறோம் – என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இப்போது முயல்பவர்கள் அத்தனைப் பேரும், ‘நடந்தது இனப்படுகொலை’ என்று அறிவித்ததற்காக விக்னேஸ்வரன் மீது ஏற்கெனவே பாய்ந்தவர்கள் தான். இதையெல்லாம் எதிர்பார்த்தோ என்னவோ, லண்டனில் பேசும்போதே, ‘முத்திரை குத்தல்கள் மற்றும் சாடல்களுக்கு அஞ்சி எம் இனத்துக்கு நிகழ்த்தப்பட்டது இன அழிப்புதான் என்கிற நிலைப்பாட்டிலிருந்து நாம் பின்வாங்க முடியாது’ என்று பிரகடனமே செய்துவிட்டார் விக்னேஸ்வரன்.
இன்று விக்னேஸ்வரன் மீது கல்லெறிகிற நண்பர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்….
விக்னேஸ்வரன் தனது நிலையில் உறுதியாக இருக்கிறார்……
இன அழிப்பு என்று சொன்னதிலிருந்து பின்வாங்க முடியாது என்கிறார்……
‘அது இன அழிப்பு இல்லை, போர்க்குற்றம்தான்’ என்று இலங்கை அரசுக்குப் பின்பாட்டு பாடிய உங்களுக்கு, ‘அந்த நிலையிலிருந்து பின்வாங்கவே மாட்டோம்’ என்று விக்னேஸ்வரன் மாதிரி உறுதியாக அறிவிக்கும் துணிவு இருக்கிறதா?
விக்னேஸ்வரன் தனது நிலையில் உறுதியாக இருக்கிறார்……
இன அழிப்பு என்று சொன்னதிலிருந்து பின்வாங்க முடியாது என்கிறார்……
‘அது இன அழிப்பு இல்லை, போர்க்குற்றம்தான்’ என்று இலங்கை அரசுக்குப் பின்பாட்டு பாடிய உங்களுக்கு, ‘அந்த நிலையிலிருந்து பின்வாங்கவே மாட்டோம்’ என்று விக்னேஸ்வரன் மாதிரி உறுதியாக அறிவிக்கும் துணிவு இருக்கிறதா?
விக்னேஸ்வரனுக்கு பொறுமையும் ராஜதந்திரமும் வேண்டும் – என்று போதிக்கிற மேதாவிகள், பொறுமையோடும் அறிவாற்றலோடும் அவர் செயல்பட்டதால்தான், ‘நடந்தது இனப்படுகொலை’ என்கிற வலுவான தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது என்பதை மூடி மறைக்கிறார்களே…. ஏன்? அந்தத் தீர்மானம் சர்வதேசத்தின் மனசாட்சியைத் தொட்டிருப்பது அவரது ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியல்லாமல் வேறென்ன! ‘இலங்கையின் உள்ளக விசாரணைக்கு அனுமதி கொடுக்காதீர்கள்’ என்று பிரிட்டிஷ் எம்.பி.க்களிடம் நேரடியாகவே வேண்டுகோள் வைக்க விக்னேஸ்வரனால் முடிகிறதே…. இது ராஜதந்திரமா, இல்லையா?
நடந்தது இனப்படுகொலை இல்லை – என்று ஜெனிவாவில் போய்ப் பேசுவதுதான் ராஜதந்திரம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களிடம் கேட்க, இன்னொரு கேள்வி இருக்கிறது. விக்னேஸ்வரன் என்கிற அந்த மனிதரின் ராஜதந்திரம்தானே, சுய நிர்ணய உரிமை, கூட்டாட்சி – என்றெல்லாம் மீண்டும் பேச வைத்திருக்கிறது உங்களை! நீங்களே விரும்பினால் கூட, இதை மறுக்க முடியுமா?
‘இனப்படுகொலை என்றெல்லாம் பேசாதீர்கள்’ என்று அமெரிக்காவில் போய் சுமந்திரன் போதித்ததையும், அதற்காக வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக் கொண்டதையும் எழுதினால், ‘இதையெல்லாம் எங்கேயிருந்து பிடிக்கிறீர்’ என்று எகத்தாளமாகக் கேட்கிறார் புலத்தில் வாழுகிற ஒரு நண்பர். அவர் வசிக்கிற அதே நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞன்தான், ‘மிஸ்டர் சுமந்திரன், நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல…. புழக்கடை வழியாகப் பாராளுமன்றத்தில் நுழைந்தவர்… மக்கள் சார்பில் பேசுகிற உரிமை உங்களுக்கு இல்லை’ என்று சுமந்திரனின் முகத்துக்கு நேராகவே நேர்மையோடு சொன்னான். ‘எங்கே பிடிக்கிறீர்’ என்று என்னைக் கேட்கிற நண்பருக்கு, கௌரேஷ் என்கிற அந்த இளைஞனைத் தெரியவே தெரியாதா?
புலத்திலிருந்து கௌரேஷ் போன்ற இளைஞர்கள் அறிவோடும் உணர்வோடும் பேசுவதைப் போலவே, தாய்த் தமிழ் மண்ணிலிருந்து தெளிவாகப் பேசுகிறார் – 15 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த பெண் போராளி கோகிலவாணி. (இயக்கப் பெயர் – சுகன்யா.) கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அவரது உருக்கமான அறிக்கை ஒன்று அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
“20 ஆசனங்களைப் பெற்றால் பாராளுமன்றத்தில் பேரம் பேசும் சக்தியைப் பெற முடியும், அப்படி ஒரு பலத்தைக் கூட்டமைப்பு பெற ஆணையிடுங்கள் – என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா வேண்டுகோள் வைக்கிறார். 20 ஆசனங்களைப் பெற்று, இவர் எதைப் பேரம் பேசப் போகிறார்? அயலாதிக்க சக்திகளின் நலன்களுக்காக எங்கள் உரிமைகளைப் பேரம் பேசுவாரே தவிர, எங்களது உரிமைகளுக்காக ஒருபோதும் அவர் பேரம் பேசப் போவதில்லை”…………
இது, கோகிலவாணி அறிக்கையிலிருந்து ஒரு சிறு துளி.
இது, கோகிலவாணி அறிக்கையிலிருந்து ஒரு சிறு துளி.
வரலாறு எம்மை விடுதலை செய்யும் – என்கிற மாவீரர்களின் நம்பிக்கையையும் கோகிலவாணி நினைவுபடுத்தியிருக்கிறார். அந்த வாக்கியம், அந்த மண்ணின் காவல்தேவதைகளாகத் திகழ்ந்த ஒவ்வொரு சகோதரியையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
அங்கயற்கண்ணி போன்ற எண்ணற்ற சகோதரிகளின் உயிர்த் தியாகத்தை நினைவுபடுத்துகிறது, கோகிலவாணியின் அறிக்கை. 60 கிலோ எடை கூட இல்லாத எங்கள் அங்கயற்கண்ணி, 6000 டன் எடையுள்ள அபித கப்பலைத் தகர்த்துவிட முடியும் என்கிற உறுதியான நம்பிக்கையோடுதான் நள்ளிரவில் நடுக்கடலில் நீந்தினாள். ஜெயித்தது அபித அல்ல…. அங்கயற்கண்ணியின் நம்பிக்கைதான் ஜெயித்தது. அதைப்போலவே, தங்களைக் காட்டிலும் வலுவான சக்திகளை எதிர்த்து எதிர் நீச்சல் போடுகிற கோகிலவாணிகளின் நம்பிக்கையும் ஜெயிக்கட்டும்…. எத்தனைப் பேர் துரோகம் செய்தாலும், வரலாறு அவர்களை விடுதலை செய்யட்டும்!
No comments:
Post a Comment