September 9, 2014

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி அணிதிரளுங்கள் - புலம்பெயர் தமிழ் மக்களிடம் வன்னி மக்கள் ஒன்றியம் கோரிக்கை!

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயலம் நோக்கி எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள எழுச்சிப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் மக்களை அணிதிரண்டு
கலந்துகொள்ளுமாறு வன்னி மக்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான இந்தப் போராட்டம் காலத்தின் கட்டாயமானது. இதில் அனைவரும் கலந்துகொள்வதன் மூலமே போராட்டத்தை வெற்றிபெறச் செய்யமுடியும் என்றும் வன்னி மக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வன்னி மக்கள் ஒன்றியம் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அன்புக்கும் மதிப்புக்குமுரிய புலம்பெயர்வாழ் உறவுகளே, உங்களுக்கு வணக்கம்.
எமது தமிழ் மண் இன்று சிறிது சிறிதாக சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. எமது தாயகம் சிங்கள சாம்ராஜ்ஜியமாக மாறிவருகின்றது. வன்னியில் தமிழ் மக்கள் மீளக்குடியேற்றப்படவேண்டிய பலநூறு ஏக்கர் காணிகளை சிங்களப் படைகள் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. தொடர்ந்தும் ஆக்கிரமிப்புக்கள் நடந்தவண்ணமே உள்ளன. இங்கு எமது பிள்ளைகள் உறங்குகின்ற மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிங்களவர்களின் முகாம்களாக மாறி வருகின்றன. உலகில் எங்குமே நடைபெறாத இன அழிப்பு, இனச் சுத்திகரிப்புச் செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் அரங்கேற்றப்படுகின்றது. இனியும் நாம் பொறுமையாக இருந்தால் எங்கள் வீட்டுக் காணிகளுக்குள்ளும் நாளை படை முகாம்கள் அமைக்கப்பட்டுவிடும்.

எதிரியின் திட்டங்களை முறியடித்து எமது நிலத்தில் நாங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்றால் சளைக்காமல் நாங்கள் போராட வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதெல்லாம் வெற்றிச் சங்கை எடுத்து ஊதவேண்டும். இப்போது புலம்பெயர் தேசத்திலுள்ள மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இது எமது இன விடுதலைக்கான சந்தர்ப்பம். எமது உறவினர்களுக்காக ஓர்மத்துடன் குரல்கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம். இதை தவறவிடக்கூடாது.
எதிர்வரும் 15 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயலகத்திற்கு முன்னால் புலம்பெயர் மக்கள் திரண்டு குரல்கொடுக்கத் தயாராகி வருகின்றீர்கள். இந்தப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தி நடத்துகின்ற புலம்பெயர் தேசிய அமைப்புகளுக்கு வன்னி மக்கள் ஒன்றியம் தனது பூரணமான நன்றியைத் தெரிவிக்கின்றது. ஆனால், ஒரு விடயம். இந்தப் போராட்டம் வெற்றி பெறவேண்டுமாயின் புலம்பெயர் தேசத்திலுள்ள மக்கள் அலை அலையாகத் திரளவேண்டும். மக்கள் எழுச்சியொன்று ஏற்பட வேண்டும்.

எங்கள் உறவினர்கள் செல்கின்றார்கள் எனவே நாங்கள் செல்லவேண்டிய அவசியம் இல்லையென்று  சமாளித்துக்கொண்டு இருந்தால் இந்தப் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியைத் தராது. புலம்பெயர் தேசத்திலுள்ள மக்கள் ஆயிரமாயிரமாய் அணிதிரண்டு செல்லவேண்டும். உங்கள் உறவினர்களையும் அழைத்துக்கொண்டு நீங்கள் செல்லவேண்டும். தாயகத்தில் நாங்கள் படுகின்ற கஸ்டங்களை, தாயகத்தில் எமது மக்கள் படுகின்ற துன்ப துயரங்களைப் போக்குவதற்காக நீங்கள் அங்கே ஒரு நாளை ஒதுக்குங்கள். எங்கள் நிலத்தை மீட்பதற்காக, எங்கள் இலட்சியங்களை வென்றெடுப்பதற்காக, எங்கள் இனத்துவ அடையாளங்களைப் பேணுவதற்காக நீங்கள் அங்கே ஒரு நாளை ஒதுக்குங்கள். அந்த ஒரு நாள்தான் எதிர்வரும் 15 ஆம் திகதி.

உலகம் எங்களைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. போர்க்குற்ற விசாரணை என்ற கோசம் இன்று உரக்க உரைக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை கூட இன்று போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானியா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
இந்தக் களநிலையில், உலகம் பூராகவும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களும் அணிதிரண்டு சென்று தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கின்றபோது அது உலகின் பல நாடுகளை விழிக்கச் செய்யும். ஐ.நாவின் கதவுகளை அகலத் திறக்கும்.
எனவே, எங்கள் அன்புக்குரிய புலம்பெயர் உறவுகளே, எமது மக்களுக்காக, உங்களுக்காக, உங்கள் உறவுகளுக்காக நடத்தப்படுகின்ற 15 ஆம் திகதிப் போராட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டு எமது விடுதலை முரசை உரக்க அறையுமாறு வன்னி மக்கள் ஒன்றியம் உங்களை அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றது.
நன்றி
வன்னி மக்கள் ஒன்றியம்,
கிளிநொச்சி.
08.09.2014

No comments:

Post a Comment