April 15, 2015

வலிகாமம் பகுதியில் மக்களின் வீடுகளை இடித்து கொள்ளையில் ஈடுபட்ட 30 பேர் கைது ( படங்கள் இணைப்பு)

யாழ்.வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுடைய வீடுகளை படையினர் இடித்து அழித்ததற்கு மேலதிகமாக இன்றைய தினம் அப்பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11ம் திகதி வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 9 கிராம சேவகர் பிரி வுகளில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மக்கள் தற்போது தங்கள் காணிகளை துப்புரவு செய்யும் பணியினை முன்னெடுத்திருக்கின்றனர்.



இந்நிலையில் குறித்த பகுதியில் மக்களுடைய வீடுகளை இடித்தழிக்கும் நாசகார செயலில், கொள்ளையர்கள் சிலர் ஈடுபட்டிருக்கின்றனர்.

குறித்த பகுதிகளில் இரவு மற்றும் பகல் வேளை களில் நுழையும் கொள்ளையர்கள் விடுவிக்கப்பட்ட மக்களுடைய இடங்களுக்குள் நுழைந்து இரும்புக்காக படையினர் அழித்தது போக மீதமாக உள்ள கட்டிடங்களை இடித்து இரும்பு எடுக்கின்றனர்.

மேலும் மக்களுக்குச் சொந்தமான வேம்பு மற்றும் பலா, பூவரசு, தேக்கு ஆகிய மரங்களையும் கொள்ளையர்கள் வெட்டி வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர்.

இந்நிலையில் குறித்த கொள்ளையை தட்டிக் கேட்கச் சென்றால் மக்களையும் அதிகாரிகளையும் கொள்ளையர்கள் தாக்க முற்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

குறிப்பாக இன்றைய தினம் மேற்படி பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டிருந்த சிலரை தடுக்கச் சென்றிருந்தபோது, வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறீமோகனை கொள்ளையர்கள் தாக்க முற்பட்டதை தொடர்ந்து பொலிஸார் திடீர் சோதனையினை நடத்தி 30 பேரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை படையினர் அழித்தது போக மீதமிருக்கும் வீடுகளையாவது காப்பாற்றிக் கொடுப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் உருக்கமாக கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment