August 5, 2016

விடுதலைப் புலிகளை ஆதரித்து கருத்து வெளியிட்ட வைகோ நீதிமன்றத்தில்!

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.


இது தொடர்பில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையாகிய அவர், கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 21ஆம் திகதி சென்னை எஸ்பிளனேடு, ராஜா அண்ணாமலை மன்றத்தில், “ஈழத்தில் என்ன நடக்கிறது?’ என்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த வைகோ மற்றும் ம.தி.மு.க முன்னாள் நிர்வாகி கண்ணப்பன் ஆகியோர் விடுதலைப் புலிகளை ஆதரித்து கருத்து வெளியிட்டனர்.

அத்துடன், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்து தெரிவித்ததாக கியூ பிரிவு பொலிஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் வைகோ மீது மாத்திரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட 3ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று வைகோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன் போது அரச தரப்பில் 17 பேர் சாட்சியம் அளித்தனர். அத்துடன், வைகோவிடம் 35 கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லா கேள்விகளுமே விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியது உண்மையா? என்ற வகையில் இருந்தது.

அவற்றுக்கு, “ஆமாம் உண்மைதான் ஆனால், ஒருபோதும் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, ஒருமைப்பாட்டிற்கு எதிராகவோ பேசவில்லை’ என்று வைகோ பதிலளித்தார்.

இதனையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை எதிர்வரும் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதேவேளை, நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வைகோ, கூட்டத்தில், “ஈழத்தில் விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசும், அதற்கு உடந்தையாகச் செயல்படும் தமிழக அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

கண்ணப்பன் பேசிய அதே கருத்துகளை வலியுறுத்திதான் நானும் பேசினேன். கண்ணப்பன் விடுவிக்கப்பட்டுள்ளார் ஆனால், தன் மீது மட்டும் தேசத் துரோக குற்றச்சாட்டாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment