March 12, 2015

விபூசிகாவை விடுவிக்க தாய் வர வேண்டும்!!

பாலேந்திரன் விபூசிகாவை மகாதேவா சைவச் சிறுவர்
இல்லத்திலிருந்து நீதிமன்றத்தினூடாக விடுவிப்பதற்கு அவரது தாயார் ஜெயக்குமாரி கிளிநொச்சிக்கு வருகைதர வேண்டும் என கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி கூறினார்.

விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவிப்பதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (12) மனுத்தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'விபூசிகாவின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இன்னமும் அவர் கிளிநொச்சிக்கு வரவில்லை. ஓமந்தையூடாக இங்கு வருவதற்கு அவருக்கு ஆள் அடையாள அட்டை தேவையாகவுள்ளது.

அவரது அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை அவர் கைது செய்யப்பட்ட வேளையில் பொலிஸார் எடுத்துக்கொண்டனர். அவற்றை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜெயக்குமாரி கொழும்பு நீதிமன்றத்தை வியாழக்கிழமை (12) கோரியுள்ளார்.

இந்த மனு வியாழக்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, முடிவு தெரியவரும். ஆவணங்கள் கிடைத்த பின்னர் அவர் கிளிநொச்சிக்கு வருகை தருவார். அதன் பின்னரே விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார்.

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம், பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

jayakumar 02  
jayakumar 01

No comments:

Post a Comment