April 10, 2015

துப்பாக்கி சூடு அதிர்ச்சி தரும் அரசியல் பின்னணி – மே 17 இயக்கம் வெளியிடு!

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச் சென்ற கூலித்தொழிலாளர்கள் 20 பேரை அம்மாநில காவல்துறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. இந்தசம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த சூழலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த படுகொலையின் அரசியல் பின்ணணி பற்றிய அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார்.

ஆந்திர பிரதேசத்தின் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையேயான அதிகார- கடத்தல் போட்டிக்கு பலியாக்கப்படுகிற அப்பாவி தமிழர்கள், கடந்த சிலவருடங்களில் ஆந்திர அரசினால் கொலை செய்யப்படுகிறார்கள். பல்லாயிரம் தமிழர்கள் வழக்கு விசாரணையின்றி சிறையில் அடைக்கபட்டிருக்கிறார்கள்.
ஆந்திராவின் தெலுங்குதேசம், ராஜசேகரரெட்டியின் ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களுக்கு இடையே நிகழும் நிழல் சண்டையின விளைவாக தமிழர்கள் குறிவைத்து கொலை செய்யபடுகிறார்கள்.செம்மரக்கடத்தலில் மரவெட்டிகள், சுமைதூக்குவோர், பளுஏற்றுபவர், வாகனம் மூலமாக வெளிக்கொண்டு வருபவர்கள் (transporters), ஏற்றுமதிசெய்பவர்கள் என பலர் சங்கிலி தொடராக இருக்கையில் மரவெட்டும் தமிழர்களை மட்டுமே ஆந்திர அதிரடிப்படை குறிவைத்து கொலை செய்கிறது.


கடப்பா, நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் இந்த செம்மரக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தேர்தல் நேரத்தில் நிதி அளிப்பவர்களாக இருக்கிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகளின் சொந்தக்காரர்கள் பங்கெடுக்கும் உள்ளூர் தேர்தல்களுக்கும் உதவுகிறார்கள். சித்தூரின் உயர்காவல்துறை அதிகாரியான (சூப்பிரிடெண்டட்) பி.எச்.டிராமகிருஷ்ணா, கடத்தல்காரர்கள் அரசியல் தொடர்புகளோடு செயல்படுகிறார்கள். இவர்கள் ஒய்.ராஜசெகரரெட்டி காங்கிரஸ் அல்லது தெலுங்கு தேசம் கட்சியோடும், சமைக்யா ஆந்திரா கட்சியுடனும் இணைந்து செயல்படுவதாக ஜூன் 05, 2014, தேதி பேட்டி அளித்திருக்கிறார்

அதன் இணைப்பு: (http://www.deccanchronicle.com/140605/nation-crime/article/smugglers-enjoy-political-links)

மேலும் சித்தூரின் கலெக்டர் பல கடத்தல்காரர்களுக்கு எதிராக ஆணை பிறப்பித்திருக்கிறார்
பட்டல வந்தனப்பள்ளியை சேர்ந்த எம்.ரெட்டிநாராயணா, சப்பிடி வந்தல பள்ளியை சேர்ந்த ‘சப்பிடி’ மகேஸ்நாயுடு, கடப்பாவின் கோடூர்பகுதியை சேர்ந்த ‘கங்கிரெட்டி’, சித்தூரைச் சேர்ந்த விஜயானந்தரெட்டி, சித்தூரின் கே.விபள்ளியை சேர்ந்த பாஸ்கர் நாயுடு. இவர்களை குற்றத்தடுப்பு சட்டத்தின்படி தடுக்க ஆணையை வெளியிட்டிருந்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இதில் கெங்கிரெட்டி என்பவர் இந்த பிரச்சனையை அறிந்த பின்னர் துபாய்க்கு தப்பிச்சென்றதும், இவர் “தம்மை கொலைசெய்ய முயற்சிக்கிறார் என்று 2014 மே மாதத்தில் சந்தரபாபு நாயுடு ஆந்திரபிரதேச ஆளுநரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த கெங்கிரெட்டி என்பவர் சந்திரபாபுநாயுடுவின் எதிர்கட்சியில் நெருக்கமான உறவுவைத்திருப்பவர். மேலும் ரெட்டிநாராயண எனும் கடத்தல் காரன் ZillaParishad Territorial Constituency எனும் ஜில்லாபரிஷத் பகுதி தேர்தலில் தெலுகு தேசத்தின் சார்பில் போட்டியிட்ட நபர். இந்த கெங்கி ரெட்டி சந்திரபாபுநாயுடு மீது 2009இல் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர் என்கிற குற்றச்சாட்டு உண்டு.

மஹேஸ்நாயுடு என்பவர் தெலுகு தேசத்தின் ஆதரவாளர். கெங்கிரெட்டி கோடுர் சட்டமன்ற தொகுதியின் ரஜசேகரரெட்டி கட்சியின் ஆதரவாளர். இந்த சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றால் ஆறுமாதம் முதல் ஒருவருடம் வரை சிறையில் இருக்கநேரிடும்.

மேலும் கடந்த செப்டம்பர் 18, 2014ஆம் தேதியில் ஆந்திராவின் இரண்டு உயர்காவல்துறை அதிகாரிகள் செம்மரக்கடத்தலில் துணை செய்ததும், பங்கெடுத்ததும் பற்றி அறிந்து பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். சி.ஐ.டி பிரிவினை சேர்ந்த டி.எச்.பி உதய்குமார், துணை டிவிசனல் காவல்துறை அதிகாரியாக ராஜாம்பேட், கடப்பாபகுதியை சேர்ந்த ஜி.வி.ரமண்ணா ஆகியோர் சட்ட விரோத செயலின் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக சந்திரபாபுநாயுடுவின் முதல்வர் அலுவலகம் அறிவித்திருந்தது.

ஆக இவற்றினை கணக்கில் எடுத்துபார்க்கும் பொழுது ஆந்திராவில் செம்மரக்கடத்தலில் பெருமளவு ஈடுபட்டிருப்பவர்களும், அதன் மூலமாக லாபம் அடைபவர்களுமாக இருப்பவர்கள் அங்கிருக்கும் பெரிய கட்சிகளிலும், பெரும்செல்வந்தர்களாக இருப்பவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கெடுத்து இருப்பதை தொடர்ச்சியான நிகழ்வுகள் ஆதாரப்பூர்வமாகவும், செய்தி தொடர்பின் மூலமாகவும் அறிய முடிகிறது. இந்தநிலையில் இங்கு மரம் வெட்டுவதற்காக பணியமர்த்தப்படுகிற தமிழகத்தின் ஏழை எளிய மக்களுக்கு இந்த பிரச்சனைகள் குறித்த புரிதலோ அதற்கான வாய்ப்போ இல்லாத நிலையில் தங்களது வறுமையை நீக்கும் முயற்சியில் வேலை தேடிச்செல்பவர்களை ஆந்திர அரசு பச்சைப்படு கொலை செய்திருக்கிறது.


மேலும் ஒரு லட்சம் கோடி அளவு மதிப்பிருப்பதாக அறியப்பட்ட செம்மரக்காடுகளில் இருக்கும் மரங்களை அரசாங்கமே எடுத்து மரத்தினை ஏற்றுமதி செய்யும் பொழுதில் தமது அரசிற்கு வருமானம் அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் இக்கொலைகளை செய்யசந்திரபாபுநாயுடு முயன்றிருக்கிறார், மேலும் இதன் மூலம் தனது அரசியல் எதிரிகளாக இருக்கிற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகார கடத்தல் காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சந்திரபாபு நாயுடு கட்சியில் இருக்கும் பிற கடத்தல்காரர்களை அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார் எனில் செம்மரக்கடத்தலை உண்மையாகவே தடுத்திருக்க முடியும். இதே கால கட்டங்களில் தமிழகத்தில் இருந்து செல்லக் கூடிய ஏழை உழைப்பாளிகளை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது ஆந்திர அரசு, இவ்வாறு கிட்டதட்ட 4000தமிழர்கள் சிறை வாசிகளாக பிடித்துவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்கள் ஏழை பழங்குடி மக்களாக இருப்பதால் அவர்களுக்கு சட்டங்களைப் பற்றியும் தெரியாது அவர்களை மீட்டெடுக்கும் வழியுமற்று சிறையில் வாடுகின்றனர் இது வரை தமிழக அரசும் மீட்டெடுக்கவில்லை

இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கும் பெரிய முதலாளிகள், அரசியல்வாதிகள் , அதிகாரிகள் மீது இந்த அரசு நடவெடிக்கை எடுக்கவில்லை. மேலும் டிசம்பர் 2013இல் கொலை செய்யப்பட்டவனத்துறை அதிகாரிகளான டேவிட், சிரிதர்ராவ் ஆகியோர் நேர்மையான அதிகாரிகளாக பணியாற்றி மரக்கடத்தலை தடுக்க முயன்றதாலேயே கொலை செய்யப்பட்டார் என்று கூறப்படுவதற்கு இது வரை விளக்கங்கள் அளிக்கப்படவில்லை . இவ்வாறு பல்வேறு உள் அரசியலை வைத்திருக்கும் ஆந்திர அரசு தமிழர்கள் மீது நிகழ்த்திய இந்தப்பச்சைப் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஆந்திர அரசின் பயங்கரவாதத் தன்மையையே காட்டுகிறது.

இவ்வகையில் தமிழக அரசு கடுமையான கண்டனத்தினையும், சிறையில்வாடும் 4000 தமிழர்களையும் மீட்டெடுக்க முயற்சிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நீண்டநாட்களா கநிகழ்ந்துவரும் இந்த மனித உரிமை மீறல் தமிழக அரசின் மெத்தனப் போக்கினாலேயே இந்தநிலையை எட்டி உள்ளது.

No comments:

Post a Comment