July 26, 2014

மன்னாரில் சீட்டுபிடித்து பணமோசடியில் ஈடுபட்டவர் குடும்பத்துடன் தலைமறைவு!

மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் வசித்துவரும் பிரபல வர்த்தகர் ஒருவர் பணமோசடியில் ஈடுபட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளமை
குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் கா வல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த வர்த்தகர் மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதியில் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றைநடத்தி வந்துள்ளார். பின்னர் ஹாட்வெயார் உற்பட பல வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததோடு சீட்டு பிடிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இவரை நம்பி அதிகளவான வர்த்தகர்கள்,அரச தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இவரிடம் சீட்டு போட்டிருந்தனர். சில ஆண்டுகளாக குறித்த சீட்டு பிடிக்கும் நடவடிக்கைகளும் இடம் பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இவரது வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டதோடு குறித்த நபரும்,அவருடைய குடும்பத்தினருடைய நடமாட்டங்களும் இல்லாமை காணப்பட்டுள்ளது.
-இதனை அவதானித்த சீட்டு பிடித்த அங்கத்தவர்கள் இவர் தொடர்பில் அயலவர்களிடம் விசாரித்த போது குறித்த நபர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து குறித்த நபருடைய வீடு மற்றும் வியாபார நிலையங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட தலைமறைவாகியுள்ள நபருக்கு கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் கம்பனி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகைதந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவுசெய்து வருகின்றனர்.குறித்த நபர் பல கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவாகியிருக்க கூடும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment