August 18, 2016

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றியிருந்தால் பாரிய போர்க்குற்றமாகும்- சிவமோகன்!

முன்னாள் போராளிகள் மீது விஷ ஊசி ஏற்றப்பட்டிருந்தால் அது மிகவும் பாரிய போர்க்குற்றமாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.


புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகள் மீது விஷ ஊசி ஏற்றப்பட்டதாக பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இதில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சகல முன்னாள் போராளிகளுக்கும் விஷ ஊசி ஏற்றப்படுவதென்பது சாத்தியமான ஒன்றல்லவென குறிப்பிட்ட சிவமோகன், ஒரு சிலருக்கேனும் அவ்வாறு ஏற்றப்பட்டிருக்குமாயின் அது பாரிய குற்றமாகுமென சுட்டிக்காட்டினார்.

மேலும் விஷ ஊசி தொடர்பில் சகல போராளிகளும் அச்சமடைய தேவையில்லையென தெரிவித்த சிவமோகன், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை வட மாகாண சபை கோரியுள்ள நிலையில் அந்தந்த பிரதேசத்தில் உள்ள பிரதி மாகாண சுகாதார பணிமனையில் அல்லது விரும்பினால் சுகாதார அமைச்சிலும் விபரங்களை பதிவுசெய்யலாமென குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் உரிய ஆதாரங்களை சேகரித்துக்கொண்டு இவ்விடயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டென சிவமோகன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment