கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி விதைக்கப்பட்டவர்களின் ஆன்ம சக்திக்கு மக்கள் வழங்கிய வெற்றி.மகேஸ்வரன் மேல் கொண்ட மரியாதை தான் விஜயகலாவுக்கு
வழங்கப்பட்ட சந்தர்ப்பம்.இனி ரணில் குள்ள நரியின் திட்டமாக இருக்க போவது 2020 இல் யாழில் 2 ஆசனங்களை பெரும்பான்மை கட்சிக்கு பெறுவதாக இருக்கும்.கூட்டமைப்பு இனி செய்ய வேண்டியது..
கூட்டமைப்பு ஐ.தேக வுக்கு பாராளுமன்றத்தில் அரசமைக்க ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் வழங்க வேண்டும். ஆனால் அமைச்சு பதவிகளை ஏற்க கூடாது. விடுதலைப்புலிகள் ஆயுத மேந்தி போராடியவாறு உரிமைகளை பெற முயற்சித்துக்கொண்டே மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டது போலவே தமிழ் கூட்டமைப்பும் ஜனநாயக ரீதியில் உரிமை போராட்டத்தை முன்னெடுத்தவாறு மக்களின் அபிவிருத்திக்கும் வழிசமைக்க வேண்டும்.
அதாவது கூட்டமைப்பானது ஒரு உத்தியோகப்பற்றற்ற அரசாங்கமாக தமிழர் பிரதேசங்களில் செயற்பட வேண்டும். மாகாண சபை தலைமை, பாராளுமன்ற உரிமை என போதுமான சக்தியை கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள வழங்கியுள்ளார்கள். மக்களின் அபிவிருத்தி, உரிமை போராட்டம் இரண்டு பாதைகளிலும் சமாந்தரமாக கூட்டமைப்பு பயணிக்க வேண்டும்.
அமைச்சு பதவிகளை ஏற்காதவிடத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரச நிதி பெருமளவில் கிடைப்பது அசாத்தியம்.
எனவே அதனை நிவர்த்தி செய்ய கூட்டமைப்பு இரண்டு தந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
1) தொடர்ச்சியாக கடுமையான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு பிரயோகித்த வண்ணம் இருக்க வேண்டும். இந்த அழுத்தங்கள் நிதானமான கிழட்டுத்தனத்துடனான அழுத்தங்களாக இருக்க கூடாது. ஆக்ரோஷமும் , உச்சகட்ட தியாகங்களையும் செய்யக்கூடிய, உலகிற்கு தெளிவாக எம் பிரச்சனைகளை சொல்ல கூடிய அழுத்தங்களாக இருக்க வேண்டும்.
2)புலிகள் ஆயுத போராட்டத்தின் போது எவ்வாறு புலம்பெயர் மக்களிடமிருந்து நிதியை பெற்றார்களோ, அதே போல் புலம் பெயர் அமைப்புக்களிடமிருந்து நிதி பெறப்பட்டு போரால் பாதிக்கப்பட்ட போராளிகள், பொதுமக்களின் வாழ்வு அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.
அதேபோல் புலம்பெயர்ந்திருக்கும் எம் மக்களில் முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பவர்களை அழைந்து வந்து தமிழர் தாயக பிரதேசங்களில் தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு முதலிட வருபவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும், இந்த விடயத்தில் புலிகள் எவ்வாறு புலம் பெயர் அமைப்புக்களை கையாண்டார்களோ அதே அணுகுமுறையை கூட்டமைப்பு கையாள வேண்டும்.
அடுத்த பாதை உரிமை போராட்டமும் இனப்பிரச்சனைக்கான தீர்வும்.
இனப்பிரச்சனைக்கான தீர்வுக்காக மக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு, தமிழ் மக்களிடம் ஆய்வு மாநாடுகள் நடாத்தப்பட்டு உலக அரசியல் மேதைகளின் உதவிகளை பகிரங்கமாக பெறவேண்டும்.
இனப்பிரச்சனைக்கான தீர்வை எட்டுவதற்காக, அரசியல் துறை சார் கல்விமான்கள், இளைஞர்கள், சட்ட வல்லுனர்களை கொண்ட உத்வேகம் மிக்க குழு தமிழ் தேசிய கூட்டமைப்பால் அமைக்க படவேண்டும். அடுத்த பொது தேர்தலுக்கும் அந்த குழுவை வேட்பாளர்களாக களமிறக்கும் வகையில் அவர்களை தயார் செய்ய வேண்டும்.
எமது உரிமைகளை பெற தடையாக இருக்கும் 19 ஆவது திருத்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையிலான வலுவான வாதங்களை, உலக அரங்கின் உதவிகளோடு பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் முன்வைக்க வேண்டும். இவற்றுக்காக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தீர்வின் அவசியத்தை அந்த மக்களின் உரிமை குரலாக சர்வதேச அரங்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒலிக்க வேண்டும்.இவ்வாறான அணுகு முறைகளின் ஊடாக, வன்முறைகளால் எம் மக்கள் அடக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அனைத்துக்கும் எதிராக சர்வதேச பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
உரிமை போராட்டத்தின் அடுத்த பரிமாணமாக, உலக வல்லரசுகளின் சுயலாப காய்நகர்த்தல்களை ஆராய்ந்து, அதில் எமக்கு சாதகமாக நாம் உருவாக்க கூடிய காய் நகர்வுகளை இனம் கண்டு இராஜ தந்திர ரீதியில் அவ் நகர்வுகளை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும். இதற்காக அரசியல் அறிஞர்களை ஆலோசகர்களாக கூட்டமைப்பு நியமிக்க வேண்டும்.
இவ்வாறான அபிவிருத்தி, இனப்பிரச்சனை தீர்வு இரண்டையும் வினைத்திறனுடன் முன்னெடுக்க கூட்டமைப்பு தவறும் பட்சத்தில், எம் இளைஞர்கள் செய்த தியாகங்களின் மகிமை மழுங்குவது மட்டுமல்லாது, அவர்களுக்காக கூட்டமைப்புக்கு வாக்கிட்ட மக்களும் ஏமாற்றப்படுவார்கள். அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால், அடுத்து வரும் இளம் சமுதாயம் கூட்டமைப்பை நிராகரிக்கும்.
No comments:
Post a Comment