August 15, 2016

வவுனியாவுக்கான பொருளாதார மையம் தேக்கவத்தையில்!

வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கு ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் வவுனியா விவசாய சங்கப் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்டத்தை தளமாகக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்று, தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர்களான பி.ஹரிசன், றிசாத் பதியுதீன் ஆகியோர், வவுனியா தேக்கவத்தைக்குச் சென்று பொருளாதார மையத்தை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர்.

பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு தேக்கவத்தை மிகவும் பொருத்தமான இடமென உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு கலந்துரையாடல் வவுனியா கச்சேரியில் இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் 27 ஆம் திகதி அமைச்சர் பி.ஹரிசனுக்கும், விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

பொருளாதார மையத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதெனவும், எவ்வாறான விளைபொருட்களை கொண்டு வருவது எனவும் கலந்துரையாடுவதற்காகவே விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, வவுனியா பொருளாதார மையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதா? அல்லது ஓமந்தையில் அமைப்பதா? என்ற சர்ச்சை ஏற்பட்டதனால் அமைச்சரவையிலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமும் இந்த விடயம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

இறுதியாக ஓமந்தையில் ஒரு பொருளாதார மையமும், வவுனியாவில் இன்னுமொரு பொருளாதார மையமும் அமைப்பது என அறிவிக்கப்பட்டதை அடுத்தே தேக்கவத்தையில் வவுனியாவுக்கான பொருளாதர மையத்தை அமைப்பது என இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பி.ஹரிசன் வவுனியா பொருளாதார மையத்தை அமைப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்து பேதங்கள் நிலவிய போதும், தற்போதுஅவை தீர்க்கப்பட்டு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சுமூகமான தீர்வை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இதற்கான பணிகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம். இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள 200 நிதியை இந்த வருடத்துக்குள் பயன்படுத்த முழுமையான நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.





No comments:

Post a Comment