April 16, 2015

அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து சோமவன்ச விலகினார் – மீண்டும் பிளவுபடுகிறது கட்சி!

ஜேவிபியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து ஜேவிபி மீண்டும் பிளவுபடும் நிலை தோன்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேவிபியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து விலகிக் கொள்வதாக சோமவன்ச அமரசிங்க இன்று அறிவித்துள்ளார்.

அத்துடன், தாம் விரைவில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது இந்த முடிவு முற்றிலும் தனிப்பட்டதே என்றும், எவரும் தன்னை ஜேவிபியை விட்டு விலகுமாறோ, தம்முடன் இணைந்து கொள்ளுமாறோ கோரவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

இரண்டு பிரதான கட்சிகளும் நம்பிக்கையை மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும், சில முடிவுகளை எடுத்ததன் மூலம் ஜேவிபியும் வேகமாக நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

1988-90 கிளர்ச்சியின் போது, எல்லா பிரதான தலைவர்களும் அழிக்கப்பட்ட பின்னர், ஜேவிபியை பிரதான அரசியல் நீரோட்டத்துக்கு கொண்டு வந்தது போன்று, கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபியின் தலைவராக இருந்த சோமவன்ச அமரசிங்க அண்மையில் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், கட்சியின் அனைத்துலக விவகாரப் பிரிவின் தலைவராகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment