May 28, 2014

தஞ்சம் கோரிகளை சுவிஸ் இலங்கைக்கு திருப்பியனுப்ப நிலவிய தற்காலிக தடை நீக்கம்!

சுவிட்சர்லாந்தில் தஞ்சக் கோரிக்கை தோல்வியடைந்தவர்களை இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கையில் நிலவிய தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையிலிருந்து வந்து தஞ்சம் கோரி தோல்வியடைந்தவர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து வருவதாக மத்திய அரசின் குடியேறிகளுக்கான அலுவலகத்தின் பேச்சாளர் சிலீன் கோல்ப்ராத் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.
ஆனாலும், திருப்பி அனுப்பப்படுவதற்கு இருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டதன் மூலம், தஞ்சக் கோரிக்கை தோல்வியடைந்த எல்லோருமே இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கருத முடியாது என்றும் சிலீன் கோல்ப்ராத் கூறினார்.
இலங்கையின் நிலைமைகள் குறித்து தாங்கள் 'அறிந்திருப்பதாகவும் தமக்கும் கவலைகள் இருப்பதாகவும்' அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தஞ்சக் கோரிக்கையாளர்கள் சுமார் 2000 பேர் வரையில் இருப்பதாக ஜெனீவாவிலுள்ள இலங்கை ஊடகவியலாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுனந்த தேஷப்பிரிய பிபிசியிடம் கூறினார்.
இலங்கையின் மனித உரிமை நிலவரங்களை விமர்சித்துவருகின்ற சுவிட்சர்லாந்து அரசு, தோல்வியடைந்த தஞ்சக் கோரிக்கையாளர்களை அங்கு திருப்பியனுப்புவது என்பது முரண்பாடான செயற்பாடு என்றும் சுனந்த சுட்டிக்காட்டினார்.
ஆனால், சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் வெளிநாட்டுக் குடியேறிகள் காரணமாக உள்ளூர் மக்கள் மத்தியில் பெருமளவு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றமையாலேயே தோல்வியடைந்த தஞ்சக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்பும் முடிவுக்கு அரசு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment